*மே மாதம் 18-ம் தேதி*
*St. Theodotus & Co., MM.*
*அர்ச். தெயதோதுசும் துணைவரும்*
*வேதசாட்சிகள் - (கி.பி. 303).*
தெயதோதுஸ் சின்ன ஆசியாவில் அன்சீரா ஊரில் கடை வைத்து வாழ்ந்து வந்தார். இவர் சிறு வயதிலிருந்தே தேவ பயபக்தியுள்ளவராய் ஜெபம், தபம், உபவாசம், ஒருசந்தி முதலிய புண்ணியங்களை அனுசரித்து, விசேஷமாக ஒறுத்தல் முயற்சியை கடைப்பிடித்து வந்தார். இவருக்கு மிகுந்த செல்வமிருந்தும், அதில் பற்றுதல் வைக்காமல் தான தர்மம் செய்துவந்தார். அக்காலத்தில் எழும்பிய பயங்கர வேத கலாபனையில் கணக்கில்லாத கிறீஸ்தவர்கள் வேதசாட்சிகளாக மரித்தார்கள். அநேகர் நாட்டை விட்டு காடுகளுக்கும், மலைகளுக்கும் ஓடிப்போனதினால் பிறமதத்தினர் கிறீஸ்தவர்களுடைய வீடுகளைக் கொள்ளையடித்தார்கள். மேலும் ஊர்களில் தங்கியிருந்த கிறீஸ்தவர்களைப் பசியால் துன்புறுத்தும் எண்ணத்துடன், கடைகளில் விற்கப்படும் ஆகார பொருட்களை சிலைகளுக்குப் படைத்து விற்கும்படி இராயன் கட்டளையிட்டான். அப்போது தெயதோதுஸ் தமது கடையிலுள்ள பொருட்களை கிறீஸ்தவர்களுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்து, ஜெபத்தாலும் புத்திமதியாலும் அவர்களுக்கு உதவி புரிந்துவந்தார். இவர் அநேகப் புதுமைகளைச் செய்து, அஞ்ஞானிகளையும் யூதரையும் மனந்திருப்பி, வேதசாட்சிகளின் திருச்சரீரத்தைப் பக்தியுடன அடக்கம் செய்துவந்தார். அச்சமயத்தில் வேதத்திற்காக பிடிபட்ட 7 கன்னியரைச் சந்தித்து, அவர்களுக்கு தம்மால் முடிந்த உதவிகளைச் செய்து, அவர்களுக்கு ஆறுதலும் அளித்தார். அவர்கள் வேதத்திற்காக மரித்தபின் அவர்களுடைய சரீரங்களை அடக்கஞ் செய்தார். இதனால் இவர் பிடிபட்டு, சரீரம் முழுவதும் கிழியும்படி அடிக்கப்பட்டு, நெருப்பில் போட்டு சுடப்பட்டார். கற்களால் இவருடைய அலகு எலும்புகள் உடைக்கப்பட்டு, பெரும் வேதனைக்குரிய சக்கரத்தில் வாதைப்பட்டு, மரணத்திற்கு உள்ளாகி வேதசாட்சி முடி பெற்றார்.
*யோசனை*
நாமும் நமது ஆலோசனையாலும், நன்னடத்தையாலும், பொருளுதவியாலும் பிறருக்கு உதவி புரிவோமாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக