30-ம் தேதி
அர்ச்.அந்திரேயாஸ்,
அப்போஸ்தலர்
பெலவேந்திரர் என்று அழைக்கப்படும் அந்திரேயாஸ் கலிலேயா நாட்டில் செம்படவரான தாய் தந்தையரிடத்தினின்று பிறந்து, அந்தத் தொழிலை நடத்தி வந்தார். இவர் அர்ச்.ஸ்நாபக அருளப்பருக்குச் சீஷனாகி,
சேசுநாதர் உலக இரட்சகரென்று தமது குருவால் அறிந்து, தன் சகோதரரான இராயப்பருடன் சேசுநாதரைக் கண்டு பேசிய பின் சகலத்தையும் விட்டுவிட்டு அவருக்குச் சீஷனானார். இவர் கர்த்தருடைய அதிசய அற்புதங்களைக் கண்டு, அவருடைய மதுரமான பிரசங்கங்களைக் கேட்டு அவர் மட்டில் அதிக நேசப்பற்றுதல் கொண்டார். பலமுறை கர்த்தரைப் பார்க்க ஆசித்து வந்த அன்னியரை அந்திரேயாஸ் அவரிடம் கூட்டிக்கொண்டுபோய் விடுவார். மற்ற அப்போஸ்தலர்களுடன் இஸ்பிரீத்துசாந்துவைப் பெற்றுக்கொண்ட பின், அந்திரேயாஸ் பல தேசங்களில் சுற்றித்திரிந்து,
சுவிசேஷத்தைப் போதித்து, அற்புதங்களைச் செய்து, அநேகரை சத்திய வேதத்தில் சேர்த்துக்கொண்டார். இவர் பத்திராஸ் என்னும் நகரில் பிரசங்கித்து அநேகருக்கு ஞானஸ்நானம் கொடுத்ததை அந்நகரின் அதிபதி கேள்விப்பட்டு, அவரைப் பிடித்து உபாதித்த பின், அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லக் கட்டளையிட்டான். அந்திரேயாஸ் தாம் அறையுண்டு சாக இருக்கும் சிலுவையைக் கண்டு சந்தோஷித்து களிகூர்ந்து அதை ஆவலுடன் அணுகி: பரிசுத்த சிலுவையே! என் குருவான சேசுகிறீஸ்துநாதருடைய இரத்தத்தால் பரிசுத்தப்படுத்தப்பட்ட திருச்சிலுவையே!
வாழ்க! வாழ்க! உன்னில் அறைபடும் என்னை, என் ஆண்டவரான சேசுகிறீஸ்துநாதருக்கு ஒப்புக்கொடுப்பாயாக என்று கூறி, அவர் அதில் அறைபட்டு, ஒரு நாள் முழுவதும் அதில் தொங்கி தம்மைச் சு10ழ்ந்து நின்ற பெரும் ஜனக்கூட்டத்திற்குப் பிரசங்கித்து, உயிர் துறந்து,
தமது குருவிடம் போய்ச் சேர்ந்தார்.
யோசனை
நமது ஜீவிய காலத்தில் திருச்சிலுவையின் மீது பக்தி வைத்து,
அதைப் பற்றி தியானிப்போமாகில்,
மரண நேரத்தில் அதனால் ஞான ஆறுதல் அடைவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக