Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 10 ஜூலை, 2024

வேத சாட்சிகளான ஏழு பரிசுத்த சகோதரர்களின் திருநாள்


 ஜுலை 🔟ம் தேதி

வேத சாட்சிகளான ஏழு பரிசுத்த சகோதரர்களின் திருநாள்

ஜனுவாரியுஸ், ஃபெலிக்ஸ்,ஃபிலிப், சில்வன், அலெக்சாண்டர், விடாலிஸ்,மார்டியாலிஸ் என்கிற ஏழு பரிசுத்த சகோதரர்களின் தாயார் அர்ச்.ஃபெலிசிடாஸ், ஒரு பக்தியுள்ள பணக்கார கிறீஸ்துவ விதவையாயிருந்தாள். இவள் தேவசிநேகத்திற்கடுத்த பிறர்சிநேக அலுவல்களில் மிக தீவிரமாக ஈடுபட்டு அநேக ஏழைகளையும் நோயாளிகளையும் பராமரித்து பணிவிடை புரிந்து வந்தாள்; இவள் தன்னுடைய இந்த மிகச்சிறந்த பிறர்சிநேக அலுவல்களால் அநேக அஞ்ஞானிகளை மனந்திருப்பி கத்தோலிக்க வேதத்தில் சேர்த்தாள்.
இதைக் கண்டு பொறாமைகொண்ட அஞ்ஞான உரோமைப் பூசாரிகள், உரோமை சக்கரவர்த்தியான மார்குஸ் அவுரேலியுஸிடம், அர்ச்.ஃபெலிசிடாஸைப் பற்றி முறையிட்டனர்: இப்பெண்மணி, உரோமையர்களில் அநேகரை கிறீஸ்துவர்களாக்கியதால், உரோமைக் கடவுள்கள் உரோமாபுரியின் மீது கோபமாயிருக்கின்றன; ஆகவே, ஃபெலிசிடாசும் அவளுடைய குடும்பத்தினரும்,  இக்கடவுள்களின் கோபத்தை அமர்த்த பகிரங்கமாக  உரோமைக் கடவுள்களுக்கு பலி செலுத்தவேண்டும்!  அதற்காக அக்குடும்பத்தை நிர்ப்பந்திக்க வேண்டும்! என்று கூறினர். 
உடனே சக்கரவர்த்தி, உரோமை ஆளுநனான புப்ளியுசிடம், இக்காரியத்தை உடனே கவனிக்கும்படி கட்டளையிட்டான். உயர்குல பெண்மணியான அர்ச்.ஃபெலிசிடாசிடம் இந்த ஆளுநன் உயர்ந்த மதிப்பு கொண்டிருந்தான். சக்கரவர்த்தியின் இந்த கட்டளையைப் பற்றி அவளுக்கு எடுத்துக்கூறி, எப்படியாவது, உரோமை விக்கிரகங்களுக்கு பலிசெலுத்தி விட்டு தப்பித்துக்கொள்ளம்படி ஆலோசனை கூறினான். ஆனால், அர்ச்.ஃபெலிசிடாஸ், சிறிதளவும் அஞ்சாமல்,  “நானும் என் மகன்களும் எங்கள் சத்திய வேதத்தின் விசுவாசத்தை ஒருபோதும் புறக்கணிக்கமாட்டோம்; கைவிடமாட்டோம்; அதில் உறுதியாக இருப்போம்! எங்கள் ஆண்டவர் திவ்ய சேசுகிறீஸ்துநாதர்சுவாமிக்காகக் கொல்லப்பட்டு இறந்தால், என் மகன்கள் , நித்திய மோட்சப் பேரின்ப பாக்கியத்தை அடைவார்கள்; நித்திய ஜீவியத்தை ஜீவிப்பார்கள். ஆனால், அவர்கள் ஒருவேளை பசாசுகளான உங்கள் தெய்வங்களுக்குப் பலிசெலுத்துவார்களேயாகில், நித்திய நரகத்தின் கதியையே அவர்கள் அடைவார்கள்” என்று ஸ்திரமான குரலில் கூறினாள். இருப்பினும் , மனம் மாறுவதற்கு, புப்ளியுஸ், ஒரு நாள் அவகாசம் கொடுத்தான். அடுத்த நாள் மார்ஸ் விக்கிரகத்தின் கோவிலுக்குச் சென்று, நீதிபதியின் ஆசனத்தில் அமர்ந்தான்; ஃபெலிசிடாசும் , அவளுடைய ஏழு குமாரர்களும், வரவழைக்கப்பட்டனர். அஞ்ஞான விக்கிரகங்களை வழிபடும்படி அவர்களுக்குக் கூறினான்.
அர்ச்.ஃபெலிசிடாஸ், தன் ஏழு மகன்களிடம், “என் பிரிய மகன்களே! அந்த கொடுங்கோலனை நோக்கிப் பார்க்காதீர்கள்!  ஆனால், உங்கள் கண்களை பரலோகத்தை நோக்கி உயர்த்துங்கள்! இதோ! அங்கேயிருக்கிற உங்கள் சர்வேசுரனும் இரட்சகருமான  திவ்ய சேசுகிறீஸ்துநாதர் சுவாமியை நோக்கிப் பாருங்கள்! “ என்று கூறினாள். அரச கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் அதை மீறவும் தன் முன்பாகவே, தன் மகன்களுக்கு, ஃபெலிசிடாஸ் கூறுவதைக் கேட்டதும், புப்ளியுஸ் சீறிப்பாய்ந்தான்; உடனே ஃபெலிசிடாஸை தடிகளால் கொடூரமாக் காட்டமிரான்டித்தனமாக அடிக்கும்படி கட்டளையிட்டான்; பின்னர் அவளுடைய மகன்களில் ஒவ்வொருவராக கூப்பிட்டான்; அஞ்ஞான விக்கிரகங்களுக்கு பலி செலுத்த நயமாகப் பேசி அவர்களை சம்மதிக்க பெருமுயற்சி செய்தான்; ஆனால், ஏழு சகோதரர்களும், சத்திய கத்தோலிக்க வேத விசுவாசத்தில் ஸ்திரமாக நின்றனர்: பரிசுத்த தைரியத்துடன் ஏக பரிசுத்த அப்போஸ்தலிக்க கத்தோலிக்க விசுவாசத்தை பகிரங்கமாக உச்சாரணம் செய்தனர்! இத்தகைய தன்னிகரற்ற உன்னதமான வீரத்துவத்தை இதுவரை பார்த்திராத புப்ளியுஸ் மாபெரும் திகைப்பில் ஆழ்ந்தான். நடந்தவற்றையெல்லாம், அவன் சக்கரவர்த்தியிடம் தெரிவித்தான். கொடுங்கோலனான சக்கரவர்த்தி, ஃபெலிசிடாஸையும் அவளுடைய மகன்கள் எல்லோரையும் கொன்று போட கட்டளையிட்டான்.
அர்ச்.ஜனுவாரியுஸ், இரும்புகுண்டுகளாலான சாட்டைகளால் இறந்துபோகும் வரை அடிக்கப்பட்டார்;ஃபெலிக்ஸ் மற்றும் ஃபிலிப் ஆகிய இருவரும் தடிகளால் அடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்; சில்வானுஸ், உயரமான இடத்திலிருந்து கீழே தள்ளப்பட்டுக் கொல்லப்பட்டார். அலெக்சாண்டர், விடாலிஸ், மார்டியாலிஸ் ஆகிய மூவரும், வாளால் தலை வெட்டிக் கொல்லப்பட்டார்கள். இவ்விதமாக, ஏழு சகோதரர்களும் வேதசாட்சி முடியைப் பெற்றுக் கொண்டனர். அர்ச்.ஃபெலிசிடாஸ், சிறையில் அடைக்கப்பட்டு, 4 மாத காலம் சகல கொடிய உபாதைகளையும் அனுபவித்தபிறகு, 164ம் வருடம் தலைவெட்டிக் கொல்லப்பட்டாள். வேதசாட்சி முடியைப் பெற்று தன் குமாரர்களுடன் நித்தியப் பேரின்ப பாக்கியத்தை அடைந்தாள்.

வேதசாட்சிகளான ஏழு பரிசுத்த சகோதரர்களே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!

அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக