நவம்பர்
2️2️
வேதசாட்சியும்
கன்னிகையுமான
(அழியாத
சரீரமுடைய முதல் அர்ச்சிஷ்டவள்)
கி.பி.177ம் வருடம் கத்தோலிக்க
வேத விசுவாசத்திற்காக கொடூர உபத்திரவங்கள் பட்டு, வேதசாட்சியாக மரித்த இந்த இளம்
அர்ச்சிஷ்ட வள், பரிசுத்த கற்பு என்கிற மகா அழகிய நறுமண மலர்களான கிறீஸ்துவ கன்னிகையர்களும்
வேதசாட்சிகளுமானவர்களில் மிக முக்கியமான வேதசாட்சியாக திகழ்கின்றார்.
அர்ச் செசிலியம்மாள், உரோமை
நகரின் மிகவும் பிரசத்திபெற்ற பத்ரீசியாரின் மகளாகப் பிறந்தார்.இவர் மட்டுமே,
இவருடைய குடும்பத்தில் கிறீஸ்துவளாக இருந்தார். சுரங்கக் கல்லறைக் கோவிலில் நிகழ்ந்த
கத்தோலிக்க ஜெபவழிபாடுகளில் செசிலியம்மாள் கலந்துகொண்டார். செசிலியம்மாளுடைய பெற்றோர்கள்,
ஒன்றில், மகள் மேல் இரக்கப்பட்டு, அதற்கு அனுமதித்திருக்க வேண்டும்; அல்லது, மகள்
மேல் அக்கறையில்லாதவர்களாக இருந்திருக்க வேண்டும்.
இளமையிலேயே அர்ச். செசிலியம்மாள்,
தன் கன்னிமையை ஆண்டவருக்கு அர்ப்பணித்து ஒப்புக்கொடுத்திருந்தார்; பரிசுத்த கற்பின்
வார்த்தைப்பாட்டை எடுத்திருந்தார். இருப்பினும், செசிலியின் பெற்றோர்கள், அஞ்ஞானியான
ஒரு இளம் உயர்குடிமகனான வலேரியனுக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமண நாளன்று
மாலையில், திருமண விருந்திற்கான இசை இன்னும் காற்றில் மிதந்து கொண்டிருந்த நேரத்தில்,
உரோமாபுரியின் உயர்குடி மகளும் அறிவிலும் அழகிலும் சிறந்து விளங்கிய இளம் கன்னிகையுமான
செசிலியம்மாள், தனது கன்னிமை விரதத்துவத்தைப் புதுப்பித்தார்.
அதே திருமண நாளின் மாலை நேரத்தில்,
வலேரியனிடம், செசிலி, தான் கன்னிமை விரதத்துவத்தின் வார்த்தைப்பாட்டை சர்வேசுரனுக்கு
அளித்திருப்பதாகவும், அதற்காக ,தன்னை தனது காவல் சம்மனசானவர் பாதுகாப்பதாகவும்
கூறினார். மேலும், வலேரியனிடம், செசிலியம்மாள், “நீங்கள் என்னிடம் அணுகி வந்தால்,
அது, என் காவல் சம்மனசானவருக்குக் கோபத்தைத் தூண்டக்கூடும்; அதன் காரணமாக, உம்மை
பழிவாங்கும் படியாக அவரின் தாக்குதல்களுடைய அடிகளுக்கு நீர் ஆளாகக் கூடும்!” என்று
கூறினார்.
அதற்கு வலேரியன், “நான் உன்னுடைய
காவல் சம்மனசானவரைக் காண்பேனாகில், உன்னுடைய விருப்பத்தின்படி நான் நடந்துகொள்வேன்!”
என்று கூறினார். அதற்கு செசிலியம்மாள், “நீர், கத்தோலிக்கனாக மாறுவீர் என்றால்,
நிச்சயமாக என் காவல் சம்மனசானவரைக் காண்பீர்!”, என்று வாக்குறுதி அளித்தார்;
அதன் பின்,வலேரியனை, உர்பன்
பாப்பரசரிடம் செசிலியம்மாள் கூட்டிச் சென்றார்; ஞானஸ்நானம் பெறும்படியாக, அன்றிரவே,
தன்னிடம் வந்த வலேரியன் மட்டில், பரிசுத்த பாப்பரசர் வெகுவாக சந்தோஷமடைந்தார்;
ஞான உபதேசத்தைக் கற்பித்தார்; ஞானஸ்நானத்தையும் அன்றிரவே பாப்பரசர், வலேரியனுக்கு
அளித்தார்; கிறீஸ்துவராக வலேரியன் தனது மாளிகைக்குத் திரும்பி வந்தார்; தன் இல்லத்தை
அடைந்ததும், வலேரியன், செசிலியம்மாளுடைய காவல்சம்மனசானவரை மெய்யாகவே கண்டார்; காவல்
சம்மனசானவர் தன் இருகரங்களிலும் இரண்டு ரோஜா மலர் கிரீடத்தை வைத்திருப்பதைக் கண்டார்;
வலேரியனுக்கும், செசிலியம்மாளுக்கும், அவர்களுடைய தலைகளில், காவல் சம்மனசானவரே,
அந்த ரோஜா மலர்கிரீடங்களைச்சூடினார்.
விரைவிலேயே அவர்கள் இருவரும்
வேதசாட்சிய முடியைப் பெறப் போகிறார்கள் என்பதை, அர்ச்.செசிலியம்மாள் உடனே புரிந்துகொண்டார்.
அச்சமயம், சர்வேசுரனிடமிருந்து எந்த தேவ வரப்பிரசாதத்தையும் வலேரியன் பெற்றுக்கொள்ளலாம்.
சர்வேசுரன் வலேரியன் மட்டில் மிகவும் மகிழ்வடைந்திருக்கிறார், என்று, அறிவிக்கப்பட்டது.
உடனே, வலேரியன், தான் பெற்ற இந்த தேவ வரப்பிரசாதத்தை, தன் சகோதரனான திபூர்ஷியுசும்
பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பி, அந்த விருப்பத்தை விண்ப்பித்தார். உடனே வலேரியனுடைய
விருப்பத்தின்படி, அவருடைய சகோதரனான திபூர்ஷியுசும் கத்தோலிக்கனாக மனந்திரும்பினார்.
இரு சகோதரர்களும், பெரிய செல்வந்தர்களாக இருந்ததால், வேத சாட்சிய மரணத்தினால், தந்தையை,
தாயை, பெற்றோர்களை, மகன்களை இழந்துபோன கிறீஸ்துவக் குடும்பங்களுக்கு பொருள் உதவி செய்வதிலும்,
அவர்களை ஆதரிப்பதிலும், வேதசாட்சிகளாக உயிரிழந்த கிறீஸ்துவர்களை அடக்கம் செய்வதிலும்
ஈடுபட்டு, இறுதியில் அதே வேதசாட்சிகளாக மரிப்பதற்கும் துணிந்தனர்.
அதன் விளைவாக, விரைவிலேயே
அவர்கள் இருவரும் சிறை பிடிக்கப்பட்டனர்; இவ்விரு சகோதரர்களும் வேதசாட்சிகளாகக்
கொல்லப்பட வேண்டிய இடத்திற்குக் கூட்டிச் சென்ற இராணுவ அதிகாரியான மாக்சிமுசையும்
மனந்திருப்பினர்; வழியில் இவர்கள் மெய்யான சர்வேசுரனைப் பற்றிய ஞான உபதேசத்தைக்
கேட்ட மாக்சிமுஸ் மனந்திரும்பி கிறீஸ்துவ விசுவாசத்தை ஏற்றுக்கொண்டார். இவர்கள்
இருவரையும் கொல்வதற்கான அதிகாரியான மாக்சிமுஸ், மரண தண்டனையை ஒரு நாளைக்குத் தள்ளிப்போட்டு
விட்டு, இவர்கள் இருவரையும் தன் வீட்டிற்குக் கூட்டிச் சென்றார்; தன் குடும்பத்தாருடனும்
வீட்டாருடனும், சேர்ந்து ஞானஸ்நானம் பெற்று, கிறீஸ்துவன் ஆனார். வலேரியன், திபூர்ஷியுஸ்
மற்றும் அவர்களால் கிறீஸ்துநாதரிடம் கூட்டிவரப்பட்ட மாக்சிமுஸ் ஆகிய மூவரும் தலைவெட்டி
வேதசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர்.
அச்சமயம், செசிலியம்மாள்,
கைதுசெய்யப்பட்டு, உயிருடன் எரித்து கொல்லப்படும்படியான தண்டனைத் தீர்ப்பை அடைந்தார்.
ஆனால், நெருப்பு செசிலியம்மாளைத் தீண்டவில்லை! ஆதலால், தலைவெட்டிக் கொல்லப்பட்டார்.
ஆனால், கொலைக்காரன், செசிலியம்மாளின் கழுத்தை நடுங்கியபடி வெட்டியதால், கழுத்து
முழுமையாக வெட்டுப்படாமல் அரைகுறையாக வெட்டப்பட்டு, செசிலியம்மாள்; கீழே கிடந்தார்;
இரண்டு நாட்கள் உயிருடன் இருந்து, கொடிய அவஸ்தைப் பட்டார்.
அர்ச். செசிலியம்மாளுடைய பரிசுத்த
அழியாத சரீரம், பிரடக்ஸ்டாடுஸ் என்ற சுரங்கக் கல்லறையில், 600 வருடங்கள் கழித்து,
கி.பி.822ம் வருடம், முதலாம் பாஸ்கல் பாப்பரசரால் கண்டுபிடிக்கப்பட்டது. 1599ம்
வருடம் மறுபடியும், அர்ச்.செசிலியம்மாளின் பரிசுத்த சரீரம் அழியாமல் இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டது!
அர்ச்.செசிலியம்மாளே! அர்ச்.வலேரியனே!
அர்ச்.திபூர்ஷியஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!