ஜூலை 16-ம் தேதி
பரி. கார்மேல் உத்தரிய மாதாவின் ஞாபகம்
பிரவேசம்
கன்னிகையான முத்திப்பேறுபெற்ற மரியாயிக்கு வணக்கமாக இத்திருநாளைக் கொண்டாடுகிற எல்லோரும் ஆண்டவ ரிடத்தில் அகமகிழ்வோமாக; அவளுடைய திருநாளில் சம்மனசுக்கள் ஆனந்தித்து சர்வேசுரனுடைய திருக்குமாரனைப் புகழ்கின்றார்கள்.* (சங். 44:2) என் இருதயம் ஓர் நல்ல வார்த்தையை வெளியிட்டது; என்னுடைய செய்கைகளை மன்னனுக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.-பிதாவுக்கும்......
சபை செபம்:
செபிப்போமாக: சர்வேசுரா, தேவரீர் உமது திவ்விய மாதாவாகிய மகா முத்திப்பேறுபெற்ற என்றுங் கன்னிகையான மரியம்மாளின் சபைக்குக் காரமேல் என்ற பரிசுத்த பட்டத்தைச் சூட்டி, அதனை அலங்கரித்தருளினீரே ; அவளுடைய ஞாபகத்தை இன்று பக்தி ஆசாரத்துடன் சிறப்பித்துக் கொண்டாடுகிற நாங்கள் அவளுடைய சகாயங்களால் காப்பாற்றப்பட்டு, நித்திய பேரின்ப பாக்கியத்திற்கு வந்துசேர அருகராகும்படி தயவாய்த் திருவருள் புரிந்தருளும். - அவரே தேவரீரோடு இஸ்பிரீத்துசாந்துவின் ஐக்கியத்தில்.
ஞானாகமத்திலிருந்து வாசகம்:-
சர்வ. 24: 23 31
நான் முந்திரிகைச் செடியைப்போல சுகந்தமான வாசனயின் இனிமையை வீசி னேன்; என்னுடைய பூக்கள் மாண்பினுடையவும், யோக்கியத்தையினுடையவும் கனிகளாம். நான் அரிய நேசத்தினுடையவும், பயத்தினுடையவும், அறிவினுடையவும், பரிசுத்த நம்பிக்கையினுடையவும் தாயாயிருக்கிறேன். என்னிடமே எல்லா நன்னெறியினுடையவும், உணமையினுடையவும் வரம் உண்டு; என்னிடமே சீவியத்தினுடையவும், புண்ணியத்தினுடையவும் சகல நம்பிக்கை யெல்லாம். என்னை ஆசிக்கிறவர்கள் எல்லோரும் என்னிடம் வந்து சேருங்கள்; என் கனிகளினால் நிரப்பப்படுங்கள். என் ஆவியானது தேனைவிட இனிப்பாயிருக்கின்றது; என் சுதந்தரம் தேனையும், அதன் இனிய சுவையையும்விட மேலானது. எக்காலத்துக்கும் தலைமுறைகளுக்கும் என் ஞாபகம் நிலைத்திருக்கும். என்னைப் புசிப்பவர்கள் இன்னமும் பசிகொள்ளுவார்கள்; என்னை அருந்துகிறவர்கள் இன்னமும் தாகங்கொள்ளுவார்கள். என் மொழி கேட்கிறவன் மோசம் போகமாட்டான்; என்னில் தங்கள் கிருத்தியங்களைச் செய்கிறவர்கள் பாவஞ் செய்யமாட்டார்கள். என்னை மகிமைப் படுத்துகிறவர்கள் நித்திய சீவியத்தை அடைவார்கள்.
படிக்கீதம்
கன்னிமரியாயே, கன்னிமைக்குப் பழுதின்றி இரட்சகருடைய தாயாராக ஏற்பட்டீரே; நீர் ஆசீர்வதிக்கப்பட்டவள்; வணக்கத்துக்குரியவள். - தேவதாயான கன்னிகையே, உலகம் அனைத்தும் கொள்ளமுடியாதவர் உமது திரு உதரத்தில் மனிதனாய் அடங்கலானாரே!
அல்லேலுய்யா, அல்லேலுய்யா.- தேவதாயே. நாங்கள் இழந்த சீவியம் எங்களுக்கு உம்மாலேதான் கொடுக்கப் பட்டது; வானத்திலிருந்து வந்தவரைச் சிசுவாகத் தரித்து, உலகிற்கு இரட்சகராகப் பெற்றெடுத்தீர் அல்லேலுய்யா.
சுவிசேஷ வாக்கியம்
லூக். 11:27-28.
ஜனக்கூட்டத்தில் நின்று ஓர் ஸ்திரீயானவள் தன் சத்தத்தை உயர்த்தி, அவரை நோக்கி: உம்மைச் சுமந்த உதரமும் நீர் அமுதுண்ட கொங்கைகளும் பாக்கியம் பெற்றவைகளே என்றார். அதற்கு அவர்: அப்படியானாலும், சர்வேசுரனுடைய வாக்கியத்தைக்கேட்டு, அதை அநுசரிக்கிறவர்கள் பாக்கியவான்களென்று திருவுளம் பற்றினார்.
ஒப்புக்கொடுத்தல்
கன்னித்தாயே, எங்களைத் தேவ சந்நிதியில் நினைவுகூர்ந்து, எங்களுக்காக நன்மையானவைகளைப் பேசி, எங்கள்மேலுள்ள தேவகோபம் தணியும்படி செய்தருளும்.
அமைதி மன்றாட்டு
ஆண்டவரே, தேவரீருக்கு நாங்கள் ஒப்புக்கொடுத்த காணிக்கைப் பொருள்களை அர்ச்சித்தருளும்; தேவதாயாகிய முத்திப்பேறுபெற்ற மரியம்மாளின் மகா பலனுள்ள வேண்டுதலைப் பார்த்து, அவை எங்களுக்கு இரட்சணியத்துக்குரியவைகளாகும்படி கிருபைசெய்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம்.-தேவரீரோடு இஸ்பிரீத்துசாந்துவின் ஐக்கியத்தில்..... அதே சேசுக்கிறீஸ்துவின் பெயரால்
உட்கொள்ளுதல்
பூலோகத்தில் அதியோக்கியமான அரசியே, என்றுங் கன்னிகையான மரியாயே, எங்களுடைய சமாதானத்திற்காகவும் மன்றாடும்; சகலத்திற்கும் இரட்சகரும் ஆண்டவருமான கிறீஸ்துவைப் பெற்றவளே
உட்கொண்டபின்
செபிப்போமாக: ஆண்டவரே, தேவரீருடைய மகிமை நிறைந்த தாயாகிய என்றுங் கன்னிகையான மரியம்மாளின் பக்திக்குரிய வேண்டுதல் எங்களுக்கு ஆதரவாயிருக்கக்கடவது; அவள் தம்முடைய இடைவிடாத சகாயங்களால் நிரப்பப்பட்டவர்களைச் சகல இடையூறுகளினின்று விடுவித்து, தமது அன்பினால் அவர்களை ஒன்றிக்கும்படி தேவரீரை மன்றாடுகிறோம்.- அதே பிதாவாகிய சர்வேசுரனோடு இஸ்பிரீத்து சாந்துவின் ஐக்கியத்தில்...!