மறை ஆயர் அல்லாத வேதசாட்சி ஒருவர்--பொது
(In Virtute)
வருகைப் பாடல்: சங்.20:2,3.
ஆண்டவரே, உமது வல்லமையில் நீதிமான் மகிழ்ச்சிகொள்வான்: உமது மீட்பை முன்னிட்டு மிகவும் அக்களிப்பான்: அவன் இதயத்தின் ஆவலை நிறைவு செய்தீர். (சங்.20:4) ஏனெனில், இனிய ஆசிகளுடன் அவரை எதிர்கொண்டு அழைத்தீர்: அவரது தலையில் மணிமுடி சூட்டினீர். V. பிதாவுக்கும் ... ஆண்டவரே.
சபை மன்றாட்டு:
செபிப்போமாக எல்லாம் வல்லசர்வேசுரா, உம்முடைய வேதசாட்சி அர்ச்.... வானகப் விழாவைக் கொண்டாடுகிற நாங்கள், அவரது வேண்டுதலால் உமது திருப் பெயரின் அன்பில் உறுதிபெறச் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். உம்மோடு..
ஞானாகமத்திலிருந்து வாசகம்
(ஞானா.10:10-14)
ஆண்டவர் நீதிமானை நேர் வழியாய்க் கூட்டிப்போய், அவனுக்குச் சர்வேசுரனுடைய இராச்சியத்தைக் காண்பித்து, அவனுக்குப் பரிசுத்தருடைய அறிவைத் தந்து, அவன் தன் வேலைகளால் வெகு இலாபமும் சம்பாவனையும் அடையும்படி செய்ததுமன்றி, அவனை மோசஞ் செய்யத் தேடினவர்களிடத்தினின்று அவனை மீட்டு அவனை ஆஸ்திவந்தனாக்கினார். அவர் சத்துராதிகளினின்று அவனைக் காப்பாற்றித் துன்மார்க்கரினின்று அவனைப் பாதுகாத்து பலமான யுத்தத்தில் அவன் ஜெயங்கொள்ளவும், சகலத்தையும் விட ஞானமே வலிமையுள்ளதென்று அறிந்துகொள்ளவுஞ் செய்தார். அது விற்கப்பட்ட நீதிமானை விட்டுவிட்ட தில்லை; பாவிகளிடத்தினின்று அவனை மீட்டது. அவனுடன் பாழுங் கிணற்றில் இறங்கினது. அவர், சிறையிலிருந்த அவனுக்கு அரச செங்கோலைக் கையில் வைத்து, அவனை உபாதித்தவர்களை அவன் வசமாக்கினதுமன்றி குற்றஞ் சாட்டினவர்களைப் பொய்யர் என்று காண்பித்து அவனுக்கு நித்திய மகிமையைத் தந்தார் ஆண்டவராகிய நம் சர்வேசுரன்.
தியானப் பாடல்: சங். 111 :1-2.
ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவன் பேறுபெற்றோன்: அவர் கட்டளை பெரிதும் விரும்புவான். V. அவன் சந்ததி நாட்டில் வலிமை பெற்றிருக்கும். நேர்மனத்தோரின் தலைமுறை ஆசிபெற்றிருக்கும்.
அல்லேலூயா, அல்லேலூயா. V. (சங்.20:4). ஆண்டவரே, அவரது தலையில் மணிமுடி சூட்டினீர். அல்லேலூயா.
(முன்தவக் காலத் துவக்கத்திலிருந்து அல்லேலூயாவுக்குப் பதிலாக)
நெடும் பாடல்: சங். 20 : 3.4.
அவன் இதயத்தின் ஆவலை நிறைவு செய்தீர் : இவனுடைய விண்ணப் பத்தை நீர் புறக்கணிக்கவில்லை. V.ஏனெனில், இனிய ஆசிகளுடன் அவரை எதிர்கொண்டு அழைத்தீர். V. அவரது தலையில் மணிமுடி சூட்டினீர்.
மத்தேயு எழுதிய பரிசுத்த சுவிசேஷத்தின் தொடர்ச்சி
(மத்.10:34-42)
அக்காலத்தில்: யேசு தம் சீடர்களுக்குச் சொன்னதாவது: ' உலகிற்குச் சமாதானம் கொணர வந்தேன் என்று நினைக்கவேண்டாம். சமாதானத்தை அன்று, வாளையே கொணர வந்தேன். தந்தைக்கு எதிராக மகனையும், தாய்க்கு எதிராக மகளையும், மாமிக்கு எதிராக மருமகளையும் பிரிக்க வந்தேன். தன் வீட்டாரே தனக்குப் பகைவர். என்னை விடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்குத் தகுதியற்றவன். என்னைவிடத் தன் மகனையோ மகளையோ அதிகம் நேசிக்கிறவனும் எனக்குத் தகுதியற்றவன். தன் சிலுவையை ஏற்றுக்கொண்டு, என்னைப் பின்செல்லாதவன் எனக்குத் தகுதியற்றவன். தன் உயிரைத் தேடி அடைபவன் அதை இழப்பான். எனக்காகத் தன் உயிரை இழப்பவனோ அதைக் கண்டடைவான். உங்களை ஏற்றுக்கொள்பவன் என்னை ஏற்றுக்கொள்கிறான். என்னை ஏற்றுக்கொள்பவனோ, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறான். தீர்க்கதரிசியைத் தீர்க்கதரிசியாக ஏற்றுக்கொள்பவன் தீர்க்கதரிசியின் கைம்மாறு பெறுவான். நீதிமானை நீதிமானாக ஏற்றுக்கொள்பவன் நீதிமானுடைய கைம்மாறு பெறுவான். சீடன் என்பதற்காக இச்சிறியவருள் ஒருவனுக்கு ஒரே ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவனும் கைம்மாறு பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
காணிக்கைப் பாடல்: சங். 8: 6-7
மகிமையையும் பெருமையையும் அவருக்கு முடியாகச் சூட்டினீர்: ஆண்டவரே உம்முடைய கைவேலைகள் மீது அவருக்கு அதிகாரம் அளித்தீர்.
காணிக்கை மன்றாட்டு:
ஆண்டவரே, எங்களுடைய கொடைகளையும் வேண்டுதலையும் ஏற்றருளும். இத்தெய்வீகச் சடங்குகளால் எங்களைத் தூய்மையாக்க, எங்களுக்குக் கருணையுடன் செவிசாய்த்தருள் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். உம்மோடு
திருவிருந்துப் பாடல்: மத் 16:24
என்னைப் பின்பற்ற விரும்புகிறவன் தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்து என்னைப் பின் தொடரட்டும்.
நன்றி மன்றாட்டு :
செபிப்போமாக: எங்கள் ஆண்டவராகிய சர்வேசுரா, நாங்கள் உம் புனிதர்களுடைய நினைவை இம்மையில் கொண்டாடி மகிழ்வதுபோல, மறுமையில் அவர்களைக் கண்டு மகிழுமாறு உம்மை அருள் புரிய வேண்டுமென்று மன்றாடுகிறோம். உம்மோடு...(1)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக