ஜுலை 2-ம் தேதி
மகா பரிசுத்த தேவமாதா அர்ச். எலிசபெத்தம்மாளை சந்தித்த திருநாள்
இன்று, திருச்சபை தமது திருவுதரத்தில் திவ்ய குழந்தை சேசுவை சுமந்தவர்களாக, மகா பரிசுத்த தேவமாதா, ஆண்டவரின் முன்னோடியான அர்ச்.ஸ்நாபக அருளப்பரை திருவுதரத்தில் சுமந்துகொண்டிருந்த 6 மாத கர்ப்பிணியான தமது உறவினள், அர்ச்.எலிசபெத்தம்மாளை ,சந்தித்த திருநாளைக் கொண்டாடுகிறது.
மகா பரிசுத்த தேவமாதா தமது திருவுதரத்தில் திவ்ய சேசுநாதர்சுவாமியைக் கொண்டவர்களாக அர்ச்.எலிசபெத்தம்மாளை சந்தித்து, அவர்களுடைய வயிற்றிலிருந்த அர்ச்.ஸ்நாபக அருளப்பரை அர்ச்சித்தார்கள்!அவரை ஜென்மப் பாவ தோஷத்திலிருந்து சுத்திகரித்து விடுவித்தார்கள். ஆதலால், அவர் அர்ச்.எலிசபெத்தம்மாளின் வயிற்றில் அக்களிப்பினால் துள்ளினானர். அர்ச்.எலிசபெத்தம்மாள், திவ்ய இஸ்பிரீத்து சாந்துவினால் நிரப்பப்பட்டவர்களாக, “ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் நீரே! உம்முடைய திருவயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டதாமே!” என்று வியந்து கூக்குரலிட்டபடிக்கூறினார்கள்.
அர்ச்.ஸ்நாபக அருளப்பர் பிறந்த திருநாளுக்கு எட்டுநாட்களுக்குப் பின், மகா பரிசுத்த தேவமாதா அர்ச்.எலிசபெத்தம்மாளை சந்தித்த தேவ இரகசிய திருநிகழ்வின் மினவுதல் திருநாளை திருச்சபை ஆடம்பரமாகக் கொண்டாடுகிறது. அர்ச்.ஸ்நாப அருளப்பர் பிறந்த திருநாளுக்குப் பிறகு, இந்த திருநாள் வருவது, நூதனமாக இருக்கிறது. இருப்பினும், அவருடைய பிறந்த திருநாளுக்கு எட்டு நாட்களுக்குள் இந்த திருநாள் வருகிறதால், அர்ச்.ஸ்நாபக அருளப்பரின் பிறந்த திருநாள் எவ்வளவு முக்கியமான தேவ இரகசிய திருநிகழ்வாக இருக்கிறது, என்பதை நமக்குக் காண்பிக்கிறது. ஏனெனில், இம்மினவுதல் திருநாளன்று தான், அர்ச்.ஸ்நாபக அருளப்பரும், அவருடைய தாயாரான அர்ச்.எலிசபெத்தம்மாளும், திவ்ய இஸ்பிரீத்து சாந்துவானவரால் நிரப்பப் பட்டனர்! அதற்கு முன்னதாக, நமதாண்டவர் தாமே, அவருடைய மகா பரிசுத்தப் பேழையான மகா பரிசுத்த தேவமாதாவின் திருவுதரத்திலிருந்து, தமது முன்னோடியான அர்ச்.ஸ்நாபக அருளப்பரை, ஜென்மப் பாவக் கறையிலிருந்து சுத்திகரித்து அர்ச்சித்தார்.
இந்த உன்னதமான திருநாளன்று தான், நம் திவ்ய இரட்சகரும், அவருடைய மகா பரிசுத்த மாதாவும், “ஸ்திரிகளிடத்திலே பிறந்தவர்களுக்குள்ளே ஸ்நாபக அருளப்பரைப் பார்க்கிலும், பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லையென்று , மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று நமதாண்டவராலேயே புகழப்பட்ட அர்ச்.ஸ்நாபக அருளப்பரும் , ஆகிய மூன்று பரிசுத்தர்களும், ஆதாமின் வீழ்ச்சிக்குப் பின் மூன்று மாசற்றவர்களும் ஒன்றாகக் கூடிய தினமாக விளங்குகிறது.
இந்த உன்னத திருநாள் மேலும், மகா பரிசுத்த தேவமாதாவாகிய அர்ச்.கன்னிமரியம்மாளைப் பற்றியும் அவர்கள் யார் என்பதைப் பற்றியும், மிக ஆழமான விதத்தில் நமக்குக் கூறுகிறது: அர்ச்.லூக்காஸ் மகா பரிசுத்த தேவமாதா, அர்ச்.எலிசபெத்தம்மாளைச் சந்தித்ததைப் பற்றி எவ்வாறு விளக்குகிறார் என்பதை, பழைய ஏற்பாட்டில், தாவீதரசர், வாக்குத்தத்தின் பெட்டகத்தை எவ்வாறு சந்திக்கச் செல்கிறார் என்பதன் விவரிப்புடன் ஒப்பிட்டுப்பார்!
“தாவீதும், யூதாவின் புருஷர்களுக்குள் அவனோடு இருந்த ஜனங்களும் எழுந்து, தேவபெட்டகத்தைக் கொண்டு வரும்படி புறப்பட்டார்கள். அந்த பெட்டகங்கெருபீம்களின் நடுவே வீற்றிருக்கும் சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தினாலே, அர்ச்சிக்கப்பட்டதால், கர்த்தர் அதின்மேல் வாசம் பண்ணுகிறார்” (2 அரசர் 6:2-3)
“அந்நாட்களிலே மரியம்மாள் எழுந்து, மலைநாட்டிலே யூதா தேசத்திலுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போனார்கள்” (லூக் 1:39)
“அன்றைய தினம் தாவீது ஆண்டவருக்கு மிகவும் அஞ்சினவனாய், கர்த்தருடைய பெட்டகம், என்னிடத்திலே வருவதெப்படி? என்று கூறினான்” (2 அரசர் 6:9)
“என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் எழுந்தருளிவர எனக்குக் கிடைத்ததெப்படி?!” (லூக் 1:43)
“கர்த்தருடைய பெட்டகம் கேட்டையனான ஓபேதெதோம் வீட்டில் மூன்று மாதம் தங்கியிருக்கையிலே, கர்த்தர், ஓபேதெதோமையும் அவன் வீட்டாரையும் ஆசீர்வதித்தார்” (2 அரசர் 6:11)
“பின்னும் மரியம்மாள்,அவளோடு, ஏறக்குறைய முன்று மாதம் இருந்து, தன் வீட்டுக்குத் திரும்பிப் போனார்கள்” (லூக் 1:56)
“ஆண்டவர் பெட்டகம் தாவீதின் நகரத்திற்குள் பிரவேசமானபோது, சவுலின் குமாரத்தியாகிய மிக்கோல், பலகணிவழியாய், உற்றுப்பார்த்து, தாவீதரசன் கர்த்தருக்கு முன்பாக குதித்துக் கூத்தாடுவதைக் கண்டாள்” (2 அரசர் 6:16)
“அப்போது சம்பவித்தது ஏதெனில், மரியம்மாள் சொன்ன வாழ்த்துதலை எலிசபெத்தம்மாள் கேட்ட மாத்திரத்தில், அவளுடைய உதரத்திலிருந்த பிள்ளை துள்ளிற்று!” (லூக் 1:41).
மேற்கண்ட ஒப்புவமையின்படி, அர்ச்.லூக்காஸ், நம் மகா பரிசுத்த தேவமாதாவை புதிய ஏற்பாட்டின் பரிசுத்தப் பெட்டகமாக நாம் தெளிவாகக் காணும்படி விரும்புகிறார்.
இந்த திருநாள், 1263ம் வருடம் அர்ச்.பொனவெந்தூர் அறிவுரையின்படி, பிரான்சிஸ்கன் துறவியர், முதன் முதலில் கொண்டாடத் துவக்கினர்; பின், இந்த திருநாள், பிரான்சிஸ்கன் துறவியரால் பரப்பப்பட்டு, ஐரோப்பா முழுவதும், கொண்டாடப்பட்டது.
கிபி.1389ம் வருடம், 6ம் உர்பன் பாப்பரசர், மேற்கத்திய பிரிவினையைத் தீர்ப்பதற்காக, எடுத்த முயற்சிகளில் ஒரு பகுதியாக, கிறீஸ்துநாதருடைய தையலில்லாத ஆடையான திருச்சபையை கிழித்த இம்மாபெரும் மேற்கத்திய பிரிவினையை முழுமையாக அகற்றி, அதற்கு முடிவு கட்டி, ஆண்டவரும், மகா பரிசுத்த தேவமாதாவும், திருச்சபையை சந்திப்பார்கள் என்கிற நம்பிக்கையுடன் , இந்த உன்னதத் திருநாளை அகில உலக திருச்சபையின் திருவழிபாட்டின் காலண்டரில், ஜுலை 2ம் தேதியன்று சேர்த்தார். பின்னர், 1849ம் வருடம், பசாசின் இரகசிய சபையினருடைய புரட்சியின் மீது , திருச்சபை வெற்றியடைந்ததன் காரணமாக, 9ம் பத்திநாதர் பாப்பரசர், இந்த திருநாளை, இரட்டிப்பான இரண்டாம் தரத் திருநாளாக உயர்த்தினார்.
அர்ச். அத்தனாசியாருடைய வார்த்தைகளால் ஜெபித்து, மகா பரிசுத்த தேவமாதாவின் உன்னத மாட்சிமிக்க பேரழகின் ஆழங்களை உணர்ந்து கொள்! நமக்காக தமது திவ்ய குமாரனிடம் பரிந்துபேசும்படி மகா பரிசுத்த தேவமாதாவை நோக்கித் திரும்புவோமாக!
அர்ச். அத்தனாசியார் ஜெபம்:
“ஓ! மகா உன்னத திவ்ய கன்னிகையே! உண்மையாகவே, தேவரீர் மற்ற எல்லா மகத்துவத்துக்கும் மேலானவர்களாக திகழ்கிறீர்!
ஏனெனில், ஓ! தேவ வார்த்தையானவரான சர்வேசுரனின் தங்கும் வாசஸ்தலமே! மகத்துவத்தில், உமக்கு சமமானவர் யார்? சகல சிருஷ்டிகளுக்குள்ளே, ஓ! மகா பரிசுத்த திவ்ய கன்னிகையே! நான் யாருடன் தேவரீரை ஒப்பிடுவேன்? அவர்கள் எல்லாரையும் விட தேவரீர் மகா பெரியவர்களாயிருக்கிறீர்! தங்கத்திற்கு பதிலாக, பரிசுத்தத்தனத்தினால் உடுத்தப்பட்ட ஓ! வாக்குதத்தத்தின் பெட்டகமே! மெய்யான மன்னாவைக் கொண்டிருக்கும் தங்கப் பாத்திரம் இருக்கிற பெட்டகமாக , அதாவது தேவத்துவம் தங்கி வாசம் செய்யும் மகா பரிசுத்த மாமிசப் பெட்டகமாக தேவரீர் திகழ்கிறீர்!”
July - 1
#Visitation of Our Lady, #St. Elizabeth, #Visitation,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக