ஜுலை 5ம் தேதி
மிலான் நகர அப்போஸ்தலரும் ஸ்துதியருமான அர்ச்.அந்தோணி மேரி சக்கரியா
lஅர்ச்.அந்தோணி மேரி சக்கரியா இத்தாலியில் கிரமோனா நகரில் ஓர் உயர்ந்த குடும்பத்தில் 1502ம் வருடம் பிறந்தார்; அதே நாளில், கிரமோனா கதீட்ரலில் ஞானஸ்நானம் பெற்றார்; இவருக்கு 2 வயதானபோது, இவருடைய தந்தை இறந்தார்; இவரை வளர்ப்பதும்; இவருக்குக் கல்வி கற்பிப்பதும் இவருடைய தாயாரின் பொறுப்பில் இருந்தது; சிறிய வயதிலிருந்தே, இவருடைய தாயார், ஏழைகள் மேலும் துன்புறுகிறவர்கள் மேலும் இரக்கமுள்ளவராக இவரை வளர்த்தார்கள்; இவரை ஏழைகளுக்கு தாராளமாகத் தர்மம் செய்கிறவராக உருவாக்கினார்கள்.
கதீட்ரலை ஒட்டியிருந்த பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்றார்; பேவியா நகர பல்கலைகழகத்தில் தத்துவ இயலைப் பயின்றார்; 1520ம் வருடம், பதுவா நகர பல்கலைக்கழகத்தில், மருத்துவப் படிப்பைத் துவக்கினார்; 22வது வயதில், மருத்துவப் பட்டம் பெற்று, மருத்துவரானார்; கிரமோனாவில் மூன்று வருட காலம் மருத்துவராக பணியாற்றினார்.
1527ம் வருடம், குருப்பட்டத்திற்காகப் படித்தார்; 1529ம் வருடம் பிப்ரவரி மாதம் குருப்பட்டம் பெற்றார்; நோயாளிகளுக்கும் ஏழைகளுக்கும் பணிவிடை செய்யும் விதமாக, மருத்துவ மனைகளிலும், நிறுவனங்களிலும், உள்ள தேவசிநேகத்திற்கடுத்த பிறர்சிநேக அலுவல்களில், இவர் தன்னையே அர்ப்பணித்தார்; குவாஸ்டல்லாவைச் சேர்ந்த லுடோவிகா டொரெல்லி என்ற சீமாட்டியின் ஞான ஆலோசகராக இவர் நியமிக்கப்பட்டார்; இந்த சீமாட்டியைப் பின்பற்றி, மிலான் நகருக்குச் சென்றார்.
மிலான் நகரில், நித்திய ஞானத்தின் செபக்கூடம் என்கிற துறவற குருக்கள் சபையின் உறுப்பினரானார். இந்த துறவற சபையின் உறுப்பினர்களான சங்.ஃபெராரி மற்றும் சங்.மோர்கியா ஆகிய இரு குருக்களுடன் சேர்ந்து, இவர் அர்ச்.சின்னப்பர் குருக்கள் சபை என்கிற மேற்றிராசன குருக்களுக்கான ஒரு துறவற சபையை ஸ்தாபித்தார்; இச்சபை, பொதுவாக பர்னபைட்ஸ் என்று அழைக்கப்பட்டது; பின்னர், அர்ச்.சின்னப்பருடைய சம்மனசுக்குரிய கன்னியாஸ்திரிகளுக்கான துறவற சபையையும், திருமணமான பொதுநிலையினருக்கான அர்ச்.சின்னப்பர் சபையையும் ஸ்தாபித்தார்.
இவர் வாழ்ந்த காலத்தில் வட இத்தாலி, போரினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளை நோயினாலும், அலைக்கழிக்கப்பட்டு, வறுமையால் பாதிக்கப்பட்டிருந்தது. புராட்டஸ்டன்டு பதிதர்கள், கத்தோலிக்க வேதத்தைத் துவேஷித்து, கத்தோலிக்க வேத விசுவாசத்தின் மீது வெறுப்பை, வட இத்தாலியப் பகுதியில் பரப்பி வந்தனர்; இந்த உபாதனைகள் எல்லாம் இப்பகுதியை மிகுந்த துயரமான நிலைமைக்குக் கொண்டு போயிருந்தன! இதுவே, இவருடைய துறவற சபையின் சேவையை இப்பகுதியில் ஆற்றும்படி மிக வல்லமையுள்ள விதமாக விண்ணப்பிக்கக் காரணமாயிற்று! அர்ச்.அந்தோணி மேரி சக்கரியா, ஐந்து உறுப்பினர்களுடன் துவக்கியிருந்த பர்னபைட்ஸ் துறவற சபைக்கு, 7ம் கிளமென்ட் பாப்பரசர் 1533ம் வருடம் திருச்சபையின் அதிகாரபூர்வ ஒப்புதலை அளித்தார்.
வின்சென்சா என்ற நகரில், தேவாலயங்களில், மகா பரிசுத்த தேவநற்கருணைக்கு நிந்தைப் பரிகாரமாக 40 மணி நேர தொடர் ஆராதனையை பொதுமக்கள் மத்தியில் பிரபல்யமடையச் செய்தார்; உன்னதமானவிதமாக, பகிரங்கமாக மகா பரிசுத்த தேவநற்கருணை ஆடம்பரமாக ஸ்தாபிக்கப்பட்டு, 40 மணி நேரம் இடைவிடாமல் விசுவாசிகளால் ஆராதிக்கப்படும் பழக்கத்தை, இப்பகுதியிலுள்ள தேவாலயங்களில் பரப்பினார்; நமதாண்டவர் சிலுவையில் அறையப்பட்டு மரித்ததை நன்றியறிந்த ஸ்தோத்திரத்துடன் ஞாபகப்படுத்தி சிறிய தேவசிநேக மற்றும் தேவ ஆராதனை முயற்சியை விசுவாசிகள் அனுசரிக்கும் விதமாக தேவாலயங்களில், மத்தியானம் 3 மணிக்கு மணி அடிக்கும் பழக்கத்தையும் துவக்கி வைத்தார்.
1539ம் வருடம், வேதபோதக அப்போஸ்தல அலுவலுக்காக குவாஸ்டல்லாவிற்கு சென்றபோது, இவருக்கு காய்ச்சல் வந்தது; அத்துடன் இவர் இடைவிடாமல் அனுசரித்து வந்த கடினமான தபசும் பரித்தியாகங்களும், இவரை மிகவும் பலவீனமடையச் செய்தன! 1539ம் வருடம் ஜுலை 5ம் தேதியன்று, இவர், 36வது வயதில், பாக்கியமாய் மரித்தார். இவருக்குக் குருப்பட்டம் அளித்த வந்.லூக்கா டி சேரியேட் ஆண்டகை இவருடைய அடக்கச் சடங்கை தலைமையேற்று நடத்தினார்.
அர்ச்.சின்னப்பருடைய சம்மனசுகள் என்ற கன்னியர் மடத்தில் இவருடைய பரிசுத்த சரீரம் அடக்கம் செய்யப்பட்டது; இவர் மரித்து 27 வருடம் கழித்து, புதுமையாக அழியாமலிருக்கிறதைக் கண்டறிந்தனர்! இவருக்கு, 1849ம் வருடம் முத்.9ம் பத்திநாதர் பாப்பரசரால் முத்திப்பேறு பட்டமளிக்கப்பட்டது. இவருக்கு,13ம் சிங்கராயர் பாப்பரசரால், ஆடம்பரமாக உரோமையில், மே 15ம் தேதி, 1897ம் வருடம் அர்ச்சிஷ்டப்பட்டம் அளிக்கப்பட்டது.
இவருடைய அர்ச்.சின்னப்பரின் குருக்கள் துறவற சபையின் தலைமையகமாக, மிலான் நகரிலுள்ள அர்ச்.பர்னபாஸ் தேவாலயம் அளிக்கப்பட்டிருந்தது, என்பது தான், இவருடைய துறவற சபை பர்னபைட்ஸ் என்று அழைக்கப்படுவதற்குக் காரணம்.
ஸ்துதியரான அர்ச்.அந்தோணி மேரி சக்கரியாவே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!
🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக