Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 23 டிசம்பர், 2022

திரிகால ஜெபத்தின் வல்லமை




"இவர் (சேசுநாதர்) மனிதராகிய நமக்காகவும், நம்முடைய இரட்சண்யத்துக்காகவும் பரலோகத்திலிருந்து இறங்கினார் ...” 

விசுவாசப் பிரமாணம்.


சேசு மரி சூசையில் மிகவும் பிரிமுள்ள வாசகர்களே! மேலே குறிப்பிட்டுள்ள வாக்கியமானது சர்வேசுரனுடைய இரட்சண்யத் திட்டத்தை விளக்குவதாக உள்ளது. இதனையே தான் திரிகால ஜெபமாக மூன்று வேளைகளில், நாம் நினைவில் கொள்ள திருச்சபை அழைக்கிறது. இந்த ஜெபம் இரண்டு போதனைகளை நமக்குக் கற்பிக்கிறது. இரண்டு இடங்களுக்கு மனதளவில் நாம் சென்றால் இதனைப் பற்றிய சர்வேசுரனுடைய திட்டங்கள் நமக்கு உணர்த்தப்படும்.

ஏதேன் தோட்டத்தில் ஆங்காரம் மற்றும் கீழ்ப்படியாமையால் பாவம் செய்து விட்ட நமது ஆதிப் பெற்றோர்களை கடவுள் அப்படியே விட்டுவிடவில்லை. இரக்கம் நிறைந்த அவர் மனித குல மீட்புத் திட்டத்தை அறிவித்தார். அது மாதாவின் அமல உற்பவத்தில் தொடங்கப்பட்டு, சேசுநாதர் சுவாமியின் பிறப்பிலும், இறுதியாக கல்வாரி சிலுவைப் பலியிலும் நிறைவுபெறுகிறது. ஆங்காரத்திற்கும், கீழ்ப்படியாமைக்கும் மாற்றுத்திட்டம், தாழ்ச்சியிலும், கீழ்ப்படிதலிலும் உள்ளது. நாசரேத்தூரில் இதே புண்ணியங்கள், தேவதாயிடம் நிறைவாகக் காணப்பட்டது. மங்கள வார்த்தை நிகழ்வில் நாம் கண்டுணர்கிறோம்.

சர்வேசுரனுடைய மகிமையை, நீதியைப் பறைசாற்றும் அவருடைய இரட்சண்யத் திட்டமானது சேசு, மரியாயின் கீழ்ப்படிதல் மற்றும் தாழ்ச்சியால் நிறைவு செய்யப்படுகிறது. இந்த இரு புண்ணியங்களையும், இவைகளுக்கு அடிப்படையான தேவ சம்பந்தமான புண்ணியங்களையும் விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம்) நாம் கடைப்பிடித்து, சேசுவுடைய இரட்சண்யத்தை நமதாக்கிக் கொள்ளும் வழியை திரிகால ஜெபம் நமக்குக் கற்றுத் தருகிறது.

தேவதாயுடன் இணைந்த அதன் படிப்பினையைப் புரிந்து பக்தியுடன் இந்த ஜெபத்தைச் சொல்லும் போது சர்வேசுரனும், அவரது திருத்தாயாரும் மகிமைப் படுத்தப்படுகிறார்கள். இரட்சண்யத் திட்டத்தின் பலன்கள் நமதாக்கப்படுகின்றன. இந்த ஆகமன காலம் முதல் இந்த ஜெபத்தின் அருமையை நாம் புரிந்து கொண்டு தேவதாயுடன் இந்த ஜெபத்தைச் சொல்ல அவர்களே நமக்கு உதவுவார்களாக.

நேசமிகு தேவபாலனுடன், நம் தேவதாயும் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

 “மாதா பரிகார மலர்” வாசகர்கள் அனைவருக்கும் இனிய சேசு பிறப்பின் மற்றும் புதுவருட ஆசீரும், வாழ்த்துக்களும்.

சேசு மரிய சூசையில் உங்கள் பிரியமுள்ள, 

Rev. Fr. ஜோசப் ராஜதுரை, SSPX 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக