*ஏப்ரல் மாதம் 30-ம் தேதி*
*St. Catharine of Sienna, V.*
*அர்ச். சியென்னா கத்தரீனம்மாள்*
*கன்னிகை - (கி.பி. 1380).*
சீயென்னாவில் பிறந்த கத்தரீனம்மாள் சிறு வயதில் மிகவும் பக்தியுள்ளவளாய், ஜெபத்தியானத்திலும் ஞானப் புத்தகங்களை வாசிப்பதிலும் வெகு நேரம் செலவழித்து, தன் கன்னிமையை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தாள். இவளுக்கு வயது வந்தபின், இவள் மணமுடித்துக்கொள்ள சம்மதியாததினால், இவள் பெற்றோர் இவள்மட்டில் கோபங்கொண்டு கடின வேலை செய்யும்படி கட்டளையிட, இவள் மனம் சோர்ந்துபோகாமல் சந்தோஷமாய் அவைகளைச் செய்துவந்தாள். ஜெபத் தியானங்களையும் தவச்செயல்களையும் நடத்தி அடிக்கடி தேவதிரவிய அனுமானங்களைப் பெற்றுவந்தாள். பசாசால் கடினமாகச் சோதிக்கப்பட்ட போதிலும், ஜெபத்தால் அவைகளை ஜெயித்தாள். ஒரு தடவை இவள் இருதயத்தில் உண்டான அசுசியான தந்திரச் சோதனைகளைத் தவிர்த்த பிறகு கர்த்தர் தரிசனமாகவே, சுவாமி! அசுசியான நினைவுகள் எனக்கு உண்டான சமயத்தில் நீர் எங்கே இருந்தீர் என்று வினவிய போது, நீ அதை வெறுத்து தள்ளினதால் உன்னிடமே இருந்தோம் என்றார். அநேக மாத காலம் யாதொரு உணவுமின்றி தேவநற்கருணையால் மாத்திரம் பிழைத்து வந்தாள். கர்த்தருடைய பாடுகளின் மட்டில் இவள் அதிக பக்தி வைத்திருந்தமையால் இவள் தலையில் முள்முடியையும், இரு பாதங்களிலும், விலாவிலும் திருக்காயங்களையும் பெற பாக்கியம் பெற்றாள். பின்பு இவள் அர்ச். தோமினிக் 3-ம் சபையில் சேர்ந்து வீட்டிலிருந்துகொண்டே மகத்தான காரியங்களை செய்துவந்தாள். தன் பக்தியுள்ள ஜெபத்தால் கணக்கற்ற பெரும் பாவிகளை மனந்திருப்பினாள். ஒருவருக்கொருவர் கோப வைராக்கியமாயிருந்த பிரபுக்களையும் அரசரையும் சமாதானப்படுத்தினாள். பாப்பரசருக்குக் கீழ்ப்படியாமல் குழப்பம் செய்தவர்கள் இவள் புத்திமதியால் பாப்பாண்டவருடைய பொறுத்தலைக் கேட்டார்கள். திருச்சபையின் நன்மைக்காக இப்புண்ணியவதி நெடும் பிரயாணஞ் செய்து, பாவிகளைத் மனந்திருப்பி, சண்டையிடுபவரைச் சமாதானப்படுத்தி, அநேகப் புதுமைகளைச் செய்து, 33-ம் வயதில் பாக்கியமான மரணமடைந்து நித்திய சம்பாவனைக்குள்ளானாள்.
*யோசனை*
நமது இருதயத்தில் எவ்வளவு அசுசியான நினைவுகள் உண்டான போதிலும், அதை உடனே வெறுத்து அகற்றிவிடப் பழகுவோமாக.