Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 17 ஜூலை, 2022

அர்ச். மார்டின் தே போரஸின் ஜீவிய சரித்திரம் [life History of St. Martin de Porres] 1

அர்ச். மார்டின் தே போரஸின் ஜீவிய சரித்திரம் 


அர்ச். மார்டின் தே போரஸ் பெருநாட்டின் லீமா நகரத்தில் 1579ம் வருடம், டிசம்பர் 9ம் தேதி பிறந்தார். இஸ்பானிய நாட்டின் உயர் குடிமகனான ஜான் தே போரஸுக்கும் அன்னா வெலாஸ்குவஸ் என்ற நீக்ரோ பெண்மணிக்கும் மகனாகப் பிறந்தார். இவர் பிறந்த போது, தாயைப் போல் கறுப்பாகப் பிறந்ததால், தந்தை இவரைத் தன் குழந்தையாக ஏற்க மறுத்தார். அதனால், இவரு டைய ஞானஸ்நான பதிவேட்டில், பெயர்தெரியாத தகப்பன் என்று குறிக்கப்பட்டிருக்கிறது. சிறிது காலம் கழித்து, ஜான், அதற்காக மிகவும் மனம் வருந்தி, சட்டபூர்வமாக மார்டினையும் அவருக்கு 2 வருடம் கழித்துப் பிறந்த ஜோனையும் தன்னுடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டார். மார்டின், இளமைப் பருவத்தின் முதல் வரு டங்களில், தாயாருடனும், சின்ன தங்கையுடனும் ஜீவித் தார். சில சமயம், மார்டினிடம், அவருடைய தாய், கூடையையும் பணத்தையும் கொடுத்து, பொருட்கள் வாங்கும்படி கடைக்கு அனுப்பிவைப்பாள். அவ்வாறு, கடைக்குச் சென்ற போதெல்லாம், அடிக்கடி, அவர் வெறும் கூடையுடன், வீடு திரும்புவார். லீமாவின் கடைவீதிகளில், அநேக ஏழைகள், பிச்சை எடுத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு மறுக்க முடியாதவராக, தான் கொண்டு சென்ற பணத்தையெல்லாம் அவர்களுக்கு அளித்து விட்டு வெறும்கூடையுடன், மார்டின், வீடு திரும்புவார். 

காலையிலேயே கடைக்குச் சென்ற மார்டின் வீடு திரும்புவதற்கு மத்தியானம் ஆகிவிடும். ஒரு சில காசுகளை மட்டுமே கொண்டு சென்ற மார்டின், அவற்றைச் செலவிடுவதற்கு, ஏன் அவ்வளவு நேரம் ஆனது? காரணம், அவர், கடைக்குச் செல்லும் போது, வழியில், தேவாலயத்தைக் காண்பார். உடனே, இவ்வுலகில் தனது தகப்பன், தன்னை நிராதரவாக கைவிட்டாலும், ஒருபோதும் தன்னைக் கைவிடாமல் பாதுகாத்துப் பராமரிக் கும் பரலோகத் தந்தையாம் சர்வேசுரனுடைய பரிசுத்த இல்லமாகிய தேவாலயத்திற்குள் செல்வார்; ஒளிமிகுந்த தெருவிலிருந்து விலகி, நூதனமான அமைதியுள்ள சூழலும், ஜெபிக் கத் தூண்டும் சுரூபங்களின் நிழல்களுமுடைய தேவாலயத்திற்குள் சின்னஞ்சிறிய நீக்ரோ சிறுவனான மார்டின் தன் சிறு கால்களால், பீடத்திற்கு முன்பாக விஸ்தாரமாய் பரந்திருக்கும் விசுவாசிகளுடைய பகுதிக்கு , சப்தமின்றி, மெதுவாக நடந்துச் சென்று பீடத்தின் முன் முழங் காலில் இருப்பார். மகா பரிசுத்த தேவநற்கருணையில் வீற்றிருக்கும் திவ்ய சேசுநாதர் சுவாமி யை அத்தியந்த விதமாக ஆராதித்து, தேவ சிநேக முயற்சிகளில், வெகுநேரம் ஈடுபட்டிருப் பார்; ஜெபத்தில் ஆழ்ந்திருப்பார்; அப்போது, பாடுபட்ட சுரூபத்தையோ, அல்லது பெரும் ஆடம்பர அலங்கார பீடங்களில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் தேவமாதாவின் படத்தையோ உற்றுப் பார்ப்பதற்காக, அவருடைய இருபெரிய கண்களும் முழுவதுமாகத் திறந்திருக்கும்; அவை, அவருடைய கறுப்புமுகத்தில் பளீரென்று, அதிக வெண்மையாகக் காட்சியளிக்கும். 

சப்தமும் ஆரவாரக் கூச்சலுமுள்ள அவருடைய வீட்டின் சூழலுக்கு முற்றும் மாறுபாடான அமைதியும் ஆழ்ந்த சமாதானமும் நிலவும் தேவாலயம், மார்டினுடைய இருதயத்திற்கு மிக வும் இனிமையாக இருந்தது. ஆனால், வீட்டிற்குச் சென்றதும், அம்மாவிடம், மார்டின், கணக் கை ஒப்படைக்க வேண்டியிருந்தது. சிறிதளவு பணமே தன்னிடம் உள்ள நிலைமையில், மார் டினுடைய தாயாரால், ஏழைகளின் மீது தன் மகன் காட்டிய பரிவு தயாளத்தை அனுமதிக்க முடியாமல் போயிற்று. மகனே, இன்று நீ செய்த குற்றத்தால், நமக்கு சாப்பிட ஒன்றும் இல்லை. அதனால், நீ மட்டுமல்ல, உன் தங்கையும், நானும் கூட சாப்பிடாமல் இருக்கிறோம் என்று கூறினாள். மார்டின், அதற்கான தண்டனையை அமைதியாக ஏற்றுக்கொண்டார். ஆனா லும், பிச்சைக்காரர்கள், ஏழைகளைக் கண்டால், மறுபடியும் அவர்களுக்கு, அவர் தன்னிடம் இருக்கும் பணத்தை அளித்துவிடுவார். மார்டின் அறிவிலும் திறமையிலும் குணத்திலும் மிகச் சிறந்த சிறுவனாக வளர்ந்துவந்தார். மார்டினுடைய தந்தை, ஜான் தே போரஸ், அச்சமயம், லீமாவிலிருந்து, ஈக்வடார் நாட்டிலுள்ள குவாயாகுவில் என்ற நகரிலுள்ள வேலைக்கு இஸ் பானிய அரசாங்கத்தால் மாற்றப்பட்டிருந்தார். அதனால், அவ்வப்பொழுது லீமாவுக்கு அவர் வந்து போவது வழக்கம். ஒருதடவை, அவ்வாறு லீமாவுக்குச் சென்ற ஜான், தன் இரு பிள்ளை களையும் ஏற்றுக்கொண்டு, தன்னுடன் குவாயாகுவிலுக்குக் கூட்டிச் சென்றார். அவர்களிடம் நல்ல தந்தையாக, அவர்களுக்குத் தேவையான நல்ல கல்வியைக் கொடுப்பதற்காக திறமை யான ஆசிரியர்களை ஏற்பாடு செய்தார். அத்துடன், அவரும், அவருடைய ஓய்வு நேரத்தில் அவர்களுக்குக் கற்பிப்பதில் ஈடுபட்டார். ஒருசமயம், ஜான் தே போரஸ் தன் இருபிள்ளை களுடனும் தெருவில் நடந்து சென்ற போது, வழியில், அவரது மாமா, ஜேம்ஸ் தே மிரான் டாவை சந்தித்தார். பிள்ளைகள் யார் என்று கேட்டபோது, அவரிடம், ஜான், இவர்கள் என் பிள்ளைகள். அன்னா வெலாஸ்குவஸ் தான் இவர்களுடையதாய் என்று பதிலளித்தார். அவர் களுக்கு நல்ல கல்வி அளிக்கும்படியாக இவர்களை என்னுடன் வைத்திருக்கிறேன் என்று பதி லளித்தார்.

அப்போது, மார்டினுக்கு 8 வயது. ஜோனுக்கு 6 வயது. தந்தையுடன் பிள்ளைகள் தங் கியிருந்த காலம் மிகக் குறுகிய காலம். சுமார் நான்கு வருடங்கள் கூட இருந்தனர். பின்னர், மறுபடியும் ஈக்வடாரிலிருந்து, பனாமாவுக்கு ஜான் மாற்றப்பட்டதால், மார்டினைத் தாயா ருடன் லீமாவிலும், ஜோனைத் தன் மாமா ஜேம்ஸ் தே மிராண்டாவின் பொறுப்பிலும் விட் டுச் சென்றார். அவர்களுடைய கல்விக்குத் தேவையான பணத்தைக் கொடுத்தார். மார்டின் நன்கு கல்விகற்பதுடன், வியாபாரத்தைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்றும் ஜான் விரும்பி னார். தான் இல்லாத போது, தன் குடும்பம், வறுமையால் துன்பப் படாமலிருப்பதற்குத் தேவையான அளவிற்கு, ஜான், பணத்தைத் தன் மனைவியிடம் கொடுத்து விட்டுப் பனாமா விற்குச் சென்றார். மார்டினுக்கு 12 வயது ஆனதும், தொழில் கற்றுக்கொள்ளும்படியாயிற்று. எந்தத் தொழிலைத் தேர்ந்தெடுப்பது என்பதில், மார்டினுக்கு முழு சுதந்திரத்தை, அவரு டைய தந்தைக் கொடுத்திருந்தார். அதன்பிரகாரம், மார்டின், பார்பர் என்னும் முடிவெட் டும் தொழில் கற்றுக்கொள்வதற்காக, மார்சல் தே ரிவெரோ என்பவரது கடைக்குச் சென்றார். அக்காலத்தில் பார்பர் என்பவர், முடியை வெட்டுவதுடன், நோய்களுக்குத் தீர்வுகாணும் வகையில் இரத்தம் எடுப்பது, அறுவைசிகிச்சை செய்வது, காயங்களுக்கு மருந்திட்டு சிகிச்சை அளிப்பது, சாதாரணநோய்களுக்கு மருந்து கொடுப்பது போன்ற பல்வேறு காரியங்களையும் செய்பவராக இருந்தார். அதாவது, பார்பர் என்பவர், முடிவெட்டுபவராகவும், அறுவை சிகிச்சை நிபுணராகவும், மருத்துவராகவும் மருந்து கொடுப்பவராகவும் ஒரே சமயத்தில் செயல்பட்டார். ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் மாபெரும் விதமாக பயன்படும் இத்தொழிலைக் கற்பதில், மார்டின் தீவிரமாக அயராமல் ஈடுபட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக