Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 7 ஜூலை, 2024

June 6 - வேதசாட்சியான அர்ச். தாமஸ் மூர் (St. Thomas Moore)

ஜுலை 0️⃣6️⃣ம் தேதி

வேதசாட்சியான அர்ச். தாமஸ் மூர்



இவர் 1478ம் வருடம், பிப்ரவரி 7ம் தேதியன்று, லண்டன் மில்க் தெருவில் பிறந்தார். இவருடைய தந்தை சர் ஜான் மூர். இவர் மிக திறமையான வக்கீலாகவும் பின்னர் நீதிபதியாகவும் இருந்தார். தாமஸ், அக்காலத்தில் லண்டனிலிருந்த மிகச் சிறந்த பள்ளிக்கூடங்களில் ஒன்றான அர்ச்.அந்தோணியார் பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்றார்; 1490ம் வருடத்திலிருந்து, இவர், 1492ம் வருடம் வரை கான்டர்பரி அதிமேற்றிராணியாரும், இங்கிலாந்தின் சான்சலருமான வந்.ஜான் மோர்டன் ஆண்டகையின் இல்லத்தின் உள்அலுவல்களைக் கவனிக்கிற அலுவலராகப் பணிபுரிந்தார். பின், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வி படித்துவிட்டு, லண்டனில் வக்கீலாக வேலை பார்த்தார்; இதுவே, இவரை இவருடைய 26வது வயதில், பாராளுமன்றத்திற்குக் கொண்டு போய் விட்டது.

1516ம் வருடம், இவர், “கற்பனை உலகம்” என்ற அர்த்தத்தில் “உடோபியா” என்கிற உலகப் புகழ் பெற்ற புத்தகத்தை எழுதினார்;  இது, இங்கிலாந்து அரசனான 8ம் ஹென்றியை மிகவும் கவர்ந்தது. அரசன்,  இவரை அரண்மனையில், பல்வேறு உயர்பதவியில் அமர்த்தினான்; இறுதியில், 1529ம் வருடம், 8ம் ஹென்றி அரசன் இவரை இங்கிலாந்தின் சான்சலராக நியமித்தான்.

1530ம் வருடம் எட்டாம் ஹென்றியின் முதல் மனைவியான ஆரகன் நாட்டின் கத்தரீனுடனான திருமணத்தை இரத்து செய்ய அனுமதிக்கும்படி பாப்பரசரிடம் விண்ணப்பம் கோரி எழுதப்பட்ட கடிதத்தில் இவர் கையெழுத்திட மறுத்தார்; இந்த கடிதத்தை இங்கிலாந்திலுள்ள திருச்சபை அதிகாரிகளும் நாட்டின் உயர்அதிகாரிகளும் எழுதியிருந்தனர். பாப்பரசர் மற்றும் இங்கிலாந்து அரசன் இருவருடைய அதிகாரங்களுக்கிடையே எது உயர்ந்த அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது என்பதின்பேரிலான முரண்பாடான கருத்து உச்சக்கட்டத்தை அடைந்தபோது,தாமஸ், அர்ச்.இராயப்பரின் ஸ்தானத்தில், அவருடைய வழியில் வந்த திருச்சபையின் தலைவரான அர்ச்.பாப்பானவருக்கு ஆதரவாக இருந்தார்; பாப்பரசரே, இங்கிலாந்து நாட்டு அரசனை விட அதிக அதிகாரத்தைக் கொண்டவர் என்பதின் பேரில் உறுதியான தீர்மானத்துடன் தாமஸ் இருந்தார்.

1531ம் வருடம், 8ம் ஹென்றி, தாமஸை தனிமைப்படுத்தி தனியாக வைத்தான்; பின்னர், பாப்பரசருக்கு ஆதரவளித்த எல்லா மூத்த திருச்சபை அதிகாரிகளையும், அகற்றினான்; மேலும், பாப்பரசருக்கு இங்கிலாந்தின் மீது எந்த அதிகாரமும் இல்லை என்ற தனது தப்பறையான நிலைப்பாட்டை, உறுதிப்படுத்தும்படியாக, 8ம் ஹென்றி, இங்கிலாந்து திருச்சபை அதிகாரிகள் உரோமையிலிருக்கும் பாப்பரசருக்கு எந்த விண்ணப்பத்தையும் அனுப்பக்கூடாது என்பதன் பேரிலான ஒரு தடைச் சட்டத்தை , இயற்றினான்.

1534ம் வருடம், பாப்பரசர் அரசர்கள் மீது அதிகாரம் கொண்டிருக்கிறவர் என்கிற திருச்சபையின் போதனையில் உறுதியாக இருந்த தாமசும், இவருடைய நண்பரும் மேற்றிராணியாருமான அர்ச்.ஜான் ஃபிஷரும்,  இங்கிலாந்தில் திருச்சபைக்குத்  தலைவராக தன்னையே பிரகடனம் செய்த அரசன் 8ம் ஹென்றியின் தலைமை அதிகாரத்தை ஏற்க மறுத்தனர்; மேலும் பகிரங்கமாக அரசனுடைய முதல் மனைவி கத்தரீனுடனான திருமணம் இரத்தானதை இருவரும், ஏற்க  மறுத்தனர். ஆகையால் இருவரும் கைது செய்யப்பட்டு,லண்டன் கோபுரத்தில் அடைக்கப்பட்டனர்!

15 மாதங்களுக்குப் பிறகு, அர்ச்.ஜான் ஃபிஷர் மேற்றிராணியார் வேதசாட்சியாகக் கொல்லப்பட்ட 9 நாட்களுக்குப் பிறகு, அர்ச்.தாமஸ் மூர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு, தேசத் துரோகி என்று தீர்ப்பிடப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. அர்ச்.தாமஸ் முர்,  தனக்கெதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று நிரூபித்தார்! பின் நீதிமன்றத்தில், “உங்கள் கருத்திற்கு சாதகமாக ஒரு மேற்றிராணியார் இருந்தால், என் கருத்திற்கு சாதகமாக நூற்றுக்கணக்கான அர்ச்சிஷ்டவர்கள்  இருக்கின்றனர்! உங்களுக்கு சாதகமாக ஒரு பாராளுமன்றம் இருந்தால்,  ஆயிரம் வருட காலமாக திருச்சபையில் நிகழ்ந்த எல்லா பொதுச்சங்கங்களும் எனக்கு ஆதரவாக இருக்கின்றன” என்று எல்லோர் முன்பாகவும் அர்ச்.தாமஸ் மூர் கூறினார்.  பின்னர் தூக்கு மேடையில்,  இவருடைய தலையை வெட்டிக் கொல்லப் படுவதற்கு முன்னதாக, தன் மரண தண்டனையைக் காண வந்த மக்களிடம், ‘நான் அரசனுடைய நல்ல ஊழியனாயிருந்தேன்! ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, முதலில் சர்வேசுரனுடைய நல்ல ஊழியனாக இருக்கிறேன்” என்று கூறினார்.

அர்ச்.தாமஸ் மூர் 1535ம் வருடம் ஜுலை 6ம் தேதி  தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார். லண்டன் கோபுரத்தில், அர்ச்.இராயப்பர் சிற்றாலயத்தில் ஒரு அடையாளம் குறிக்கப்படாத கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். தேச துரோகிகள் கொல்லப்படும்போது, இங்கிலாந்தில் கொல்லப்பட்டவர்களின் தலைகளை லண்டன் பாலத்தில் ஒரு கோலின் மேல் குத்திக் காட்சிக்கு வைத்திருப்பது வழக்கம். அந்த வழக்கத்தின்படி, ஒரு மாத காலம் அர்ச்.தாமஸ் மூரின் தலை லண்டன் பாலத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. பின்னர்,அது, தேம்ஸ் நதியில் எறியப்படுவதற்கு முன்னதாக, அர்ச்.தாமஸ் மூரின் மகள், மார்கிரட் ரூபர், அர்ச்சிஷ்டவரின் பரிசுத்த தலையை மீட்டு, பத்திரமாக பூஜிதமாக அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தாள்.  இப்போது, கான்டர்பரியிலுள்ள அர்ச்.டன்ஸ்டன் தேவாலயத்திலுள்ள ரோபர் பாதுகாப்புப் பெட்டகத்தில் அர்ச்.தாமஸ் மூரின் பரிசுத்தத் தலை பாதுகாக்கப்பட்டு வருகிறது! அர்ச்.தாமஸ் மூர் ஜீவிய காலத்தில்  அணிந்திருந்த மயிர்ச்சட்டை, தெற்கு பிரன்ட் அருகிலுள்ள சியோன் துறவற மடத்தில் பாதுகாக்கப்படுகிறது.

13ம் சிங்கராயர் பாப்பரசர் 1886ம் வருடம் டிசம்பர் 29ம் தேதி இவருக்கு முத்திப்பேறு பட்டம் அளித்தார்; 11ம் பத்திநாதர் 1935ம் வருடம் 19ம் தேதியன்று இவருக்கு அர்ச்சிஷ்டப்பட்டமளித்தார்.


அர்ச். தாமஸ் மூரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!🌹

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக