Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

அர்ச். நொலாஸ்கி ராயப்பர் திருநாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அர்ச். நொலாஸ்கி ராயப்பர் திருநாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

அர்ச். நொலாஸ்கி ராயப்பர் திருநாள். St. PETER NOLASQUE.

சனவரி மாதம் 31-ந் தேதி. 
அர்ச். நொலாஸ்கி ராயப்பர் 
St. PETER NOLASQUE (1189-1256)
துதியர்



அர்ச். நொலாஸ்கிராயப்பர் பிரான்ஸ் இராச்சியத்திலே உத்தம குலத்தவரான தாய் தகப்பனிடமிருந்து பிறந்தார். அவர்  குழந்தையாயிருக்கையில் அவரிடத்தில் சில அதிசயமான காரியங்கள் சம்பவித்தன. அவையாவன: தேன் ஈக்கள் கூட்டமாய்ப் பறந்து அந்தக் குழந்தையின் அருகில் வந்து அதின் வலது கையிலே மொய்த்துத் தேன் இராட்டை உண்டாக்கிற்று. அந்தக் குழந்தையை யாதொரு பதிதன் பட்சத்தினாலே கையில் ஏந்திக்கொள்ளுஞ் சமயத்திலே அது முகத்தைத் திருப்பிக்கொண்டு தன் சிறு கையினாலே அவனைத் தள்ளும். ஆனால் சத்திய திருச்சபைக்குட்பட்ட யாதொரு குரு அந்தக் குழந்தையைக் கையிலே ஏந்தினால் அது சந்தோஷமாய்ப் போகும். இந்த ஆச்சரியமான காரியங்களைக் கண்டவர்கள் பிற்காலத்தில் அவருக்கு வரப்போகிற அர்ச்சியசிஷ்டதனத்தின் அடையாளம் இப்போதுதானே காணப்படுகிறது என்பார்கள். சிறு வயது துவக்கி அவர் வெகு விருப்பத்தோடே தரித்திரர்களுக்குத் தருமஞ் செய்துகொண்டு வந்தார். எப்போதும் விரத்தராயிருக்க வார்த்தைப்பாடு செய்து கற்போடே மற்றச் சகல புண்ணியங்களையும் அநுசரித்துவந்தார்.

 அவருக்கு வாலிப வயது நடக்கிறபோது அவருடைய தாய் தகப்பன் இறந்து போனார்கள், அவர் இருந்த நாட்டிலே அல்பிழென் சேஸென்கிற பதிதர் மிகவும் பலத்ததினாலேயும் அர்ச். கொலாஸ்கி ராயப்பர் அந்தப் பதிதர்மேலே வெகு அருவருப்பாயிருந்ததினாலேயும் அந்தப் பதிதர் இருந்த சீமையைவிட்டு அப்புறம்போக மனதாயிருந்து தமது உடமையெல்லாம் விற்றுப்போட்டுத் தாம் எஸ்பானியா ராச்சியத்திலுள்ள செறாத்தென்கிற மலையிலுள்ள தேவமாதாவின் கோவிலுக்குப் பயணமாய்ப் போனார். அப்படிக்கொத்த பயணம் பசாசுக்குப் பொருந்தா ததினாலே பசாசுகள் மனுஷரூபமாய் அவருக்குக் தரிசனையாகி, வழியிலிருக்கிற கள்ளர் உன்னைப் பிடித்து உன் தட்டுமுட்டைப் பறித்துக்கொண்டு  உன்னைக் கொன்று போடுவார்கள், ஆகையால் நீ அப்புறம் போகாதே, என்று சொல்லிப் பயம் வருவிக்கப் பிரயாசப்பட்டன. அதற்கு அர்ச். நொலாஸ்கிராயப்பர், அந்தப் பொல்லாப்பிலே நின்று சேசுநாதர் என்னை இரட்சிப்பாரென்றார். அந்த வார்த்தை கேட்டவுடனே பசாசுகள் அக்ஷணத்திலே பொறுக்கக் கூடாத நாற்றம் வீசிக் காணாமற்போயின.

அவர் முன்சொல்லப்பட்ட கோவிலைச் சேர்ந்து அதை மகா பத்தியோடே சேவித்த பிற்பாடு பர்செலோனென்கிற பட்டணத்துக்குப் போனார். அதிலே துலுக்கர் கையிலே அகப்பட்ட அநேக கிறீஸ்துவர்கள் துலுக்கர் பண்ணின நிஷ்டூரத்தினாலே கிறீஸ்துநாதருடைய திருவேதத்தை விட்டுத் துலுக்கர் மதத்தில் உட்படக் கிட்டின தறுவாயாயிருக்கிறதை அவர் கண்டு அவர்கள் ஆத்துமத்தையுஞ் சரீரத்தையும் இரட்சிக்கத்தக்கதாக அவர்களை மீட்கத் தமது கையிலிருந்த பணமெல்லாஞ் செலவழித்தார். மேலும் மற்றப் பேரை மீட்கத் தமக்கு வகையில்லையென்று கண்டு அவர்களை மீட்கிறதற்கு ஆச்சரியமான உபாயம் நினைத்தார். அதாவது: தாம் விலைபட்டு அந்தப் பணத்தைக்கொண்டு அவர்களை மீட்கிறதற்காகிலும், அல்லது அவர்களை விடுவித்து அவர்களுக்குப் பதிலாய் அந்த விலங்கிலே தாம் இருக்கிறதற்கென்கிலும் ஆசையாய் இருந்தார். அவர் கொண்ட அப்படிக் கொத்த நல்ல மனதின்பேரிலே சர்வேசுரன் தமக்குண்டான பிரியத்தைக் காண்பிப்பதற்காக புதுமை பண்ணினார்.

அதெப்படியென்றால் அர்ச். இராயப்பர் ஒரு இராத்திரி தியானத்தில் இருக்கிறபோது மோட்ச விராக்கினி அவருக்குத் தரிசனையாகி, வேதங் கேளாதவர்களிடத்தில் அடிமையாயிருக்கிற கிறீஸ்துவர்களை மீட்கிறதை நோக்கமாகக் கொண்டு ஒரு சபை நம்மைக் குறித்து நீ உண்டாக்கினால் அந்தப் புண்ணியம் நமது திருக்குமாரனுக்கும் நமக்கும் வெகு பிரியமாயிருக்கு மென்று சொல்லி மறைந்தாள். அவர் அதைக் கேட்டுத் தேவமாதாவின் உதவியால் உடனே அந்தச் சபையை உண்டாக்கினார். அப்படிக்கொத்த சபையில் உட்பட்டவர்கள் கிறீஸ்துவர்களிடத்திலே பிச்சை வாங்கி அந்தப் பணமெல்லாம் முன் சொல்லப்பட்ட அடிமைகளை மீட்கிறதிலே செலவழிப்பதுமல்லாமல், பணமில்லாத சமயத்திலே மேற்சொல்லிய அடிமைகளை மீட்க வேண்டிய அவசரமிருந்தால் தாங்கள் அடைமானமாயிருந்து அவர்களை விடுவிக்க வார்த்தைப்பாடு கொடுப்பார்கள்.
அர்ச் இராயப்பர் உண்டாக்கின அப்படிக் கொத்த சபையைக்கொண்டு திருச்சபைக்கு வந்த நன்மை இவ்வளவு என்று வரையறுக்கமுடியாது. இதல்லாமல் அவர் வரு காரியங்களைத் தீர்க்க வருங் தரிசிபோலே அநேகம்விசை வெளிப்படுத்துவார். தேவமாதாவுங் காவலான சம்மனசும் அநேகம்விசை தமக்குத் தரிசனையாவதினால் அவர் வெகு சந்தோஷத்தை அடைவார். துலுக்கருடைய அடிமைத்தனத்தில் இருந்தவர்களை மீட்கவும், மீட்கக் கூடாதவர்களை விசாரித்து ஞான உபதேசஞ் சொல்லி விசுவாசத்திலே தேற்றவும் மிகுந்த பிரயாசைப்பட்டார். அதற்கு வெகு பயணமுஞ் செய்தார். அதினிமித்தம் தாமுஞ் சிறைப்பட்டு விலங்கில் இருந்தார். அவருடைய புண்ணியங்களைப் பார்த்த அநேகந் துலுக்கரும் மனந்திரும்பிக் கிறீஸ்துவர்களானார்கள். அவர் மரணகாலம் வருமட்டுஞ் சகல புண்ணியங்களின் நெறியில் மகா சுறுசுறுப்போடே நடந்தபிற்பாடு, தமக்குச் சாவு கிட்டியிருக்கிறதென்று புதுமையாக அறிந்து, தாம் உண்டாக்கின சபையில் உட்பட்டவர்களை அழைப்பித்து அடிமைகளை மீட்கிற வேலையிலே அவர்கள் சுறுசுறுப்பாயிருக்கப் புத்திசொல்லிக் கர்த்தர் பிறந்த ஆயிரத்திருதூற்றைம்பத்தாறாம் வருஷத்தில் மரணத்தை அடைந்தார்.

கிறீஸ்துவர்களே! அர்ச். இராயப்பர் பிறசிநேக மென்கிற புண்ணிய பாதையிலே எவ்வளவோ சுறுசுறுப்போடே நடந்தாரென்று கேட்டீர்களே. அந்தப்பிரகாரமாய் நீங்கள் புறத்தியாரை வாயினாலே மாத்திரமல்ல, சுகிர்த கிரியையினாலேயுஞ் சிநேகிக்க வேண்டும். புறத்தியாரிடத்திலே ஆண்டவருடைய சாயல் இருக்கிறதென்று நீ நினைத்தால் புறத்தியார் உனக்கு உறவின் முறையாசல்லா திருந்தாலும் நீச சாதியானாலும் அநேகங் குறையுள்ளவர்களாயிருந்தாலுந் தரித்திரர்களாய் உனக்கு உதவாதவர்களா யிருந்தாலும் அவர்களைச் சிநேகிக்கவேண்டும். உன் வீட்டுக்கு வந்த துரையின் பிரதிநிதியிடத்திலே குறையிருந்தாலுந் துரையுடைய பிரதிநிதியென்கிற பதவி முகாந்தரமாக அவனுக்கு ஆசாரக் குறைபண்ணாமல் சங்கை பண்ணு வாயே. அந்தப்பிரகாரமாய் மனுஷரிடத்திலே ஆண்டவருடைய சாயலிருக்கிற முகாந்தரமாக அவர்களைச் சிநேகிக்க வேண்டும். யாதொருவன்  நல்ல வேலை செய்கிற முகாந்தரமாகவும் உனக்கு அவன் உதவுகிற முகாந்தரமாகவு மாத்திரம் அவனைச் சிநேகித்தால் மாடு குதிரை நாய் முதலான மிருகங்களைச் சிநேகிப்பது போல் மனுஷரைச் சிநேகிக்கிறாய். இதற்கு அர்த்தமேதென்றால் நாய் வேட்டைக்கும் மாடு உழவுக்கும் குதிரை சுமை எடுப்பதற்கும் உதவுகிறதால் அவைகள் பேரிலே பட்சமாயிருப்பா யல்லோ?

 அவ்வாறே மனிதரைச் சிநேகித்தால் மனி தன் பேரிலே வைத்த சிநேகத்துக்கும் மிருகத்தின் பேரிலே வைத்த நேசத்துக்கும் வேற்றுமையில்லை. இது தகுமோ? ஆகையால் பிறர் ஆண்டவர் சாயலாய் உண்டாக்கப்பட்டதினாலேயும் அவர்களை சிநேகிக்க கடவுள் கட்டளையிட்டபடியினாலேயும் விசேஷமாய் அவர்களைச் சிநேகிக்க வேண்டும்.

ஆனால் சுவிசேஷகராகிய அர்ச். அருளப்பர் சொன்னபடியே வாயினாலே மாத்திரம் புறத்தியாரைச் சிநேகியாமல் கிரியையினாலே சிநேகிக்க வேண்டும். இதற்கு அர்த்தமேதென்றால் முன் சொன்னபடியே துருக்கியரிடம் அகப்பட்டு அடிமைகளான கிறீஸ்துவர்களை மீட்க அர்ச். இராயப்பர் பிரயாசைப்பட்டது போலே பிறருடைய ஆத்துமத்துக்குஞ் சரீரத்துக்கும் வந்த இக்கட்டுக் கஸ்திகளை நீக்கவும் அவர்களுக்கு நன்மை உபகாரஞ் செய்யவும் பிரயாசைப் படவேண்டும். அதுவே பிறரைக் கிரிகையினாலே சிநேகிக்கிற வகையாகும். இதல்லாமல் பிறருக்கு வந்த அடிமைத்தனம் நீங்கிப்போக அர்ச். இராயப்பர் பிரயாசைப்பட்டாரென்று சொன்னோம். நீ செய்த பாவத்தினால் உன் ஆத்துமத்துக்கு வந்த அடிமைத்தனம் நீங்கிப்போகப் பிரயாசைப்படாமல் இருக்கலாமோ. எந்த நிஷ்டூரமுள்ள எசமானையும்விட பசாசு அதிக நிஷ்டூரமுள்ளதாயிருக்கின்றது. நீ சாவான பாவங் கட்டிக்கொணடிருந்தால் பசாசின் அடிமையாய்ப் போனாயே. முன் சொல்லப்பட்ட அடிமைத்தனத்தைப் பார்க்க உன் அடிமைத்தனம் அதிக கெடுதியாயிருக்கும். ஆனால் இந்த அடிமைத்தனம் சில பேர்களுக்குத் தோன்றாதிருக்கிறதை ஓர் உவமையைக் கொண்டு வெளிப்படுத்துவோம். இலாகிரி மயக்கத்திலே கிடக்கிறவனுடைய காலிலே விலங்கு போட்டால் மயக்கந் தெளியுமட்டும் அது அவனுக்குத் தோன்றாது. அவன் தெளிந்து விழித்தபிறகு தோன்றும். பாவ மயக்கத்தில் அகப்பட்டவர்களுக்குப் பாவத்தின் அடிமைத்தனம நன்றாய்த் தோன்றாதிருந்தாலும் அந்த மயக்கம் நீங்கின பிறகு சீவனோடே இருக்கிற போதாகிலுஞ் சொத பிறகென்கிலும் நன்றாய்த் தெரியப்படும்.

மரணத்துக்குப் பிறகு மாத்திரந் தோன்றினால் அது மாறாமல் நித்திய கேடாயிருக்கும். ஆகையால் சாவான பாவத்தின் வழியாக நீங்கள் பசாசின் அடிமைத்தனத்தில் அகப்படாதபடிக்கு எச்சரிக்கையா யிருக்கவேண்டும். அதிலே அகப்பட்டால் நல்ல பாவசங்கீர்த்தனத்தின் வழியாகப் பாவத்தின் அடிமைத் தனந் தள்ளியொழிக்க வேண்டும். இத்தகைய நல்ல மனது உங்களுக்கு உண்டாக அர்ச். இராயப்பரைக் குறித்து 3 கர். 3 மங், வேண்டிக்கொண்டு அவர்பேரில் பக்தியுள்ள உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக ஒப்புக்கொடுங்கள்.

St. Peter Nolasco is the founder of the order of Our Lady of Ransom (Mercedarians, or Nolascans), a religious institute originally designed to ransom Christian captives from the Moors.

St. Peter Nolasco was canonized by Pope Urban VIII in 1628.