வேதசாட்சிகள் பலர் (Sapientiam) - II
வருகைப் பாடல் :சர்வப் 44: 15,14.
புனிதர்களின் ஞானத்தை மக்கள் எடுத்துரைப்பார்களாக: அவர்களுடைய புகழைப் பேரவை சாற்றுவதாக : அவர்கள் பெயர் என்றென்றும் நிலை நிற்கும். (சங்.32:1) நீதிமான்களே, ஆண்டவரில் மகிழ்வீர் : நேர்மனத்தோர் அவரைப் புகழ்வது தகுமே. V. பிதாவுக்கும்... புனிதர்களின்.
சபை மன்றாட்டு :
செபிப்போமாக: சர்வேசுரா, உம்முடைய புனித வேதசாட்சிகளான... ஆகியோரின் வானகப் பிறப்பு நாளை நாங்கள் கொண்டாட அருள் புரிகிறீர்: நித்திய பேரின்பத்தில் நாங்கள் அவர்களுடன் தோழமைகொண்டு மகிழச் செய்வீராக. உம்மோடு..(1)
ஞானாகமத்திலிருந்து வாசகம்
(ஞானா.5:16-20)
நீதிமான்கள் என்றென்றைக் கும் சீவிப்பார்கள். கர்த்தரிடத்தில் அவர்களுக்குச் சம்பாவனையுண்டு; அதி உன்னத கடவுள் அவர்களை என்றும் பாதுகாக்கிறார். ஆகையால் ஆச்சரியமான ராசாங்கத்தையும் மகிமையின் கிரீடத்தையும் கர்த்தர் கரங்களினின்றடைவார்கள். அவருடைய வலது கரம் அவர்களை காப்பாற்றியது அவரது பரிசுத்த புஜம் அவர்களை ஆதரித்தது. அவர் பற்றுதலானது ஆயுத மணிந்துகொள்ளும். அவர் சத்துராதி களைப் பழிவாங்குவதற்குச் சிருஷ்டி களுக்காக ஆயுதமணிவார் இருப்புக் கவசமாக நீதியையும் சிரசாயுதமாக தமது நேர்மையுள்ள தீர்மானத்தையும் தரித்துக் கொள்ளுவார். ஊடுருவப்படாத கேடயமாக நீதித்தனத்தால் தம்மை மூடிக்கொள்வார்.
தியானப் பாடல்: சங். 123: 7-8.
வேடரின் கண்ணியிலிருந்து சிட்டுக் குருவிபோல் எங்கள் ஆன்மா விடுவிக்கப்பட்டது. V. கண்ணி அறுந்தது, விடுதலை பெற்றோம். ஆண்டவர் பெயராலே நமக்கு உதவியுண்டு. விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.
அல்லேலூயா, அல்லேலூயா. V. (சங். 67:4) நீதிமான்கள் சர்வேசுரன் திரு முன் மகிழ்ந்து, களிகூர்ந்து, பேருவகை கொள்வார்கள். அல்லேலூயா.
(முன் தவக் காலத் துவக்கத்திலிருந்து அல்லேலூயாவுக்குப் பதிலாக)
நெடும் பாடல்:
கண்ணீருடன் விதைப்போர் மகிழ்ச்சியுடன் அறுப்பர்: V. விதைக்கச் செல்கையில் அழுதுகொண்டே. சென்றனர்: V. ஆனால் கதிர்க்கட்டுகளைச் சுமந்து வருகையில் களிப்புடன் வருவர்.
லூக்காஸ் எழுதிய பரிசுத்த சுவிசேஷத்தின் தொடர்ச்சி
(லூக்.6:17-23)
அக்காலத்தில்: யேசு மலையிலிருந்து இறங்கி வந்து சமதளமான ஓரிடத்தில் நின்றார். பின்பு அவர் அவர்களுடனேகூட இறங்கி, சமனான ஒரு இடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீஷரில் அநேகம் பேரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படிக்கும், தங்கள் வியாதிகளினின்று குணமாக்கப்படும்படிக்கும், யூதேயா தேசத்துத் திசைகள் யாவற்றிலிருந்தும், எருசலேம் நகரத்திலிருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்திலிருந்தும் வந்தவர்களாகிய திரளான ஜனங்களும் இருந்தார்கள். அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களும் வந்து, ஆரோக்கியமடைந்தார்கள். அவரிடத்திலிருந்து வல்லமைபுறப்பட்டு எல்லாரையும் குணமாக்கினபடியினாலே, ஜனங்கள் யாவரும் அவரைத் தொடும்படிக்கு வகைதேடினார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கிப்பார்த்து: தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது. இப்பொழுது பசியாயிருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்; திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; இனி நகைப்பீர்கள். மனுஷகுமாரன் நிமித்தமாக ஜனங்கள் உங்களைப் பகைத்து, உங்களைப் புறம்பாக்கி, உங்களை நிந்தித்து, உங்கள் நாமத்தைப் பொல்லாததென்று தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள். அந்நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; அவர்களுடைய பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.
Post Septuagesimam in fine sequentis antiphone 'அல்லேலூயா' omittitur.
காணிக்கைப் பாடல்: சங். 149 :5-6.
புனிதர்கள் மகிமையில் அக்களிப்பார்கள், தங்கள் மஞ்சங்களில் மகிழ்வார்கள் : ஆண்டவரின் திருப்புகழ் அவர்கள் நாவில் இருக்கும். (அல்லேலூயா)
காணிக்கை மன்றாட்டு :
ஆண்டவரே, எங்கள் பக்தியின் காணிக்கையை உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்: உம்முடைய புனிதர்களின் மகிமைக்காக அது உமக்கு உகந்ததாகி, உம் இரக்கத்தால் எங்கள் மீட்புக்கு பயன் அளிப்பதாக. உம்மோடு
திருவிருந்துப் பாடல்: லூக்.12:4
என் நண்பர்களாகிய உங்களுக்குச் சொல்லுகிறேன் : உங்களை வதைப்பவர்களுக்கு அஞ்சாதீர்கள்.
நன்றி மன்றாட்டு:
செபிப்போமாக: ஆண்டவரே, உம்முடைய புனித வேதசாட்சிகளான...... ஆகியோரின் வேண்டுதலால், நாங்கள் வாயினால் உட்கொண்ட திரு உணவைத் தூய உள்ளத்தோடு பெற்று மகிழ எங்களுக்கு அருளுமாறு உம்மை மன்றாடுகிறோம். உம்மோடு... (1)