அர்ச்.பீட்டர் ஆர்மங்கல்
திருநாள் ஏப்ரல் 27ம் தேதி
இஸ்பானியா நாட்டில், டார்ரகன் அதி மேற்றிராசனத்தில், குவார்டியா டெல்ஸ் பிராட்ஸ் என்ற ஓர் குக்கிராமத்தில், 1238ம்வருடம் பிறந்தார். ஆரகன், மற்றும் காஸ்டில் அரசர்கள், பார்சலோனா மற்றும் ஊர்கல் இளவரசர்களின் வம்சாவளியைச் சேர்ந்த உயர் குடும்பத்தைச் சேர்ந்தவர். மிகுந்த கவனத்துடன் கத்தோலிக்கக் கல்வி அளிக்கப்பட்ட போதிலும், இளம் வயதில், பீட்டர், கெட்ட நண்பர்களின் சகவாசத்தால், தீமையில் உழன்று திரிந்தார். அரசு அதிகாரிகளால் தேடப்பட்ட ஓர் அக்கிரம் கொள்ளைக்கூட்டத்துடன், சேர்ந்துகொண்டு, மலைப்பகுதியில் தங்கியிருந்தார். விரைவிலேயே, கொள்ளைக்கூட்டத்திற்குத் தலைவனானார். அவரது தந்தை, ஆர்னால்டு ஆர்மங்கல், தன் மகனின் கெட்ட நடத்தையைக் கண்டு பொறுமை இழந்தவராக, வலேன்ஷியாவிற்கு குடிபெயர்ந்து சென்றார். வலேன்ஷியா சிற்றரசு, அப்போது தான், ஜெயிம் அரசரால், மூர் இனத்தவரிடமிருந்து, ஒரு போரில் மீட்கப்பட்டது. இந்த அரசர், ஒரு முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரான்சு அரசரை சந்திக்கும்படி, மோன்ட்பெல்லியருக்கு செல்ல நேரிட்டது. அரசர் தனது பயணத்தினுடைய பாதுகாப்பிற்காக, ஆர்னால்டுவை தனக்கு முன்பாக, மற்ற காவல் அதிகாரிகளுடன் செல்லும்படி பணித்தார்; ஏனெனில், ஆர்னால்டு, அரசரின் பாதுகாவல் அதிகாரியாக இருந்தார். மலைப்பகுதியில் கள்வர் கூட்டத்தினருடைய தாக்குதல்களிலிருந்து, அரசரைக் காப்பாற்றுவதற்காக, காவல் படையினரை, ஆர்னால்டு, விழிப்புடன் நடத்திச் சென்றார். பிரனீஸ் மலைப்பகுதியில் வசித்து வந்த கொள்ளையர்கள், பயணிகளை கொள்ளையடித்து, அவர்களைக் கொல்வதை, வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
பயணத்தின்போது, ஒரு ஆபத்தான கட்டத்தில், அரசரைக் கொள்ளைக் கூட்டத்தினர் சூழ்ந்தனர். இதைக்கண்ட தலைமைப் பாதுகாவலர் ஆர்னால்டு, தனது காவல் படையினருடன் அங்கு விரைந்துச் சென்று, அதிரடியாகக் கொள்ளையரைத் தாக்கிச் சிதறடித்தார். கொள்ளையர் தலைவனுடன், நேருக்கு நேரான தாக்குதலில், ஆர்னால்டு ஈடுபட்டார். அப்போது, இருவரும் ஒருவர் ஒருவரை வாளால் தாக்கினர்; தந்தையும் மகனும் நேரடிச் சண்டையில் ஈடுபட்டனர்; யாரைத் தாக்குகிறோம் என்பதை உணர்ந்ததும், இருவரும் மன சஞ்சலத்துடன் போரிட்டனர். உச்சக் கட்ட சண்டையின் போது, மிகுந்த மனஸ்தாபத்துடன், கொள்ளையரின் தலைவனாகிய பீட்டர், தந்தையின் முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து அழுதபடி, தன் வாளை கீழே வைத்து, சரணடைந்தார்; தன் இருதயத்துடன் கூட, தந்தையிடம், பீட்டர் முழுமையாக சரணடைந்தார்.
குழப்பமும், வெட்கமும் நிரம்பியவராக, பீட்டர், தன் கடந்த கால பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டார்; அவற்றைப் பரிகரிப்பதற்காக, தபசு செய்தார்; சில நாட்களில், பார்சலோனாவிலிருந்த இரக்கத்தின் சந்நியாசிகளுடைய ஓர் மடத்தில் சந்நியாசியாக சேர்ந்தார். அப்போது, அவர், தன் பாவங்களால், சர்வேசுரனுக்கு ஏற்பட்ட நிந்தைகளுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்ற ஓர் மாபெரும் ஆவலினால் மேற்கொள்ளப்பட்டார்; மகமதியர்களால், சிறை பிடிக்கப்பட்ட கத்தோலிக்கக் கிறீஸ்துவர்களை விடுவிப்பதற்காகவே, அர்ச்.பீட்டர் நொலாஸ் கோ ஏற்படுத்திய துறவற சபையில் ஒரு துறவியாக சேரத் தீர்மானித்தார். அவர் எவ்வித ஆவலுடன் தன் இருதய ஆவலையும், அதைத் தீர்மானிப்பதற்கான அத்தாட்சிகளையும் கூறினாரென்றால், அதைக்கேட்ட அதிபர், வண. வில்லியம் தே பாஸ் (அர்ச்.பீட்டர் நொலாஸ்கோவிற்குன் அடுத்ததாக, சபையை நிர்வகித்த அதிபர்) தடையேதுமில்லாமல், உடனே, பீட்டரைத் தனது சபையில் ஏற்றுக்கொண்டார். இதுவரை, மூர்க்கத்தனத்திற்கும், வன்முறைக்கும் தன் ஆளுமையையும் திறமையையும், தேக பலத்தையும் கையளித்திருந்த பீட்டர், தற்போது, துறவற ஜீவியத்தில், அதற்கு முற்றிலும் நேர்மாறாக, தன்னையே ஒறுத்து, உடனுக்குடன் ஞான அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிவதிலும், சபை ஒழுங்கை நுட்பமாகவும், கவனமாகவும் அனுசரிப்பதிலும் ஈடுபட்டார். தன் பழைய பாவ நாட்டங்களை, சரீர ஒறுத்தல்களால், தபசுமுயற்சிகளால், இடைவிடாத ஜெபங்களால், எவ்வாறு, மேற்கொள்வது, என்பதையும், நாளடைவில், அறிந்து கொண்டார். நவசந்நியாச பயிற்சி முடிவதற்குள், தன் சரீரத்தையும் மனதையும், முழுமையாக மேற்கொண்டு, அவற்றை தேவசித்தத்திற்கும், உத்தமமான அறிவிற்கும், கீழ்ப்படியச் செய்வதில் வெற்றியடைந்தார். கிறீஸ்துவர்களை, மகமதியரின் அடிமைத்தனத்திலிருந்து மீட்பதற்கான முக்கிய அலுவலில், 8 வருடங்கள் அயராமல் உழைத்தார்.
மகமதியரின் ஆதிக்கத்திலிருந்த இஸ்பானிய பிராந்தியங்களான கிரானடா மற்றும் முர்சியா பகுதிகளுக்குச் சென்று, அங்கிருந்த கிறீஸ்துவ அடிமைகளை மீட்கும் அலுவலில் ஈடுபட்டுவந்தார்..
அர்ச். பீட்டர் நொலாஸ்கோ ஏற்படுத்திய உபகார மாதா சபையில், சேர்ந்த பீட்டர் ஆர்மங்கல், மகமதியர்களால் சிறைபிடிக்கப்பட்ட கிறீஸ்துவர்களை மீட்கும் அலுவலில் தீவிரமாக உழைத்து வந்தார். ஆப்ரிக்கா சென்று, மகமதியருக்கு தன்னையே அடிமையாக விற்று, அந்த மீட்புத் தொகையைக் கொண்டு, அடிமைகளாக இருக்கும் திரளான கிறீஸ்துவர்களை விடுவிக்க வேண்டுமென்பதே, அவருடைய இருதயத்தின் மாபெரும் ஆவலாக இருந்தது. அவருடைய ஆவலை நிறைவேற்றும் விதமாக விரைவிலேயே, ஒரு கப்பல் ஆப்ரிக்காக் கண்டத்திற்குப் புறப்பட்டது. அதில், சங்.வில்லியம் ஃபுளோரன்டினோ, என்ற சக துறவியுடன், அவர், பயணம் செய்தார். ஆப்ரிக்காவின் பூஜியா நகரை அடைந்தனர்.
இரு துறவியரும், உடனடியாக, அந்நகரில் அடிமையாயிருந்த 119 கிறீஸ்துவர்களை, மீட்புத்தொகையைக் கொடுத்து மீட்டனர்; எந்தத் தடையுமில்லாமல், கிறீஸ்துவர்களைத் துறைமுகத்திற்குக் கூட்டி வந்தனர்; பயணத்தைத் துவக்குவதற்கு முன், இன்னொரு சிறையில், 18 சிறுவர்கள், இருப்பதைப்பற்றி, பீட்டர் அறிந்தார்; அச்சிறுவர்கள், காட்டுமிராண்டிக ளான மகமதியரின் கொடூரமான சித்ரவதைகளுக்கு உட்பட்டு, கிறீஸ்துவ வேதத்தையே, மறுதலிக்கும் அபாயத்திலிருப்பதையும் அறிந்தார்; அவர்களை மீட்பதற்கான மீட்புத்தொகையாக, தன்னையே அடிமையாக ஏற்றுக்கொள்ளும்படி, பீட்டர், அக்கொடிய மகமதியரிடம் தன்னையே கையளித்தார். ஏனெனில், அவரிடம், சிறுவர்களை மீட்பதற்காக, போதிய பணம் இல்லாமலிருந்தது பீட்டரை குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவிப்பதற்கான தொகையை மகமதியர், அவரிடம் அறிவித்தனர்; அக்குறிப்பிட்ட காலத்திற்குள், மீட்புத் தொகையை செலுத்தாவிட்டால், அவர் இன்னும் அதிகக் கடுமையான தண்டனைகள் அனுபவிக்க நேரிடும் என்று எச்சரித்தனர். இதைப் பற்றியறிந்த சக துறவியான வில்லியம், விடுவிக்கப்பட்ட கிறீஸ்துவர்களுடன் சொந்த நாட்டிற்குத் திரும்பினார். சர்வேசுரனுடைய பரிசுத்த ஊழியரான பீட்டரை, அவர் மகா பரிசுத்த தேவமாதாவின் மீது கொண்டிருந்த விசேஷ பக்தியுடையவும், அவர்களின் வல்லமை மிகுந்த பாதுகாப்பின் மீது கொண்டிருந்த அசையாத நம்பிக்கையினுடையவும், அத்தாட்சியாக திகழும்படியாக, தேவபராமரிப்பு இனிவரும் ஒரு முக்கியமான நிகழ்விற்கு இட்டுச் சென்றது:
அடிமையாக இருந்தபோது, பீட்டர், அஞ்ஞான மகமதியரிடையே, வியக்கத்தக்க புதுமைகள் நிறைந்த பிறர்சிநேகக் காரியங்களில் ஈடுபட்டார். கேட்பவர் மனதில் தேவசிநேகத்தை பற்றியெரியச் செய்யும் விதமாக, அவர், ஆண்டவர் ஸ்தாபித்த சத்திய வேதத்தைப் பற்றிப் பிரசங்கம் செய்தார்; அநேக புதுமைகள் செய்தார்; இவற்றையெல்லாம் கண்ட அநேக மகமதியர் மனந்திரும்பினர்; பீட்டரை மீட்பதற்கான காலக்கெடு முடிந்தது. மீட்புத் தொகை வந்து சேரவில்லை. மகமதியர் உடனே, அவரை சிறையில் அடைத்தனர். அங்கு அவருக்கு உணவு அளிக்கப்படவில்லை. கொடிய சித்ரவதைகளால், அவரை உபாதித்தனர்; ஆனால், சர்வேசுரன், புதுமையாக, தமது பிரமாணிக்கமுள்ள ஊழியருக்கு, சம்மனசுகள் மூலம், புதுமையாக உணவை அளித்தார். முரட்டுமூர் இன மகமதியர், இடைவிடாமல், தொடர்ந்து, அவரைக் கொடுமை செய்து, அலுத்து சோர்வடைந்தனர்; அர்ச்சிஷ்டவரோ புதுமையாக, அவ்வளவு கொடுமைகளுக்கும் மத்தியில் பொலிவுடன் திகழ்ந்தார். இதைக் கண்டதும், அவரை இரகசியமாகக் கொல்வதற்கு திட்டமிட்டனர்.
தேவதூஷணம் கூறினார் என்றும், தங்களுடைய மதத்தை ஏற்படுத்திய மகமதை அவ தூறாக பேசினார் என்றும், கிறீஸ்துவ ஐரோப்பிய அரசர்களுடைய ஒற்றனாக மகமதிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார் என்றும், மகமதியர், அர்ச்சிஷ்டவர் மீது குற்றம் சுமத்தினர். மகமதிய நீதிபதி, சிறைக்கைதியான அர்ச். பீட்டர் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் எல்லாம் உண்மை என்று கூறி, அவரைத் தூக்கிலிட்டுக் கொல்வதற்கான தீர்ப்பை அளித்தான். இதைக் கேட்டதும், சற்றும் பயப்படாமல், அர்ச். பீட்டர், தேவமாதாவிடம் , மிகுந்த பக்தி பற்றுதலுடன், தன்னையே ஒப்புக்கொடுத்து வேண்டிக்கொண்டார்; தேவமாதாவிடம், தன் முழு நம்பிக்கை யையும் வைத்தார். திரளான முரட்டு மகமதியரின் கைகளில் பிடிப்பட்டிருக்கும் அர்ச். பீட்டரால் தன்னை குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதற்கு, ஒன்றும் செய்யமுடியாமல் போனது. திரளான முரட்டு மகமதியக் கூட்டத்திற்கு முன், இவர் ஒன்றுமில்லாத ஒரு தூசி போல காணப்பட்டார்.
ஆனால், அதே சமயம், உண்மையில், இவர், தேவமாதாவின் பேரில் ஆழ்ந்த பக்தியுடையவும், நம்பிக்கையுடையவும், பற்றியெரியும் தீப்பந்தமாகத் திகழ்ந்தார். மகமதியரின் அநீதமான தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது. அர்ச்சிஷ்டவரை தூக்கிலிட்டுக் கொன்றனர். தூக்கிலிடப்பட்டு இறந்து போயிருந்த அர்ச்சிஷ்டவரின் சரீரத்தை, பறவைகளுக்கு இரையாகப் போட திட்டமிட்டிருந்த கொடிய மூர் இனத்தினரான மகமதியர், அதை யாரும் தொடக்கூடாது என்று எச்சரித்திருந்ததால், கிறீஸ்துவர்கள் யாரும், அர்ச்சிஷ்டவரின் சரீரத்தை, தூக்கு மரத்திலிருந்து எடுக்காமலிருந்தனர்; அர்ச்சிஷ்டவரின் சரீரமும் அப்படியே தூக்கு மரத்திலேயே, ஆறு நாட்களாக தொங்கிக் கொண்டிருந்தது. அச்சமயம், அர்ச்சிஷ்டவருடைய சக துறவி, சங். வில்லியம், மீட்புத் தொகையுடன் வந்து சேர்ந்தார். அர்ச்சிஷ்டவர் அநியாயமாக தூக்கிலிடப்பட்டதைப் பற்றிக் கேள்விப்பட்டதும், மிகுந்த துயரத்துடன், விடுவிக்கப்பட்ட வேறு சில கிறீஸ்துவ கைதிகளுடன், வில்லியம் தூக்கு மரத்தை நோக்கிச் சென்றார்; அர்ச்சிஷ்டவரின் சரீரம் ஆறு நாட்களுக்குப் பிறகும் கூட, சிதைந்து போகாமல், புதுப்பொலிவுடன் உயிருடன் இருப்பது போல் காட்சியளித்தது; அவருடைய சரீரத்திலிருந்து, பரலோக நறுமணம் புதுமையாக வெளியேறுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.
அப்போது, கூடியிருந்த சகலரும் அதிசயிக்க, அர்ச்சிஷ்டவர், தூக்குமரத்தில் தொங்கியபடியே, வாய்திறந்து புதுமையாகப் பேசினார்:"பரலோக இராக்கினியாகிய தேவமாதா தாமே, என் உயிரை, இந்த மகா பயங்கரமான கொடூரமான சூழலில், பாதுகாத்துக் காப்பாற்றி வந்தார்கள்; தாம் செய்த அதிசயமான புதுமைகளிலேயே, எப்போதும் அழியாமல் நீடித்து நிலைத்திருக்கும்படியான ஓர் மிகப் பெரிய புதுமையாக, இந்த அற்புதத்தை நிகழ்த்தியுள்ளார்கள், என்று கூறினார். இந்தப் புதுமையைக் கண்டு, பேராச்சரியத்தில் மூழ்கிய மகமதியரில் பலர் மனந்திரும்பி, கத்தோலிக்கராயினர்.
பார்சலோனா நகர மக்கள், இப்பேரதிசயமான புதுமையைப் பற்றிய செய்தியை அறிந்து, எவராலும் வெல்லமுடியாதவரும் நமதாண்டவருடைய வேதசாட்சியுமான அர்ச்சிஷ்டவரின் வருகைக்காக, மிகுந்த ஆர்வத்துடன், காத்திருந்தனர். துறைமுகத்தைக் கப்பல் அடைந்ததும், கூடியிருந்த திரளான நகர மக்கள் எல்லோரும், விவரிக்க முடியாத சந்தோஷத்துடன், அர்ச்சிஷ்டவரை வரவேற்றனர்; பிறகு, அவருடன் கூட, அவருடைய மடத்தை அடையும் வரை, ஊர்வலமாக, சர்வேசுரனும், தேவமாதாவும் தங்களுக்குச் செய்து வரும் பேராச்சரியமிக்க நன்மைகளுக்கு நன்றி செலுத்தியபடியேச் சென்றனர். மடத்திலிருந்த சக துறவியர், அர்ச்.பீட்டரிடம், நிகழ்ந்த புதுமையைப் பற்றிக் கூறும்படிக் கேட்டனர். அதற்கு, அவர் ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்தார். இறுதியில், அதிபர் சுவாமியார், கீழ்ப்படிதலின் பேரில், நடந்ததைக் கூறும்படிக் கட்டளையிட்டார். உடனே, சர்வேசுரனுடைய பரிசுத்த ஊழியர், பின்வருமாறு பதில் கூறினார்: "சர்வேசுரனுடைய மாதாவும், நம்முடைய பரிசுத்த மாதாவுமான மகா பரிசுத்த கன்னிகையானவர்கள், தமது மகா பரிசுத்த திவ்யகுமாரனிடம், என்னுடைய உயிரைப் பாதுகாக்கும்படியான விசேஷ வரத்தைக் கேட்டார்கள். அந்த வரப்பிரசாதத்தைப் பெற்றதும், உன்னத பரலோக இராக்கினியானவர்கள், தூக்குக் கயிறு என் கழுத்தை இறுக்கி விடாமலிருப்பதற்காக, தம்முடைய மகா பரிசுத்தக் கரங்களினால், என் சரீரத்தைத் தாங்கிக் கொண்டார்கள்" என்று கூறினார்.
அர்ச். பீட்டர், மோட்ச இராக்கினி, தான் தொங்கிக் கொண்டிருந்தத் தூக்குக் கயிறு, தனது கழுத்தை இறுக்கி விடாமலிக்கும்படி, தனது சரீரத்தைத் தாங்கிக் கொண்டார்கள் என்று கூறிய போது, எத்தகைய இனிமையான உணர்வைத் தன் இருதயத்தில் உணர்ந்தாரென்றால், கூடியிருந்த யாவரும் வியந்து பாராட்டும் விதமாக, ஓர் பரவசத்திற்குள் மூழ்கினார். இந்நிகழ்விலிருந்து, அர்ச். பீட்டர் கழுத்தில், தூக்குக் கயிறு இறுக்கிய அச்சு பதிந்திருந்தது; தூக்குக் கயிற்றினால் திருகப்பட்ட கழுத்தையுடையவராகவே, எஞ்சிய தன் வாழ்நாள் முழுவதும், காணப்பட்டார். அவருடைய நிறமும் வெளிறிய நிறமாக மாறியிருந்தது. இவை இரண்டும், அவருடைய வாழ்வில், தேவமாதா நிகழ்த்திய மாபெரும் புதுமையின் அதிகாரப்பூர்வமான அடையாளங்களாக திகழ்ந்தன. பரலோக இராக்கினியின் மடத்தில், அர்ச்சிஷ்டவர் தன் வாழ்வின் மீதி நாட்களை செலவழித்தார். இம்மடத்தில், இவருடைய ஜீவியம், விரத்தத்துவ புண்ணியங்களுடையவும், சம்மனசுகளின் இராக்கினியான தேவமாதாவுடன் நிகழ்த்திய உரையாடல்களுடையவும், இடைவிடாமல் நீடித்த தொடர் நிகழ்வுகளால் நிறைந்திருந்தது. தேவமாதாவின் பேரில் மிகுந்த மேரையும், சிநேக மிக்க கனிவும், உத்தமமான பக்தியும் கொண்ட அர்ச்சிஷ்டவர்களுக்குள், இவரும் ஒரு முக்கிய அர்ச்சிஷ்டவராக விளங்கினார், என்பதை, மோட்ச இராக்கினியுடன் அவர் செய்த உரையாடல்கள், உறுதிப்படுத்துகின்றன.
தூக்குக் கயிற்றில், தேவமாதாவின் பரிசுத்தத்திருக்கரங்களினால் தாங்கப்பட்டபடி, தொங்கிய அந்த பாக்கியமான நாட்களை, அர்ச்சிஷ்டவர், வாழ்நாள் முழுவதும், எப்போதும் மகிழ்வுடன் சிந்திப்பார்; புதுமையைப் பற்றி, சக துறவியரிடம் கூற வேண்டிய சந்தர்ப்பங்களில், "என் பிரிய சகோதரர்களே! என்னை நம்புங்கள். நான் உயிருடன் இருந்தேன், என்பதை என்னால் நம்ப முடியவில்லை. துாக்கு மரத்தில், இறந்துவிட்டேன் என்று கருதப்பட்டு, நான் தொங்கிக்கொண்டி ருந்த அந்த மிகச் சில ஆனால், மகா பாக்கியமான நாட்கள் மட்டுமே, என் ஞாபகத்தில் இருக்கின்றன. அதை நான் நம்புகிறனே", என்று கூறுவார்.
ஒரு மிகக் கொடிய நோயினால், பாதிக்கப்பட்டார்; தன் மரணத்தின் நாளை தீர்க்கதரிசனமாக வெளிப்படுத்தினார். 1304ம் வருடம், ஏப்ரல் 27ம் தேதியன்று, தனது 66வது வயதில் பாக்கியமாக ஆண்டவரில் மரித்தார். அர்ச்சிஷ்டவருடைய சரீரம் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னதாகவே, 3 ஆண்களுக்கும் 4 பெண்களுக்கும் நோயிலிருந்து புதுமையாக சுகம் கிடைத்த அற்புதத்தை, ஆண்டவர் நிகழ்த்தி, அர்ச்சிஷ்டவரை மகிமைப்படுத்தினார். 1686ம் வருடம், மார்ச் 28ம் தேதியன்று, 11ம் இன்னசென்ட் பாப்பரசர், இவருக்கு அர்ச்சிஷ்டப்பட்டம் கொடுத்தார்; 18ம் நூற்றாண்டில், 14ம் ஆசீர்வாதப்பர் பாப்பரசர், அர்ச். பீட்டர் ஆர்மங்கலை, வேதசாட்சிகளின் பட்டியலில் சேர்த்தார். 1936ம் வருடம் வரை இவருடைய சரீரம் அழியாத சரீரமாகத் திகழ்ந்தது. 1936ல்ஸ்பெயினில் நிகழ்ந்த கலகத்தின் போது, கம்யூனிஸ்டுகள், அர்ச்சிஷ்டவருடைய அழியாத சரீரத்தை எரித்து சாம்பலாக்கினர். அங்கிருந்த சில பக்தியுள்ள கத்தோலிக்க இளைஞர்கள், இந்த சாம்பலை அருளிக்கமாக, தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். உள்நாட்டுப் போர் முடிவடைந்ததும், மறுபடியும் அர்ச்சிஷ்டவருடைய இந்த அருளிக்கங்கள், வீடுகளிலிருந்து, தேவாலயத்திற்கு எடுத்து வரப்பட்டு, பொது வணக்கத்திற்காக வைக்கப்பட்டிருக்கின்றன.
Nice
பதிலளிநீக்கு