Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 4 செப்டம்பர், 2013

இருவகையான வியாக்கியானங்கள்

இருவகையான வியாக்கியானங்கள்

(சங். திரேஷியன் பாபு – அர்ச். பத்தாம் பத்திநாதர் சபை)

வருகிற அக்டோபர் 11-ம் தேதி இரண்டாம் வத்திக்கான் சங்கம் ஆரம்பித்த 50- ஆண்டு விழாவை பகிரங்கமாக கொண்டாட வத்திக்கானில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான எல்லா ஏற்பாடுகளும் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பொன் விழா நிகழ்ச்சியை நினைவூட்டும் வகையில் இந்த ஆண்டை “விசுவாச ஆண்டாக” பாப்பரசர் அறிவித்துள்ளார். ஆனால் இச்சங்கம் குறித்தான விவாதங்கள் இன்னும் முடிந்தபாடில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை! விவாதங்கள் என்றவுடனே பாரம்பரியத்திற்கும், நவீனத்திற்கும் இடையிலான கருத்து பரிமாற்றம் என்று நினைக்கத் தோன்றும் அல்லது பாரம்பரியத்தை பற்றி நிற்பவர்கள் நவீனர்களின் நவீனத்தை எதிர்த்து நிற்பது என்றும் எண்ணத் தோன்றும். ஆனால் இங்கே குறிப்பிடப்படுகின்ற விவாதங்கள் நவீன திருச்சபைக்குள்ளே இரண்டு விதமான கருத்துக்களின் ஒன்றோடொன்றான மோதல்களின் வெளிப்பாடுகள் ஆகும். ஆம்! நவீன திருச்சபைக்குள்ளே இரண்டு குழுக்களாகப் பிரிந்து தங்களுடைய வழிமுறையே சரி என்று வாதாடும் வேடிக்கைகள் தான் இங்கே குறிப்பிடப்படுகின்றன. இந்த ‘வார்த்தை வாக்குவாதங்கள் புத்தகமாய், கட்டுரைகளாய், பேட்டிகளாய், இணைய தளங்களாய் வெளிவந்து கொண்டே இருக்கின்றன! தனக்குள் பிரிந்து போன அரசு நிலைத்திருக்க முடியுமா? அது போலத்தான் திருச்சபையின் நவீனமும்!
2-ம் வத்திக்கான் சங்கத்தின் சிறப்பே அதன் முரண்பாடுதான்!! நவீன மனிதனுக்குப் புரியும் மொழியில் பேச போவதாய் இயற்றப்பட்ட ஏடுகள் அவனுக்கு தௌவாய் விளங்கவில்லை. வெளியிடப்பட்ட சங்க ஏடுகளோ குழப்பங்களின் மூட்டை! அவற்றை எப்படி விளக்க வேண்டும் என்பதே இன்றைக்கும் பல ஆய்வுகளின் பொருளாயிருந்து வருகிறது. வத்திக்கானிலிருந்து வரும் செய்திகளில “இரு வகை வியாக்கியான முறை” பற்றிய தலைப்பு அடிக்கடி இடம் பெறுகிறது. அவை என்ன? அவற்றின் சாரம் என்ன? என்பது பற்றி சுருக்கமாகக் காண்போம்.
I. முறிவு வியாக்கியான முறை (Hermenteutic of Rupture)
II. தொடர்ச்சி வியாக்கியான முறை (Hermenteutic of Continuity)


