Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 19 மார்ச், 2024

“நான் மோட்சத்திலிருந்து வருகிறேன்.” - I am Coming from Heaven"


 “நான் மோட்சத்திலிருந்து வருகிறேன்.” 


1917, மே 13 அன்று நடந்த பாத்திமா மாதாவின் முதல் காட்சியில், "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" என்ற லூசியாவின் கேள்விக்கு மாதா, "நான் மோட்சத்தைச் சேர்ந்தவள்" என்று பதிலளித்தார்கள். உண்மையில், "நான் மோட்சத்திலிருந்து வருகிறேன்" என்று மாதா சொல்லியிருந்தாலும், அது உண்மையாகவே இருந்திருக்கும். ஆனால் ஆழ்ந்த பொருள் இருந்திருக்காது. ஆனால், "நான் மோட்சத்தைச் சேர்ந்தவள்” என்ற வார்த்தைகள் ஒரு வகையில், "பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே!" என்ற வார்த்தைகளை நினைவுபடுத்துகின்றன. தேவமாதா, இரக்கங்களின் பிதாவிடமிருந்து தான் பெற்ற ஒரு விசேஷ வரப்பிரசாதத்தால், முழு உண்மையோடு,"நான் மோட்சத்தைச் சேர்ந்தவள்என்று அறிக்கையிடத் தகுதி பெற்றிருக்கிறார்கள்

திவ்ய கன்னிகை, அர்ச். லூயிஸ் த மோன்ட்போர்ட்டின் வார்த்தைகளின் படி, "தெய்வீக" மாமரியாகவும், "கடவுளின் தகுதியுள்ள தாயாராகவும்" இருக்கிறார்கள். சேசுநாதரைப் போலவே தானும் ஆதாமின் மகளாக இவ்வுலகில் தோன்றியிருந்தாலும், மாமரி ஒரு தெய்வீகத் தொடக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் பிதாவின் திருக்குமா ரத்தியாகவும், சுதனின் திருத்தாயாராகவும், இஸ்பிரீத்துசாந்துவின் அமல பத்தினியாகவும், தேவாலயமாகவும் இருக்கிறார்கள். விசேஷமாக, தன் அமல உற்பவத்தின் பலனாக, திவ்ய கன்னிகை, சேசுவுக்குப் பிறகு, "பூலோகத்தை, அதாவது மனுக்குலத்தைச் சேர்ந்தவர்களாக" ஆகுமுன்னமே, அவர்கள் "மோட்சத்தைச் சேர்ந்த" முதல் சிருஷ்டியாகவும், ஒரே சிருஷ்டியாகவும் இருந்தார்கள்

திரியேக சர்வேசுரனுக்கு நேரடிச் சொந்தமானவர்கள் என்ற முறையில், ஆதியிலும், யுகங்களுக்கு முன்பும், திருச்சுதனின் மனிதாவதாரத் திட்டம் தெய்வீக மனதில் தோன்றிய அதே கணத்தில், திவ்ய கன்னிகை தேவ மனிதனுக்குப் பிறகு, அந்தத் திட்டத்தில் பங்குபெற நியமிக்கப்பட்ட இரண்டாவது ஆளாக இருந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இங்கே மனித புத்திக் கெட்டாததும், "எல்லா நாவுகளும் மவுனமாயிருக்க வேண்டியதுமான ஒரு பரம இரகசியம் நிச்சயம் இருக்க வேண்டும். பரிசுத்த திருச்சபை தன் வழிபாடுகளில் அமல உற்பவக் கன்னிகைக் குப் பொருத்திக் கூறுகிற சர்வப்பிரசங்கி ஆகம வார்த்தைகள், விசேஷமாக, "நானே சிருஷ்டிகளுக்கெல்லாம் முந்தி சிருஷ்டிக்கப்பட்டேன்... ஆதியிலும், யுகங்களுக்கு முந்தியுஞ் சிருஷ்டிக்கப்பட்டேன்; எக்காலத்துக்கும் இராமலுமிரேன்" (24:5, 14) என்னும் வார்த்தைகள், அவர்களுடைய சிருஷ்டிக்கப்பட்ட நித்திய உற்பவத்தைப் பற்றிப் பேசுகின்றன என்று நாம் துணிந்து கூறலாம். இந்த வார்த்தைகள் நேரடிப் பொருளில் கடவுளின் ஞானத்தால் பேசப்படுகின்றன என்றாலும், அவை "சிருஷ்டிக்கப்பட்டேன்” என்ற வார்த்தையின்படி, தேவ திருச்சுதனைக் குறிப்பவையாக இருக்க முடியாது. ஏனெனில் அவர் "ஆதியிலும், யுகங்களுக்கு முன்னும்" சிருஷ்டிக்கப்பட்டவராயிருந்தால், ஒரு தேவ ஆளாக இருக்க முடியாது. "மேலும், தேவ ஞானம் சர்வேசுரனைப் போலவே நித்தியமானதாக இருக்கிற அவருடைய தேவ இலட்சணம் என்பதால், அது இந்த ஞானத்தையும் குறிக்க முடியாது. ஆகையால் இவ்வார்த்தைகள் திருச்சபை மறைமுகமாகக் குறித்துக் காட்டுகிற படி, நிச்சயமாக, படைக்கப்பட்ட ஓர் ஆளாக இருந்த திவ்ய கன்னிகை யையே குறிக்கின்றன என்பது விளங்குகிறது. "சர்வேசுரனுக்குத் தாயாராக இருக்கிற மாதா, எப்போதுதான் அவருக்குத் தாயாக இல்லாமல் இருந்தார்கள்?” என்ற அர்ச். கிறீசோலோகுஸ் அருளப்பரின் வார்த்தைகளின் காரணத்தையும் இந்த அடிப்படையில் நம்மால் யூகிக்க முடிகிறது. 

இவ்வாறு, மாமரியின் வாக்குக்கெட்டாத பரம இரகசியம் முழுவதும், அவர்கள் பிதாவின் நேசத்திற்குரிய ஒரே மகளாகவும், வார்த்தையானவரின் தாயாகவும், இஸ்பிரீத்துவானவரின் தேவாலய மாகவும் இருப்பதும், "நான் மோட்சத்தைச் சேர்ந்தவள்” என்ற வார்த்தைகளில் வெளிப்படுத்தப்படுகிறது. ஏனெனில் மாமரி மனுக்குலத்தின் திவ்ய இரட்சகருக்குத் திருத்தாயாராகவும், ஒரு புதிய மனுக்குலத்தின் தாயாகிய புதிய ஏவாளாகவும் இருக்க நியமிக்கப் பட்டிருந்தார்கள். இவ்வாறு, "நான் மோட்சத்தைச் சேர்ந்தவள்என்ற வார்த்தைகளில் மாமரியின் ஆள்தன்மை பற்றிய ஒரு மிக அன்னியோன்னியமான இரகசியம் நமக்கு அவர்களாலேயே வெளிப்படுத்தப் படுகிறது. 

இவ்வாக்கியம் மசபியேல் கெபியில், "நாமே அமல உற்பவம்!" என்னும் மனித புத்திக்கெட்டாத பரம இரகசியத்தின் அதிகாரபூர்வ பிரகடனத்தையும் நமக்கு நினைவுபடுத்துகிறது. நான்கு ஆண்டு களுக்கு முன், அதாவது, 1854-ல், பாப்பரசர் ஒன்பதாம் பத்திநாதரால் விசுவாச சத்தியமாகப் பிரகடனம் செய்யப்பட்ட "அமல உற்பவ சத்தியத்தின்மீது" வைக்கப்பட்ட பரலோக முத்திரையாக இதைப் பலர் காண்கிறார்கள். அது உண்மைதான் என்றாலும், அர்ச். மாக்ஸிமிலியன் கோல்பே இவ்வாக்கியத்தைத் தேவ மாதாவின் தெய்வீகத்தின் வெளிப்பாடாகக் கண்டார். மாசற்ற, நித்திய, அமல உற்பவமாகிய இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரனுடைய திருநாமத்தையே தேவ கன்னிகை தன் சொந்தப் பெயராகக் குறிப்பிட்டதன் மூலம், தன் தெய்வீகத் தாய்மைக்கும், மனுக்குலத் தாய்மைக்கும் முற்றிலும் அவசியமான விதத்தில், அவரோடு தான் ஒருபோதும் பிரிக்க முடியாத படி ஒன்றித்திருப்பதும், அவருடைய தெய்வீகத்தில் முழுமையாகப் பங்குபெற்றிருப்பதுமான பரம இரகசியத்தையே வெளிப்படுத்தினார்கள் என்று அவர் வலியுறுத்திக் கூறுகிறார். 


இறுதியாக, நம் தாய் மோட்சத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், இவ்வார்த்தைகளின் மூலம், இதே அழைப்பு நமக்கும் நம் அன்னையால் விடுக்கப்படுகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். "மேலேயிருந்து வந்திருந்தவராகிய" (அரு. 8: 23) சேசுநாதரைப் போலவும், "மோட்சத்தைச் சேர்ந்தவளாகிய" அவருடைய திருமாதாவைப் போலவும் அன்றி, பாவம் செய்கிற எவனும் "இவ்வுலகத்தானாய்" இருக்கிறான். ஆனால் அவருடைய உண்மையான சீடர்களோ உலகத்தைச் சேராதவர்களாகவும் (அரு.15:19), பரலோகத்திற்கு உரியவர்களாகவும் இருக்கிறார்கள். ஆகவே, நம் ஆண்டவருடையவும், பாத்திமா மாதாவுடையவும் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு, தேவ கட்டளைகளையும், பாத்திமாவில் நமக்குத் தரப்பட்ட பரலோக வழிமுறைகளையும், விசேஷமாக மரியாயின் மாசற்ற இருதய பக்தியையும் அனுசரித்து, மோட்சத்திற்குரியவர்களாய் ஆவோமாக, மோட்சத்தைச் சுதந்தரித்துக்கொள்வோமாக.

சேசுநாதரின் திருப்பாடுகளின் பரம இரகசியம் - The mystery of the Passion of Christ

 சேசுநாதரின் திருப்பாடுகளின் பரம இரகசியம் 

பிரபஞ்சத்தின் அரசரும், ஆண்டவருமான தேவ திருச்சுதன், மனிதன் தன் பாவத்தால் நித்திய மரணத் திற்குத் தகுதி பெற்று விட்டதையும், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ள வல்லமை யற்றிருந்ததையும் கண்டு, அவனை மீட்டு இரட்சிக்கும் பொறுப்பைத் தம் மீது சுமந்துகொண்டார் என்று அர்ச். அல்போன்ஸ் லிகோரியார் கூறுகிறார். இவ்வாறு மனிதன் சுதந்தரித்துக் கொண்ட தண்டனை யின் கடனைத் தம் மரணத்தின் மூலம் அவர் தம் பிதாவுக்குத் திருப்பிச் செலுத்தினார். அவர் பிதாவின் சித்தத்தை நிறை வேற்றவே திருப்பாடுகளுக்குத் தம்மை உட்படுத் தினார் என்றாலும், அதுவே அவரது திருச்சித்த மாகவும், ஏக்கமாகவும் இருந்தது. "நான் பெற வேண்டிய ஸ்நானம் ஒன்றுண்டு; அது நிறைவேறு மளவும் எவ்வளவோ நெருக் கிடைப்படுகிறேன்" (லூக். 12:50). பிதா ஈனப் பாவிகளாகிய நம்மை மீட்டு இரட்சிக்கும்படி தம் சொந்த மகனை மரணத் திற்குக் கையளித்தார். "தமது சொந்தக் குமாரன் மேல் முதலாய் இரக்கமில்லாமல், நம்மெல்லாருக் காகவும் அவரை ஒப்புக்கொடுத்தார்" (உரோ. 8:32). இவ்வாறு தேவ பிதாவும், அவருடைய திருச்சுதனும் அற்பப் பாவிகளாகிய நம்மீது வைத்த சிநேகத்தை நிரூபித்தார்கள். 

"சர்வேசுரன் தம் வல்லமையைக் கொண்டு நம்மைப் படைத்தார்; தம்முடைய பலவீனத்தைக் கொண்டு நம்மை மீட்டு இரட்சித்தார்!" என்ற ஆச்சரியத்திற்குரிய வார்த்தைகளை அர்ச். அகுஸ் தினார் கூறுகிறார். ஏனெனில் சர்வ வல்லபராயிருந்தும், தேவ சுபாவத்தில் மட்டும் இருந்தபோது, தேவ சுதன் வேதனைப்பட முடியாதவராயிருந்தார். ஆனால், மனித பலவீனத்திற்குத் தம்மை உட்படுத்திக்கொண்டபோது, அவர் மனிதனின் இரட்சகராகவும் தம்மை ஆக்கிக்கொண்டார். 

ஆனால் இது எப்படி அவருக்கு சாத்தியமாயிற்று? பரலோகப் பூலோகப் பேரரசர் அசுத்தத்தில் நெளியும் புழுவையும் விட அதிக அசுத்தனாகிய மனிதனைக் காப்பாற்றும்படி இந்தச் சாக்கடைக்குள் இறங்க அவரைத் தூண்டியது எது? ஆ. வாக்குக்கெட்டாத தேவசிநேகமே! ஆ மனிதனைத் தெய்வமாக்கும்படி, "புழுவாகத் தன்னையே தாழ்த்திக்கொண்ட" (சங்.21:6) உன்னத தேவ இலட்சணமே! "இதென்ன அதிசயம் ஆண்டவரே? பாவம் செய்தவன் நான்; தேவரீர் எதற்காகத் தண்டிக்கப்பட்டீர்!என்று அர்ச். அகுஸ்தினார் கேட்கிறார். 

ப்போது எப்பேர்ப்பட்ட பாரச் சுமை பரலோகத் திரு இரத்தத் தினால் இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனின் மீதும் சுமத்தப் பட்டிருக்கிறது! சர்வேசுரன் சர்வேசுரனாக மட்டுமே இருந்த போதும் கூட, தன்னைப் படைத்து, சுவாசிக்கக் காற்றும், உண்ணக் கனிகளும், நட்புள்ள மிருகங்களும், பறவைகளும், பூலோகம் முழுவதன் மீதும் ஆளும் அதிகாரமும் தந்தருளிய அவரை நேசிக்க மனிதன் கடமைப் பட்டிருந்தான். ஆனால் திருப்பாடுகளின் பரம இரகசியம் நிறைவேறி விட்ட இப்போதோ, அவருக்குப் பதில் சிநேகம் காட்டவும், தன்னை மறுத்து, இரத்தந்தோய்ந்த அவருடைய பாதச் சுவடுகளைப் பின்பற்றவும், கடவுளுக்குச் சித்தமானால், அவருடைய அன்பிற்காகத் தன் உயிரையும் பலியாக்கவும் மனிதன் கடமைப்பட்டிருக்கிறான். 

தேவ சுதனே, என் ஆண்டவரே, உமது இந்த அளவற்ற சிநேகம் எப்படிப்பட்டது? உம் சிந்தனையின் ஒரே ஒரு அசைவு மனுக்குலத்தை மீட்கப் போதுமாயிருந்ததே! விருத்தசேதனத்தில் நீர் வடித்த இரத்தத்தின் ஒரே ஒரு துளியும், உமது ஒவ்வொரு மூச்சுக் காற்றும் கூட ஓராயிரம் உலகங்களை இரட்சிக்க வல்லதா யிருந்ததே! அப்படியிருக்க, நீர் மனித சாயலையே இழந்து போக என்ன அவசியம் வந்தது! உம்மைக் கட்டிய கயிறுகளுக்கும், சங்கிலிகளுக்கும், சம்மனசுக்களையும் பரவசப்படுத்திய உம் திருமுகத்தில் வழிந்த அசுத்தர்களின் எச்சிலுக்கும், திருச்சதை கிழிந்து துண்டுதுண்டாகப் பிய்ந்து விழச் செய்த கொடூரக் கசையடிகளுக்கும், தெய்வீகத் திருச்சிரசை ஊடுருவிய முட்களுக் கும், பாரச் சிலுவைக்கும், ஆணிகளுக்கும், மூன்று மணி நேர வாதைக்கும், உம் தாய்ச் செம்மறியின் ஆத்துமத்தை ஊடுருவ நீர் அனுமதித்த வியாகுல வாளுக்கும், உம் பிதாவிடமிருந்து முதன் முறையாகப் பிரிக்கப்பட்டு, ஒரு பாவியைப் போல் அவரை உம் கடவுளாகவே கண்டு கதறியதற்கும், கல்லறையின் இருளுக்கும் நீர் உம்மை உட்படுத்த வேண்டிய தேவை என்ன

எங்களை மீட்க சகல இன்பங்களும் நிறைந்த பரலோகத்தையும், உம் பிதாவின் மடியையும் விட்டு, பாவத்தால் இறந்திருந்த இந்த அசுத்த உலகிற்கு இறங்கி வந்ததும், மூவுலகிலும் அடங்கா தவராயிருந்தும், முதலில் ஒரு கருவிலும், தம் வாழ்வு முழுவதும் ஓர் ஆறடி சரீரமாகிய சிறையிலும் உம்மை சிறைப்படுத்திக் கொண்டதும், பசி, தாகம், சோர்வு, வலி, வேதனை, ஏக்கம் என்பவை போன்ற சகல மனித பலவீனங்களுக்கும் உம்மை உட்படுத்திக் கொண்டதும் உமக்குப் போத வில்லையே! இவ்வளவு கொடூரத் துன்பங்களையும், அவமானச் சிலுவை மரணத்தையும் நீர் ஏற்றுக்கொள்ள வேண்டிய காரணம்தான் என்ன

ஓ, ஏனெனில் தேவ-மனிதன் என்ற முறையில், தேவரீர் அளவற்ற விதமாய் எங்களை நேசித்து, உம்முடைய சிநேகத்தின் கடைசித்துளி வரை எங்களுக்குத் திறந்து காட்ட ஏக்கமாயிருந்தீர்! “என் பிதாவானவர் அனுமதித்தால், ஒரே ஒரு மனிதனை மீட்டு இரட்சிக்க முதலாய் மீண்டும் சிலுவையில் அறையப்பட விரும்புகிறேன்!" என்று அர்ச். ஜெர்த்ரூத்தம்மாளுக்கு தேவரீர் கூறிய வார்த்தைகள் இதை நிரூபிக்கின்றன! இதற்கு மேல் உம்மால் நேசிக்க முடியாது என்று நாங்கள் சொல்லத் துணியும் அளவுக்குத் தேவரீர் உம்முடைய அளவற்ற சிநேகமாகிய பெருவெள்ளத்தை முழுவது மாக எங்கள் மீது பாயச் செய்திருக்கிறீர்

ஆனால் நான் என்ன செய்திருக்கிறேன்? சகல சிருஷ்டிகளிலும் அதிகக் கேடுகெட்டவனாகிய என்னை மீட்டு இரட்சிக்க உம் தெய்வீக உயிரைப் பலியாக்குமளவுக்கு என்னை நேசித்த உம் திரு ருதயத்தையும், என் அடைக்கலமாகத் தேவரீர் தந்தருளிய உம் திருத்தாயாரின் மாசற்ற இருதயத்தையும் முட்களைக் கொண்டு நிரப்பியதைத் தவிர வேறு என்ன நான் செய்திருக்கிறேன்? தேவரீர் எனக்காகச் சிந்திய திரு இரத்தத்தை வீணாக்கி, பசாசுக்கும், உலகத்திற்கும், கேடுகெட்ட என் சரீரத்திற்கும் அடிமையா யிருந்திருக்கிறேன்! ஓ, என் இரட்சணியத்திற்காக இவ்வளவையும் தேவரீர் செய்து முடித்த பிறகும், என் முழு இருதயத்தோடும், என் முழு ஆத்துமத்தோடும், என் முழு வல்லமையோடும் உம்மைச் சிநேகியாதிருப்பேனாகில் எனக்கு ஐயோ கேடு! 

ஆயினும், என் தேவனே, இனி உம்மை நேசிப்பேன் என்று வாக்களிக்கிறேன். உத்தம மனஸ்தாபத்தை எனக்குத் தந்தருளும். இனி பாவம் செய்வதில்லை என்னும் என் பிரதிக்கினையை ஆசீர்வதித்தருளும். நான் மோட்சத்தை வந்தடையும் வரை, உம் பாதச் சுவடுகளைப் பின்பற்றவும், எதையும்விட அதிகமாய் உம்மை நேசிக்கவும், என் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யவும், என்னால் கூடுமான வரை, நன்மாதிரிகையாலும், ஜெப, தவத்தாலும், ஒறுத்தல், பரித்தியாகங்களாலும் அதிகமான ஆத்துமங்களை உம்மிடம் கொண்டு வந்து சேர்க்கவும் எனக்கு வேண்டிய வரப்பிரசாதங்களைத் தந்தருளத் தயை புரிவீராக! 


வியாகுல மரியாயே, வாழ்க! 

மாதா பரிகார மலர் - March April 2024

Tamil Christian Quotes - 15 St. Gertrude

 "என் பிதாவானவர் அனுமதித்தால், ஒரே ஒரு மனிதனை மீட்டு இரட்சிக்க முதலாய் மீண்டும் சிலுவையில் அறையப்பட விரும்புகிறேன்!"


அர்ச். ஜெர்த்ரூத்தம்மாள்

Tamil Christian QUotes - 14 - St. Augustine

 "இதென்ன அதிசயம் ஆண்டவரே? பாவம் செய்தவன் நான்; தேவரீர் எதற்காகத் தண்டிக்கப்பட்டீர்!

அர்ச். அகுஸ்தினார்

Tamil Christian Quotes - 13 - St. Augustine

 "சர்வேசுரன் தம் வல்லமையைக் கொண்டு நம்மைப் படைத்தார்; தம்முடைய பலவீனத்தைக் கொண்டு நம்மை மீட்டு இரட்சித்தார்!"


அர்ச். அகுஸ்தினார்

Tamil Christian Quotes in Tamil - 12

 பிரபஞ்சத்தின் அரசரும், ஆண்டவருமான தேவ திருச்சுதன், மனிதன் தன் பாவத்தால் நித்திய மரணத் திற்குத் தகுதி பெற்று விட்டதையும், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ள வல்லமை யற்றிருந்ததையும் கண்டு, அவனை மீட்டு இரட்சிக்கும் பொறுப்பைத் தம் மீது சுமந்துகொண்டார்


- அர்ச். அல்போன்ஸ் லிகோரியார்

நீதிமானான அர்ச். சூசையப்பர் - St. Joseph - most Justice Man

 நீதிமானான அர்ச். சூசையப்பர் 




அவளுடைய பத்தாவாகிய சூசை நீதிமானாயிருந்தார்' (மத். 1:19) என்று இஸ்பிரீத்து சாந்துவானவர் கூறுகிறார். சூசையப்பர் நீதிமானாக, நேர்மையுள்ள மனிதராக இருந்தார். தமது பரிசுத்த மணவாளி கருத்தரித்திருப்பதை அறிந்ததும், அவர்களைக் காட்டிக் கொடுக்க மனமில்லாதிருந்ததால், அவர் நீதிமான் என்று அர்ச் மத்தேயுவால் அழைக்கப்படுகிறார். இது மிகவும் நாகரீகமான செயல். ஆனால் நீதி என்பது வெறும் நாகரீக நடத் தையை விட மிகவும் மேலான ஒரு புண்ணியமாகும். அப்படியானால் சுவிசேஷம் அவரை நீதிமான் என்று அழைப்பதன் காரணமென்ன? பதிலை அதே சுவிசேஷம் தருகிறது: "சூசையப்பர் நித்திரையினின்று எழுந்து, ஆண்டவருடைய தூதன் தமக்குக் கட்டளையிட்டபடி செய்தார்" (1:24). ஆம். சூசையப்பர் சர்வேசுரனுக்குக் கீழ்ப்படிதல் உள்ளவ ராக இருந்தார். அவர் தம் செயல்கள் யாவையும், கடவுளின் திருச் சித்தத்திற்குக் கீழ்ப்படுத்தி, அதன் மூலம், தமது பரிசுத்த மணவாளிக்கு அடுத்ததாக, கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட நீதிமானாகிறார்

ஆகவே சூசையப்பரின் நீதி அவரது நாகரீக நடத்தைக்கு மிகவும் மேற்பட்டிருப்பதை நாம் காண்கிறோம். அது வெறும் நியாயமான நடத்தைக்கு மிகவும் அப்பாற்பட்டது. பண்டைய தத்துவ ஞானிகள் இதைப் புரிந்துகொள்ளவில்லை. ப்ளேட்டோ, "நீதி என்பதென்ன?" என்பது பற்றி ஒரு முழுப் புத்தகத்தையே எழுதினாலும், இறுதியில் அது என்னவென்று தமக்குத் தெரியாது என்று முடிக்கிறார்! சம்மனசுக்கொத்த வேதபாரகரான அர்ச். தாமஸ் அக்குயினாஸ் நீதியை வரையறுக்கும் விதமாக: "ஒவ்வொருவருக்கும் உரியதை நிலையானதும், நிரந்தரமானதுமான சித்தத்துடன் கொடுக்கும் நற்பழக்கமே நீதியாகும்" என்று கூறுகிறார். இது நல்ல விளக்கம்தான், ஆனால் இது இன்னும் தெளிவுபடுத்தப்பட வேண்டியதாக இருக்கிறது. நீதியைப் பற்றிய வேதாகமச் சித்தரிப்புக்கு இந்த வரையறையைப் பொருத்திக் காட்டும்படி, நாம் அதை இப்படி வரையறுக்கலாம்: "நீதிமான் என்பவன் தான் செய்ய வேண்டியதைச் செய்பவன். அவன் ஒரு தனி மனிதனாகவும், ஒரு குடும்பத்தின் தலைவனாகவும், கடவுளின் ஒரு குழந்தையாகவும், தான் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும்." 

இப்போது, சூசையப்பர் எப்படி நீதிமானாயிருக்கிறார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு தனி மனிதராக, அவர் மகா பரிசுத்தராகவும், தேவ கட்டளைகளை விருப்பத் தோடு நிறைவேற்றுபவராகவும் இருந்தார். திவ்ய கன்னிகைக்கு மணவாளராக யூத குருக்களால் தீர்மானிக்கப்படுமுன்பே அவர் பரிசுத்த விரத்தத்துவத்தைத் தம் வாழ்நாள் முழுவதும் கடைப் பிடித்து வாழத் தீர்மானித்திருந்தார்

குடும்பத் தலைவர் என்ற முறையில் அவர் நீதிமானாயிருந்தார். கடவுளின் திருச்சித்தத்தின் படியும், தம் சொந்த விருப்பம் மற்றும் தீர்மானத்தின்படியும் அவர் திவ்ய கன்னிகைக்குத் தகுதி யுள்ள கன்னி மணவாளராகவும், அவர்களுக்கும், அவர்களுடைய தெய்வீகத் திருச்சுதனுக்கும் தந்தையாகவும், பாதுகாவலராகவும் இருந்தார். குடும்பத் தலைவர் என்ற முறையில் தம் கடமை களை நிறைவேற்றுவதற்காக அவர் கடுமையாக உழைத்தார், சில தனி வெளிப்பாடுகளில் உள்ள படி, சர்வேசுரனுடைய திருச்சுதனுக்கும், அவருடைய திருத்தாயாருக்கும் உணவளிக்கும்படி பிச்சையெடுக்கும் அளவுக்கு அவர் தாழ்ச்சியும், சிநேகமும் மிகுந்தவராக இருந்தார். தமது திருக்குடும்பத்திற்காக, பரதேச வாழ்வு போன்ற கடும் துன்பங்களையும் அன்போடு ஏற்றுக் கொண்டார்

திவ்ய கன்னிகை சர்வேசுரனுக்குத் தாயாயிருக்கும்படி கடவுள் தன்னைத் தேர்ந்தெடுத்து, தன் அனுமதியைக் கேட்டபோது, ஒரு கணமும் தாமதிக்காமல் உடனே தன்னைத் தாழ்த்தி, தன் திருக் குமாரனின் பிதாவானவருக்குத் தன்னை அடிமையாக ஒப்புக் கொடுத்தார்கள். அவ்வாறே, அந்த மகா பாக்கியவதிக்குக் கன்னி மணவாளராகவும், அவர்களது திருக்குமாரனுக்கு வளர்ப்புத் தந்தையாக வும், பாதுகாவலராகவும் இருக்கும்படி கடவுளால் தாம் தேர்ந்து கொள்ளப் பட்டிருப்பதைத் தேவதூதர் வழியாக அறிந்துகொண்டபோது, சூசையப் பரும் தம்மைத் தாழ்த்தி, பிதாவின் அடிமையாகிய திவ்ய கன்னிகைக்கும், அவதரித்த வார்த்தையானவருக்கும் தம்மை ஊழியராக ஒப்புக் கொடுத்தார். இந்த ஒப்புயர்வற்ற மகிமை அவரைப் பெருமை கொள்ளச் செய்யவில்லை. ஒரு விதத்தில் மனித மீட்பிற்குக் கடவுள் தம்மையும் சார்ந்திருக்கத் திருவுளங்கொண்டார் என்பது அவரைப் பெருமை கொள்ளச் செய்யவில்லை. தரித்திரமும், மனிதர்களுக் கெல்லாம் மாபெரும் மகிழச்சியூட்டும் மகா பெரிய தேவ கைங்கரியம் நிகழ்ந்த அந்த முக்கியமான நேரத்தில் மனிதர்களால் கைவிடப்படு தலும், ஓர் அரசனின் கொலை வெறியும், பரதேச வாழ்வும், கடும் உழைப்பின் சோர்வும் எந்த விதத் திலும் தேவ திருச்சித்தத்திற்குக் கீழ்ப்படிவதிலிருந்து அவரைத் தடுத்து விடவில்லை. இவ்வாறு, அவர் கடவுளின் உண்மையான மகனாக, அவருக்குரிய மகிமையையும், கீழ்ப்படிதலையும், நேசத்தையும் அவருக்குத் தந்து, இவ்வாறு அவரால் நீதிமான் என்று அழைக்கப்படத்தகுதி பெற்றார்

உண்மையில், நீதி என்பது எல்லாப் புண்ணியங்களுடையவும் தொகுப்பாக இருக்கிறது. ஒரே ஒரு புண்ணியத்தில் குறைவுள் ளவனும் கூட, முழுமையான நீதிமான் என்று அழைக்கப்பட முடியாது. ஆகையால், திவ்ய கன்னிகைக்குப் பிறகு, அர்ச். சூசையப்பர் சகல புண்ணியங்களுக்கும் நன்மாதிரிகையாக இருக்கிறார் என்பதும் நிரூபிக்கப்படுகிறது. 

"பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா சர்வ நீதிபரராயிருப்பது போல, நீங்களும் நீதிமான்களா யிருங்கள்!" அர்ச். சூசையப்பர் சர்வேசுரனுடைய நீதியில் முழுமையாகப் பங்கடைந்தார். அவருடைய மன்றாட்டின் உதவியோடு, நாமும் நீதியில் சிறந்து விளங்கத் தேவையான வரப் பிரசாதத்தை நமக்குத் தந்தருளும்படி சர்வேசுரனை மன்றாடுவோமாக. 


திருநாள்: மார்ச் 19

Source : Source:

மாதா பரிகார மலர் - March - April 2024