I. முறிவு வியாக்கியான முறை
இது சங்க ஏடுகளை எப்படி விளக்க வேண்டும் என்பதில் கையாளப்படும் முதல் முறை (இம்முறையே பல இடங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.)
இத்தாலியில், போலோஞா நகரில் வாழ்ந்த டான் ஜோசப் டோசெட்டி (Don Giussepe Dosseti) என்பவரால் தொடங்கப்பட்டது. பின்னர் அவருடைய சீடரான Alberigo Gisussepe என்பவரால் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்வியாக்கியான முறை கொண்டு அவர் எழுதிய இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் வரலாறு என்ற 5 பாகங்களைக் கொண்ட மிகப் பெரிய படைப்பு, நவீனர்களின் வெற்றிக்கு மிகவும் உதவியாய் இருந்து வருகிறது. இது தன்னிலே புரட்சிகரமான எண்ணங்களைக் கொண்டது.
2-ம் வத்திக்கான் சங்கத்திற்குப் பின் இருக்கும் சங்க சபைக்கும், அதற்கு முன்பாக இருந்து வந்த திருச்சபைக்கும் (?)உள்ள உறவு முறிக்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் தான் சங்கத்தை மொழிபெயர்க்க வேண்டும் அல்லது வியாக்கியானம் செய்ய வேண்டும் என்ற முற்போக்கு எண்ணம் கொண்டது.
இவர்களது சித்தாந்தத்தின்படி 2-ம் வத்திக்கான் சங்கம் திருச்சபையில் நடந்த “ஒரு புதிய பெந்தேகோஸ்து” ஆகும். (பாப்பு 6-ம் சின்னப்பரின் கூற்று). எனவே திருச்சபை இச்சங்கத்திற்கு முற்றிலும் இசைந்து இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பழையனவைகளைத் தள்ளி, புதியனவைகளை எழுப்பும் நவீன திறன் இது!
இத்தகையோர்களின் (நவீனர்கள்) செய்கைளால் திருச்சபையில் நடந்தேறி முடிந்த விளைவுகளில் சில :
- பாரம்பரியத் திருச்சபையின்படி குருக்கள் வேறு, விசுவாசிகள் வேறு. அவர்களின் அந்தஸ்தும் கடமைகளும் வௌ;வேறானவை. ஆனால், புதிய திருச்சபையிலோ விசுவாசிகள் குருக்களின் பணிகளையும், சாதாரண விசுவாசிகளாக தங்களை மாற்றிக் கொண்ட குருக்களாக எல்லாம் கலந்த அந்தஸ்து உருவாக்கப்பட்டு வருகிறது.
- திவ்விய பலிபூசை நமதாண்டவரின் கல்வாரி பலி என்ற பாரம்பரிய விசுவாசம் மாற்றப்பட்டு, இப்போது நவீனத்தில் திருப்பலி வெறும் பகிர்ந்துகொள்ளும் இறைமக்களின் கூட்டமாய் மாறிப்போனது. குருவானவர் இக்கூட்டத்துக்கு தலைமை ஏற்று நடத்துபவராகிப் போனார்!
- பாரம்பரிய திருச்சபை, ஆன்ம இரட்சண்யமே மனிதனின் இலக்கு என்கிறது@ நவீனத்தில் இந்நிலை மாறி ஆன்ம இரட்சண்யம் என்ற கருத்து மறைந்து எங்கும் மனிதம், உலகில் நீதியும், அமைதியும்தான் மனித இலக்காகிவிட்டது!
- பாரம்பரிய திருச்சபை நமதாண்டவர் சேசுக்கிறீஸ்துநாதரை மகா பரிசுத்த தமதிரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சர்வேசுரன் என்று போதிக்கிறது. ஆனால் 2-ம் வத்திக்கான் சங்கத்துக்குப்பின் இருக்கும், “சங்கச்சபையோ” நமதாண்டவர் சமுதாய சீர்திருத்தவாதி, புரட்சி வீரர் என்று புது வடிவம் கொடுத்து வருகிறது இவர்களைப் பொறுத்த மட்டில் திருச்சபையில் நிகழ்ந்து வரும் குழப்பங்கள் தங்கள் வெற்றியின் அடையாளம். பழையன களையப்படும் (முறிக்கப்படும்) போது ஏற்படும் வலிதான் நாம் இன்று உணர்கிற நெருக்கடி என்றும், இது முடியும் பட்சத்தில் புதிய திருச்சபை எவ்வித பழையனவைகள் இல்லாமல் காட்சியளிக்கும் (முற்றிலும் புதிய நவீன திருச்சபை!) என்பதே இவர்களுடைய கருத்து (கர்தினால் மர்தினியின் கருத்து – மிலான் முந்தைய அதிமேற்றிராசன அதிமேற்றிராணியார்). மாற்றங்கள் நிறைந்ததே வாழ்க்கை, அதை திருச்சபையிலும் காண வேண்டும் என்கின்றனர் இத்தகையோர். ஆனால் மாறாத சத்தியங்களை – திருச்சபையை எப்படி மாற்ற முடியும்?! சீர்திருத்தம் என்ற பெயரில் அவர்கள் மாற்றி அமைத்ததன் விளைவுகளே இன்று நாம் காணும் சீர்கேடுகள்.
II. தொடர்ச்சி வியாக்கியான முறை
2-ம் வத்திக்கான் சங்கத்திற்கு முன்பு இருந்த திருச்சபை போதனைகளுக்கும், அதன் பின் வந்த போதனைகளுக்கும், இடையில் எவ்வித பிளவோ – உடன்பாடின்மையோ இல்லை என்பது இக்கோட்பாடு.
2-ம் வத்திக்கான் சங்கம் – இரண்டாயிரம் ஆண்டு கால திருச்சபையின் ஒருமித்த வளர்ச்சி என்றும், சங்கத்திற்கு முன் இருந்த அதே உண்மைகளை மீண்டும் இக்கால மக்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் நவீனப்படுத்தி, வியாக்கியானம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள் இக்குழுவினர். எனவேதான், சங்கத்தினை கலாச்சார விழிப்புணர்வுடன் மக்களுக்கு அளிக்க வேண்டும் என்றும், சங்கத்திற்குப் பிறகு வாழும் திருச்சபை புது திருச்சபையல்ல – அது புதுப்பிக்கப்பட்ட ஒன்று என்பது இவர்களது வாதம்.
பாப்பரசர் 2-ம் அருள் சின்னப்பரின் காலத்தில் சிறுபான்மையினராய் இருந்த இக்கோட்பாட்டினர், தற்போதைய பாப்புவின் ஆதரவுடன் மீண்டும் தழைத்தோங்க தொடங்கி உள்ளனர். தான் ஆட்சிப் பீடத்தில் ஏறியவுடன் தன்னுடைய கர்தினால்களுக்கு அளித்த உரையில் தன்னுடைய திட்டங்களை வெளிப்படுத்தினார். (cf Discourse of Pope Benedict XVI, Dec22, 2005, www.vatican.va) இது மிகவும் முக்கியமான உரை. தன்னுடைய எதிர்கால செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று முன்னரே அறிவித்த முன்னுரை இது!! இவ்வுரையில் வத்திக்கான் சங்கத்திற்கு ஒரேயொரு விளக்கமுறைதான் உண்டு என்றும், அது ‘தொடர்ச்சிமுறை’ தான் என்றும், தெளிவாகக் கூறினார். இவ்வியாக்கியான முறையை நடைமுறைப்படுத்துவதுதான் தன்னுடைய முதற்பணியாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
இது சரிதானா? என்று சற்று சிந்தித்துப் பார்த்தால் – உண்மை புரியும். தவறுகள் புலப்படும். இவ்வழியும் ஆபத்தானது என்பது தெரியும். “சரியான வழியில் சிந்திக்காததால் விளையும் விளைவு நம் விசுவாசத்திற்கு எதிரானது” – இவர்கள் கூறுவது போல் தவறுகளை சத்தியத்தின் தொடர்ச்சி என்று எப்படி கொள்ள முடியும்? இதனை ஒரு எடுத்துக்காட்டினால் விளக்குவோம். இதுவரை சமய ஒன்றிப்பு போக்கினை கண்டித்து வந்த (பாரம்பரிய) திருச்சபையின் போதனைகளும், அவற்றை ஆதரிக்கும் இப்போதை (நவீன) போதனைகளும் சத்தியத்தின் தொடர்ச்சியான மலர்ச்சியா? “கத்.கிறீஸ்தவ வேதம் மட்டும்தான் இரட்சண்யப்பாதை” என்ற பாரம்பரிய விசுவாசக் கொள்கையின் தொடர்ச்சியா – எல்லா மதத்திலும் இரட்சண்யம் உண்டு என்ற புதிய படிப்பினை? இல்லை. இருக்கவே முடியாது.
இவ்வாறு கண்முன் நிகழும் முரண்பாட்டினை ஏற்றுக்கொள்ள மறுப்பது குற்றம் என்ற சொல்லால் என்னவென்று கூறுவது? “புதுப்பிக்கப்பட்ட திருச்சபை” என்ற விளக்கம் அளிக்கும் இவர்கள், இத்திருச்சபையில் நிலவும் குழப்பத்திற்கு பதில் அளிக்க மறுப்பதேன்? கசப்பான உண்மை என்னவென்றால், திருச்சபையில் நிகழும் குழப்பங்களுக்கெல்லாம் காரணம் முறையற்ற சுதந்திரவாத நவீன கொள்கையினால் ஊறிப்போயிருக்கும் 2-ம் வத்திக்கான் சங்கமே. சங்கத்திற்குப் பின் நடந்தவைகள் – சங்கத்திற்கு முன் கடைபிடிக்கப்பட்டு வந்தவைகளின் தொடர்ச்சி அல்ல என்பது தான் மறுக்கமுடியாத உண்மை!
முடிவுரை :
நாம் வாழும் இந்நெருக்கடி நிலை, இவ்விரண்டில் ஒன்றை தேர்ந்தெடுப்பதின் மூலம் முற்றுப்பெறப்போவதில்லை. மாறாக தவறுகளை – பதிதங்களைக் கண்டித்து உண்மை போதகத்தை மீண்டும் போதிப்பதால் மட்டுமே தான் தீர்வு காண முடியும். தவறாவரம் என்பது ஏதோ சில நிறுவனங்களுக்கோ, குருக்களுக்கோ அளிக்கப்பட்ட கொடையல்ல. ஆனால் கிறீஸ்துநாதரின் பிரதிநிதியான பாப்பரசருக்கு மட்டுமே, தரப்பட்ட தனி வரப்பிரசாதம். அதை அவர் பயன்படுத்தி சத்தியம் என்னும் தீபத்தை பிறர் காணும் வகையில் கலங்கரை விளக்கத்தில் ஏற்றும்போதுதான் தப்பறைகள் என்னும் கடலில் வழி தவறிய ஆன்மாக்கள் மீண்டும் சத்தியமெனும் கரை வந்து சேர முடியும்! அந்நாள் விரைவில் நம் கண்களுக்குப் புலப்படும் என்று விசுவாசம் கொள்வோம்.
இரு வியாக்கியான முறையில் எது சிறந்தது என்ற விவாதமுறையை தள்ளி வைத்து, அழியா கத்தோலிக்க விசுவாசம் எது? அதை மட்டும் விசுவாசிகளுக்கு தரவேண்டும் என்ற முயற்சியில் இவர்கள் இயங்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக