Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 18 அக்டோபர், 2016

அக்டோபர் மாதம் 18-ம் தேதி (St. Luke)

அக்டோபர் மாதம் 18-ம் தேதி
         

                அர்ச்.லூக்காஸ் - சுவிசேஷகர்   

இவர் பல தேசங்களில் சுற்றித் திரிந்து உயர்ந்த கல்வியையும், வைத்திய சாஸ்திரங்களையும், ஓவியக் கலையையும் கற்றுத் தேர்ந்தார்.  அர்ச்.சின்னப்பருடைய பிரசங்கத்தைக் கேட்டு கிறீஸ்தவ வேதமே சத்திய வேதமென்று கண்டுணர்ந்து, அதை அப்போஸ்தலரால் ஞானதீட்சை பெற்று, அவருக்கு சீஷனாகி வேதம் போதிப்பதில் அவருக்குத் துணையாக இருந்தார்.  இவர் சேசுநாதரைக் காணப் பாக்கியம் பெறாவிடினும் இஸ்பிரீத்துசாந்துவின் ஏவுதலால் ஒரு சுவிசேஷத்தையும் அப்போஸ்தலர் நடபடி என்னும் புத்தகத் தையும் எழுதி வைத்தார். இவர் தேவமாதாவை அடிக்கடி கண்டு பேசி, அவர்கள் மட்டில் அதிக நேசமும் பக்தியும் வைத்தார். தேவதாயாரைப்பற்றி மற்ற சுவிசேஷகர்கள் எழுதாத விஷயங்களை லூக்காஸ் எழுதி வைத்ததுடன் அந்த பரமநாயகியின் சாயலையும் சித்தரித்தார். இவர் வரைந்த தேவமாதாவின் அநேக படங்களில் ஒன்று இன்றும் உரோமாபுரி கோவிலில் பக்தியுடன் வணங்கப்பட்டு வருகிறது. அர்ச்.சின்னப்பர் வேதசாட்சி முடி பெற்றபின் லூக்காஸ் இத்தாலியா, கால், எஜிப்து முதலிய தேசங்களில் சுற்றித்திரிந்து, வேதம் போதித்து தமது அரிய புண்ணியங்களாலும் புதுமைகளாலும் அநேகரை சத்திய வேதத்தில் மனந்திருப்பி, வேதத்திற்காக இரத்தஞ் சிந்தி மரித்து, மோட்ச சம்பாவனையைச் சுதந்தரித்துக்கொண்டார்.      

யோசனை
பதிதருடைய படிப்பினையை நாம் அருவருத்து, அப்போஸ்தலர்களின் வழக்கத்தைப் பின்பற்றி, கர்த்தருடையவும் தேவமாதா முதலிய அர்ச்சியசிஷ்ட வர்களுடையவும் திருச்சுரூபம் படம் முதலியவைகளை வீடுகளில் ஸ்தாபித்து, அவைகளைப் பார்க்கும் போது அவர்களுடைய நன்மாதிரிகளைப் பின்பற்ற முயற்சிப்போமாக.          

புதன், 7 செப்டம்பர், 2016

செப்டம்பர் மாதம் 9-ம் தேதி


 St. Omer, Bishop        
அர்ச்.ஓமெர் - மேற்றிராணியார் (கி.பி.670)  

               இவர் உத்தம கோத்திரத்தாரும் தனவந்தருமான தாய் தந்தையிட மிருந்து பிறந்து, உலக சாஸ்திரங்களையும் வேதசாஸ்திரங்களையும் கற்று, தர்ம வழியில் நடந்து வந்தார். சிறு வயதிலேயே இவர் தெய்வ பக்தியுள்ளவராய் நடந்து, தேவ பணிவிடையில் பிரவேசிக்க ஆசையாயிருப்பதைக் கண்ட அவருடைய தந்தை சந்தோஷப்பட்டு அதற்கான நல்ல ஆலோசனையும் அவருக்குச் சொல்லி வந்தார்.  தன் தாய் இறந்தபின் ஓமெர் துறவியாகப் போக இருப்பதையறிந்த அவர் தகப்பனும் தமது சொத்துக்களையெல்லாம் விற்று ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு தன் குமாரனுடன் ஒரு சன்னியாச மடத்தில் சேர்ந்தார். ஓமெர் துறவற மடத்தைப் பூலோக மோட்சமாகப் பாவித்து சகல புண்ணியங்களிலும் மேற்கொண்டு மற்றவர்களுக்கு முன்மாதிரியாய் இருந்தார்.  வாரத்தில் மூன்று நாள் ஒருசந்தி பிடித்து இரத்தம் வரத் தமது சரீரத்தைத் தண்டித்து, வெகு நேரம் ஜெபத்தியானஞ் செய்து தரையில் படுத்து, அரிதான தவம் புரிந்து வந்தார். இவருடைய மேலான ஞானத்தையும் கல்வியையும் குறித்து மேற்றிராணியாராகக் கட்டாயப்படுத்தப்பட்டார். 
                    இந்த மேலான  அந்தஸ்திற்கு ஓமெர் உயர்த்தப்பட்டபின் முன்னிலும் அதிக புண்ணியங்களைச் செய்து, தம்மை நீசனாகக் தாழ்த்தி, தமது கிறீஸ்தவர்களுக்காக ஜெபித்து ஒருசந்தி பிடித்து, தவம் புரிந்து இடைவிடா பிரசங்கத்தால் அஞ்ஞானிகளை சத்திய வேதத்தில் திருப்பி, சிலைகளையும் பள்ளிவாசல்களையும் தகர்த்து, அசமந்தரை விசுவாசத்தில் திடப்படுத்தி, தமது மேற்றிராசன கிறீஸ்தவர்         களை உத்தம விசுவாசிகளாக்கினார். தமது உழைப்புக்குச் சம்பாவனையான மோட்சத்தைப்பற்றி நினைத்துப் பாக்கியமான மரணமடைந்து அதில் மகிமை யுடன் பிரவேசித்தார்.    

யோசனை
பெற்றோரே, உங்கள் பிள்ளைகள் தேவ ஊழியத்தில் சேர மனதாயிருப்பதாக நீங்கள் அறிந்தால் அவர்களுக்கு தடங்கல் செய்யாதேயுங்கள். 

செப்டம்பர் மாதம் 8-ம் தேதி : The Nativity of B.V.M.

செப்டம்பர் மாதம் 8-ம் தேதி
 The Nativity of B.V.M.
அர்ச்.தேவமாதாபிறந்ததிருநாள்  
          யாதொரு தேசத்தில் பட்டத்துக் குழந்தை பிறக்கும் நாளில் வெகு சந்தோஷமும் கொண்டாட்டமும் உண்டாகும். ஜென்மப் பாவமின்றி உற்பவித்து, சுதனாகிய சர்வேசுரனுக்கு மாதாவாக சர்வேசுரனால் நியமிக்கப்பட்ட திருக்குழந்தை பிறந்த நாளில் பூலோகத்தில் மாத்திரமல்ல பரலோகத்திலும் சந்தோஷக் களிப்பு உண்டானது.தங்களுக்கு இராக்கினியானவள் பிறந்ததினால் சம்மனசுக்கள் சந்தோஷித்து மகிழ்ந்தார்கள். தங்களை மீட்டு இரட்சிக்கும் கர்த்தருடைய தாயாரின் பிறப்பைப்பற்றி பூவுலகிலுள்ள பிதாப் பிதாக்களும் புண்ணியவாளரும் சந்தோஷித்து ஆறுதல் கொண்டார்கள்.  ஆனால் தன் தலையை நசுக்கித் திரளான ஆத்துமங்கள் மோட்சத்திற்குப் போவதிற்கு காரணமான ஸ்திரீயின் பிறப்பால் நரகம் பயந்து நடுங்கியது.
          மேலும் இன்றையத் தினம் ஆரோக்கியமாதா திருவிழாவென்று கூறப்படுகிறது.  அதெப்படியெனில் பாவமாகிற நித்திய மரணத்திற்கு உள்ளான நர ஜென்மத்தை மீட்டு இரட்சித்தவர் சுதனாகிய சர்வேசுரனே.  ஆகையால் பாவ வியாதிக்கு அவரே ஞான ஆரோக்கியம். இப்படிப்பட்ட ஆரோக்கியத்தை உடையவரைப் பெற்றெடுத்தவளை ஆரோக்கிய மாதா என்று கூற நியாயம் உண்டல்லவா? ஆகையால் இப்பேர்ப்பட்ட மகாநாளில் நாமும் ஞான சந்தோஷங் கொண்டு நம்முடைய ஆத்தும சரீர வியாதியைப் போக்கி ஆரோக்கியம் அடைந்தருளும்படி ஆரோக்கிய மாதாவை நோக்கி மன்றாடுவோமாக    
யோசனை
சர்வேசுரன் தேவமாதாவை நமக்குத் தாயாராகக் கொடுக்கச் சித்தமான இந்த மகா நாளில் அவருக்கு நன்றி கூறி துதிக்கக் கடவோம்.  

செப்டம்பர் மாதம் 7-ம் தேதி

செப்டம்பர் மாதம் 7-ம் தேதி
 St. Regina, V.M.
அர்ச்.ரெஜினாஅம்மாள் - கன்னிகை, வேதசாட்சி (கி.பி.256) 


         ரெஜினா அம்மாள் பிரான்ஸ் தேசத்தில் அஞ்ஞானிகளான பெற்றோரிட மிருந்து பிறந்தாள். அவள் பிறந்த சில நாட்களுக்குள் அவளுடைய தாய் இறந்தபடியால், அவளுக்கு பாலூட்டி வளர்க்கும்படி அக்குழந்தையை நற்குணசீலியான ஒரு கிறீஸ்தவளிடம் அவள் தகப்பன் கொடுத்தான். அந்த ஸ்திரீ குழந்தையை கவனத்துடன் வளர்த்து, அவளுக்கு வயது வந்தபோது, சத்திய வேதத்தை அவளுக்கு உணர்த்தினதினால், ரெஜினா அம்மாள் ஞானஸ்நானம் பெற்று, சத்திய வேதக் கடமைகளை சரிவர அனுசரித்து, தன் கன்னிமையை சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்தாள். இந்த செய்தியை அறியாத அவள் தகப்பன் அவளைத் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டான். 

    கபடற்ற ரெஜினா அடிக்கடி தனியாக வெளியே போய் உலாவி வரும்போது அவளுடைய அழகைக் கண்ட அநேக வாலிபர் அவளை மணமுடித்துக்கொள்ள ஆசித்து, அவளுடைய தகப்பனுக்குக் தங்கள் கருத்தை வெளியிட்டார்கள். தகப்பன் திருமணத்தைப்பற்றி மகளோடு பேசியபோது, அவள் அதற்குச் சம்மதியாத தையும் அவள் கிறீஸ்தவளாயிருப்பதையும் அவனறிந்து அவளைத் தன் வீட்டினின்று துரத்தி விட்டான்.  ரெஜினா தன்னை வளர்த்த தாயினிடம் போய்ச் சேர்ந்தாள். இதையறிந்த அதிகாரி அவளை வரவழைத்து கிறிஸ்தவ வேதத்தை விட்டுவிட்டு தன்னைக் திருமணம் செய்துகொள்ளும்படியாக பயமுறுத்தினான்.  அதற்கு அவள் சம்மதியாததை அவன் கண்டு இவளை கொடூரமாய் அடித்து உபாதித்தபோது, அங்கு கூடியிருந்த திரளான அஞ்ஞானிகளுக்கு சத்திய வேதத்தின் மகிமையைப்பற்றி பேசினாள். அப்போது ஒரு மாடப்புறா ஒரு முடியை மூக்கால் கவ்விக்கொண்டு வந்து அவள் தலைமேல் வைத்தது.  இதைக் கண்ட அஞ்ஞானிகளில் 751 பேர் கிறீஸ்தவர்களானார்கள். இதனால் அதிகாரி சினங் கொண்டு வேதசாட்சியின் தலையை வெட்டுவித்தான்.

யோசனை
வாலிபப் பெண்கள் தக்க துணையின்றி வெளியிடங்களுக்குச் செல்வது ஒழுங்கல்ல.

செப்டம்பர் மாதம் 6-ம் தேதி

செப்டம்பர் மாதம் 6-ம் தேதி
St. Pambo, A.   
அர்ச்.பாம்போ - மடாதிபதி (கி.பி.385) 

         அர்ச்.பெரிய அந்தோணியார் வனவாசஞ் செய்த காலத்தில் பாம்போ அவரிடஞ் சென்று அவரைத் தமது ஞான குருவாகப் பாவித்து அவருக்குச் சீஷரானார்.  அந்தப் பயங்கரமான காட்டில் பாம்போ சகல புண்ணியங்களிலும், சிறந்து ஜெபத்தியானஞ் செய்வதிலும், கடின தபஞ் செய்வதி;லும், கை வேலை செய்வதிலும் தமது ஆயுள் காலத்தைச் செலவழித்தார். ஒரு நாள் இவர் வேறொரு தபோதனரை அணுகி தனக்கு யாதொரு நல்ல ஆலோசனை தரும்படி மன்றாடினார். அதற்கு அவர் 38-ம் சங்கீதத்தில் உள்ளபடி நாவைக் காக்கும்படி புத்தி புகட்டினார். அது முதல் பாம்போ அவசியமின்றி பேசாமல் மவுனமாயிருந்து, விசேஷமாக பிறர் சிநேகத்திற்கு விரோதமான அற்ப வார்த்தையுஞ் சொல்லாமல் பரிசுத்தராய் நடந்து வந்தார். 

               எஜிப்து தேசத்தில் ஆரிய   பதிதர்  சேசு கிறீஸ்துநாதருடைய தெய்வீகத்திற்கு விரோதமாய் போதிக்கும் பதித படிப்பினையைத் தாக்குவதற்காக அர்ச்.அத்தனாசியார் பாம்போவை அலெக்சாந்திரியாவுக்கு வரும்படி கேட்டுக்கொண்டார். அவ்வாறே பாம்போ அவ்விடத்திற்குச் சென்று வேதத்திற்காக உழைக்கும்போது, ஒரு ஸ்திரீ அலங்காரமாய் உடுத்திகொண்டு நடப்பதைக் கண்ட அவர் பேரொலியிட்டு அழத் தொடங்கினார். அவர் அழுகையின் காரணத்தைக் கேட்டபோது இந்த ஸ்திரீ மனிதருக்குப் பிரியப்படும்படி இவ்வளவாக பிரயாசைப்படுகையில் நான் என் கர்த்தருக்குப் பிரியப்பட முயற்சிக்கவில்லையே! என்றார். கடைசியாக இவர் சகல புண்ணியங்களையுஞ் செய்து அர்ச்சியசிஷ்டவராக மரித்தார். 

யோசனை
நாவால் அநேக பாவம் உண்டாகிறதென்று வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. நாமும் பிறர் மேலே கோள் குண்டணி கூறாமலிருந்து அவர்களுடைய நடத்தையைப்பற்றி வீண் தீர்மானம் செய்யாமல் இருப்போமாக.     

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

செப்டம்பர் மாதம் 5-ம் தேதி

செப்டம்பர் மாதம் 5-ம் தேதி
         St. Laurence Justinian, B.        
அர்ச்.லாரென்ஸ் ஜுஸ்டினியன் - மேற்றிராணியார் (கி.பி.1455)  

        ஜுஸ்டினியன் வெனிஸ் நகரத்தில் சிறந்த கோத்திரத்தில் பிறந்து, குழந்தையாயிருக்கும் போதே அர்ச்சியசிஷ்டதனத்தைக் காட்டினார். ஒரு தரிசனையில் தேவ ஞானஸ்நானத்தைப் பற்றிக்கொள்ளும்படி ஏவப்பட்டார்.  தமது 19-ம் வயதில் ஒரு அந்தஸ்தை தெரிந்துக்கொள்ள விரும்பி இதற்காக ஜெப தபத்தால் சர்வேசுரனை மன்றாடி வந்தார்.  அவருடைய தாயார் அவருக்கு விவாகத்திற்கு ஏற்;;பாடு செய்வதைக் கண்ட ஜுஸ்டினியன் ஒரு நாள் இரவு  தேவ ஏவுதலால் தமது வீட்டை விட்டு ஒரு சன்னியாச மடத்திற்கு ஓடிப்      போய் அவ்விடத்தில் அவருடைய புண்ணியங்களால் சகலருக்கும் ஞானக் கண்ணாடியாய் விளங்கினார். அவருடைய சிநேகிதனான ஒரு பிரபு அவரிடம் போய், துறவற அந்தஸ்தின் கஷ்டத்தை அவருக்கு அறிவித்து, அதை விட்டு உலகத்திற்கு திரும்பும்படி துர்புத்தி சொன்னபோது, ஜுஸ்டினியன் மனிதருடைய குறுகிய வாழ்நாளையும், இவ்வுலக நன்மையின் விழலையும்பற்றி எவ்வளவு உற்சாகத்துடன் பேசினாரெனில், மேற்கூறப்பட்ட பிரபுவும் உலகத் தைத் துறந்து சன்னியாசியானார். 

         ஜுஸ்டினியன் தாழ்ச்சி, பொறுமை முதலிய புண்ணியங்களை அனுசரித்து, தமது மடத்தின் பெரிய சிரேஷ்டராகவும், பிறகு வெனிஸ் நகரின் மேற்றிராணியாராகவும் நியமிக்கப்பட்டார். இவர் இந்த  உயர்ந்த அந்தஸ்திற்கு உயர்த்தப்பட்ட போதிலும், முன்பு அவர் செய்து       வந்த புண்ணியங்களை இரு மடங்காக்கி, பிரசங்கத்தாலும், நற்புத்தியாலும், சன்மார்க்கத்தாலும் கிறீஸ்தவர்களுடைய நடத்தையைத் திருத்தி, ஏழைகளை அன்புடன் விசாரித்து, உதவி புரிந்து, பாவிகளைத் திருத்தி திக்கற்றவர்களைக் காப்பாற்றி ஆடம்பரமாய் உடைகளையும் ஆபரணங்களையும் அணியும் பெண்களைக் கண்டித்து, சகலராலும் அன்புடன் நேசிக்கப்பட்டு, நல்ல ஆயத்தத்துடன் மரணமடைந்து, நித்திய சம்பாவனையைப் பெற்றுக்கொண்டார். அவருடைய சரீரம் இரண்டு மாதத்திற்குமேல் அழியாதிருந்ததுடன் அதினின்று பரிமள வாசனை புறப்பட்டது.  
யோசனை
ஆடை அணிவதில் ஆடம்பரம் காட்டாமல் மேரை மரியாதையும் அடக்க ஒடுக்கமும் காட்ட வேண்டும்.

செப்டம்பர் மாதம் 4-ம் தேதி : St. Rosa of Viterbo, V


       St. Rosa of Viterbo, V.   
அர்ச்.விற்றர்போரோசம்மாள் - கன்னிகை (கி.பி.1258)  

           ரோசம்மாள் இத்தாலியா தேசத்திலுள்ள விற்றர்போ நகரில் பிறந்து, குழந்தையாய் இருக்கும்போதே தேவ கிருபையால் அநேக புதுமைகளைச் செய்துவந்தாள்.  அக்காலத்தில் பிரேடெரி என்னும் இராயன் கர்வங்கொண்டு, திருச்சபைக்குப் பல துன்பங்களைச் செய்து மேற்றிராணிமாரை அவசங்கைப் படுத்தி, பாப்பாண்டவரையும் பலவாறாய் நிர்பந்தப்படுத்தினான்.  மூன்று வயது குழந்தையான ரோசம்மாள் மௌள மௌள நகர்ந்து கோவிலுக்குப் போய், தேவநற்கருணை பெட்டிக்கு முன் வெகு நேரம் என்னமோ கேட்பது போல கவனமாய்க் கேட்டுக் கொண்டிருந்தாள்.

            10-ம் வயதில் விற்றர்போ நகரிலுள்ள பெரிய மைதானத்தில் அவ்வூர் ஜனங்களுக்குமுன் ஒரு பிரமாண்டமான பாறையின்மேல் ஏறி, சகல கிறீஸ்தவர்களும் சத்திய திருச்சபையில் ஒற்றுமை யாயிருந்து சேசுநாதருடைய பதிலாளியான அர்ச்.பாப்பாண்டவர் சொற்படி  கேட்டு நடக்க வேண்டுமென்று பிரசங்கிக்கும்போது, அவள் நின்ற பாறை மேலே உயர்ந்து, அவள் பேசி முடித்தபின் அது முன்போல தாழ இறங்கினது. இவ்வாச்சரியத்தைக் கண்ட ஜனங்கள் அதிசயித்து திருச்சபைக்குப் பிரமாணிக் கமான பிள்ளைகளானார்கள். இராயன் இதைப்பற்றி கேள்விப்பட்டு, ரோசம்மா ளைப் பரதேசத்திற்கு அனுப்பி விட்டான்.  அவ்விடத்தில் அவள் திருச்சபைக் காகப் பிரயாசைப்பட்டதினால், சீக்கிரத்தில் திருச்சபைக்கு சமாதானமுண்டாகி, கொடுங்கோலன் இராச்சியபாரத்தை இழந்தான்.  ரோசம்மாள் ஒரு குகையில் வசித்து, ஜெப தபத்தில் ஈடுபட்டு 18-ம் வயதில் மரித்துப் பரகதி சேர்ந்தாள்.  

யோசனை
திருச்சபையை அல்லது அதன் போதகர்களை விரோதிக்கும் மனிதருடன் நட்பு வைக்கலாகாது.  

செப்டம்பர் மாதம் 3-ம் தேதி: - St. Simeon Stylites the Younger

செப்டம்பர் மாதம் 3-ம் தேதி
                  St. Simeon Stylites the Younger        
 அர்ச்.சின்னசிமியோன் (கி.பி.592) 

                 இவர் அந்தியோக்கியா பட்டணத்தில் பிறந்து சிறுவயதிலேயே அருகில் இருந்த ஒரு சன்னியாச மடத்தில் சேர்ந்து, சகல புண்ணியங்களிலும் அதிகரித்து வந்தார். அந்த மடத்தைச் சேர்ந்த ஒரு வனவாசிக்கு இவர் சீஷனாகி, அவரது தர்ம படிப்பினையைப் பினபற்றி வந்தார். கபடமற்றவரான சிமியோன் ஒரு நாள் காட்டில் ஒரு சிறு சிறுத்தைப் புலியைக் கண்டு, அதன் கழுத்தைக் கயிற்றால் கட்டி அதை தன் குருவிடம் கொண்டு போய் சுவாமி, இது எவ்வளவு பெரிய பூனை! என்றார்.  இதைக் கண்ட வனவாசி, அந்த மிருகம் அவருக்குத் தீமை செய்யாததினால் அதிசயித்தார். பிறகு தன் குருவின் உத்தரவுப்படி இரண்டு தூண்களை எழுப்பி, மாறி மாறி அவைகள் மேலேறி, 68 வருடம் கடுந்தவம் புரிந்து வந்தார்.

              இவருடைய புண்ணியத்தால் சர்வேசுரன் இவருக்குப் புதுமை வரம் கட்டளையிட்டபடியால், கணக்கற்ற ஜனங்கள் இவருடைய தூண்களைச் சுற்றி நிற்பார்கள். தம்மைச் சூழ்ந்திருக்கும் திரளான ஜனக்கூட்டத்திற்கு தேவையான நல்ல புத்திமதிகளைச் சொல்லி, அவர்கள் கூட்டிக்கொண்டு வந்திருக்கும் சகல வியாதியஸ்தரையும் சுகப்படுத்துவார்.  இவர் தீர்க்கதரிசன வரம் பெற்றதுடன் மனிதருடைய மனதிலுள்ள  எண்ணங்களையும் வெளிப் படுத்துவார்.  இதனால் அத்தேசமெங்கும் அவருடைய கீர்த்தி பிரசித்தமானதால் அரசரும் பிரபுக்களும் பிரஜைகளும் அவரைக் கனப்படுத்தி மரியாதை செலுத்தினார்கள். திருச்சுரூபங்களை உடைக்கும்படி துஷ்டர் முயற்சி செய்கை யில் சிமியோன் சுரூப வணக்கத்தாலுண்டாகும் பிரயோஜனத்தைப்பற்றி ஒரு நிருபம் எழுதி இராயனுக்கு அனுப்பினார். இவ்வாறு கடுந் தவஞ் செய்து சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்து, தமது 80-ம் வயதில் சிமியோன் மண்ணுலகை விட்டு விண்ணுலகில் பிரவேசித்தார்.

யோசனை
நாம் சிமியோனைப் போல கடுந் தவம் செய்யாவிடினும், ஐம்புலன் களையும் அடக்கி ஒறுத்தலை அனுசரிப்போமாக.

திங்கள், 27 ஜூன், 2016

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

ரஷ்யா ஐக்கிய அர்ப்பணம் செய்யப்பட்டுவிட்டதா? -ஓர் ஆய்வு!



ரஷ்யா ஐக்கிய அர்ப்பணம் செய்யப்பட்டுவிட்டதா? -ஓர் ஆய்வு!
(அர்ச். 10-ம் பத்திநாதர் சபை குருவான சங். ஃபேப்ரிஸ் டெலஸ்தர் (Fr. Fabrice Delestre) எழுதி, அமெரிக்க பத்திரிகையான The Angelus ஜூன் 2000ல் வெளிவந்த கட்டுரையைத் தழுவி எழுதப்படுகிறது. இதில் சுவாமியவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள், 2011-ல் ஏற்புடையதாக, பாரம்பரிய கத்தோலிக்க விசுவாசிகளை ஜெபிக்கத் தூண்டும் வகையில் அமைந்திருப்பதால் வெளியிடப்படுகிறது. - ஆ.ர்.)
இன்று உலகமெங்கும் ஒரு கருத்து நிலவி வருகிறது! அது் கம்யூனிச ரஷ்யா மனந்திரும்பிவிட்டது. வல்லரசாக விளங்கிய சோவியத் யூனியன் சிதறி கம்யூனிசம் தோல்வி அடைந்துவிட்டது”.
சத்திய வேதமான கத்தோலிக்கத் திருச்சபையிலோ இன்னும் ஒரு படி மேலாக, ரஷ்யா மனந்திரும்பிவிட்டது. அதற்குக் காரணம், அந்த நாடு பாத்திமாவில் மாதா கேட்டுக்கொண்டபடியே மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு அர்ப்பணம் செய்யப்பட்டுவிட்டது. எனவே ரஷ்யா மனந்திரும்ப இன்னும் ஜெபிப்பது அநாவசியம் என்று போதிக்கப்பட்டு வருகிறது. இப்போது ரஷ்யாவுக்காக ஜெபிப்பது நிறுத்தப்பட்டுவிட்டது. பாத்திமா செய்தியும் மறக்கடிக்கப்பட்டு வருகிறது.
ரஷ்ய அர்ப்பணம் நடந்தேறி விட்டது என்ற பிரச்சாரம் திருச்சபை அதிகாரிகளாலும், கத்.தொலைத்தொடர்பு சாதனங்களாலும் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு இரண்டு உதாரணங்களைத் தரலாம். 1998 மே 30-ம் தேதியிட்ட வத்திக்கானின் அதிகாரப்பூர்வமான செய்தித்தாளான Osservatore Romano -வின் போர்த்துக்கீசிய மொழிப்பெயர்ப்பில் புகழ்பெற்ற பத்திரிகையாளரான மேடம் எமிலியா பாவோலோ பச்செலி என்பவர் எழுதிய நீண்ட கட்டுரை வெளியிடப்பட்டது. பாத்திமா - ரஷ்யா அர்ப்பணத்தைப் பற்றிய அக்கட்டுரையில், “…1942-ல் பாப்பரசர் 12-ம் பத்திநாதர் திருச்சபையையும், மனுக்குலத்தையும் மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு அர்ப்பணித்தார். 10 வருடங்களுக்குப் பிறகு (1952, ஜூலை2-ல்) ரஷ்யாவை மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக்கொடுத்தார்…” என்று குறிப்பிட்டு, அதன் பிற்சேர்க்கையாக “…1984-ல் செய்த அர்ப்பணத்தை உறுதிசெய்வது போல, மீண்டும் ஒருமுறை மனுக்குலத்தையும், ரஷ்யாவையும் மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு அர்ப்பணித்தார்…” என்று உறுதிபடக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது இப்படியிருக்க, போர்த்துக்கல், பாத்திமா மாதா காட்சியளித்த பேராலயத்திலிருந்து வெளிவரும் வெளியீடான Voz de Fatima” 1999 ஜுலை மாதா இதழின் 2-ம் பக்கத்தில் சங். F.Leite என்பவர் “ ..நமதன்னைக் கேட்டுக்கொண்டபடி, பரி. பாப்பரசர் உலக அனைத்து ஆயர்களோடு இணைந்து ரஷ்யாவை அர்ப்பணித்த செயல், 1984, மார்ச் 25-ல் நடந்தேறியது. இந்த அர்ப்பணம் பாத்திமாவிலிருந்து உரோமைக்கு கொண்டுவரப்பட்ட பாத்திமா அன்னை சுரூபத்துக்கு முன்பாக நடைபெற்றது. பாப்புவின் வேண்டுகோளுக்கிணங்க உலக ஆயர்கள் இந்த முக்கிய செயலில் அவரோடு ஐக்கியமாக இருந்தனர்.
சகோதரி லூஸியாவும் இந்த அர்ப்பணம் நமதன்மையின் விருப்பத்தை நிறைவு செய்வதாக இருக்கிறது என்று பல சமயங்களில் கூறியுள்ளார்…” என்று குறிப்பிட்டு, கட்டுரை இறுதியில் “…அர்ப்பணம் நடைபெற்று விட்டதால், ரஷ்யா மனந்திரும்புதல் இப்போது துவங்கிவிட்டதுஎன்று மனசாட்சியின் உறுத்துதல் இல்லாமல் எழுதியுள்ளார்.
நாம் இங்கே குறிப்பிட்ட இரண்டு உதாரணங்களும், ரஷ்யாவின் அர்ப்பணம் சரியான முறையில், வகையான நேரத்தில் நடந்துவிட்டது என்று கட்டியங் கூறி அறிவிக்கின்றன. நாம் முதலில் குறிப்பிட்டபடி மேடம் பச்செலி அம்மையாரோ ரஷ்யா 1952, மற்றும் 1982 மற்றும் 1984 ஆகிய ஆண்டுகளில் 3 தடவைகள் அர்ப்பணம் செய்யப்பட்டுவிட்டது என்று கூறும் அளவுக்கு வந்துவிட்டார்.
ஆனால் இது உண்மையா? உண்மையாகவே ரஷ்யா மாதா கேட்டுக்கொண்டபடியே ஐக்கிய அர்ப்பணமாக மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டுவிட்டதா? இதனை ஆராய்வது அவசியம். ஏனெனில் இந்த பொய்ப் பிரச்சாரத்தால் பாத்திமா செய்தியே மங்கிப் போய்விட்டது. விசுவாசிகளின் மத்தியில் மறக்கப்பட்டுவிட்டது. முதல் சனி பரிகாரம் சரியாக செய்யப்படுவதில்லை, ஏறக்குறைய நின்றுபோய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் உண்மை அது அல்ல. ரஷ்யா அர்ப்பணம் பற்றிய உண்மை நிலையை பாரம்பரிய கத்தோலிக்க விசுவாசிகளான சாங்த்தா மரியாவாசகர்கள் அறிந்து – தெளிவடைந்து, இதில் விழிப்புணர்ச்சி பெற்று புத்துணர்வோடு முதல் சனி பரிகாரப் பக்தியை அநுசரித்து வருவதோடு அல்லாமல், ரஷ்யா பாப்பரசரால் விரைவில் ஐக்கிய அர்ப்பணம் செய்யப்பட வேண்டும். அதற்கான வரப்பிரசாதத்தை, திடத்தை சர்வேசுரன் அவருக்கு (பாப்பரசருக்கு) வழங்க வேண்டும் என்று ஜெபிக்கவே இந்த ஆய்வுக் கட்டுரை வெளியிடப்படுகிறது.
அர்ப்பணம் செய்யப்பட்டுவிட்டதா? இல்லையா? என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள, நாம் மூன்று கருத்துக்களை சற்று ஆராய்ந்து கவனிக்க  வேண்டும்.
1. எந்த வகையான அர்ப்பணத்தை பரிசுத்த கன்னிகை சகோதரி லூஸியாவிடம் கேட்டார்கள்?
2. 1952, 1982 மற்றும் 1984 ஆண்டுகளில் நடைபெற்றதாகச் சொல்லப்படும் மூன்று அர்ப்பணங்கள் மோட்சம் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றும்படி அமைந்தனவா?
3. இறுதியாக மேலே குறிப்பிட்ட அர்ப்பணங்களில் ஏதாவது ஒன்று, நமதன்னை உலகிற்குக் பெற்றுத் தருவதாக வாக்களித்தள்ள உடனடி வரப்பிரசாதங்களைக் கொண்டு வந்துள்ளதா? ஏனெனில் அதிகாரப்பூர்வமான, மோட்சம் கேட்டுக் கொண்டபடியாக அமையும் ஐக்கிய அர்ப்பணம் : 1. ரஷ்யாவின் மனந்திரும்புதல் - சத்திய கத்தோலிக்க விசுவாசத்திற்கு உடனடியாக ரஷ்யா மனந்திரும்பும். 2. உலகிற்கு ஒரு சமாதானக் காலம் வழங்கப்படும் என்ற வரப்பிரசாதங்களை பெற்றுத் தரும் வல்லமையுடையது. இவைகளை ஆராய்வோம்.
1. எந்த வகையான அர்ப்பணத்தை பரிசுத்த கன்னிகை சகோதரி லூஸியாவிடம் கேட்டார்கள்?
                பாத்திமாவில் 1917 ஜூலை 13-ம் நாளன்று நடைபெற்ற மூன்றாம் காட்சியில் நமதன்னை முதல் தடவையாக ரஷ்யாவின் அர்ப்பணத்தை உரைத்து. மிகப் பெரிய தப்பறைகள், தீமைகள் அழிவுகளிலிருந்து கிறீஸ்தவ உலகைக் காக்கும் சர்வ வல்லமையுள்ள ஒரே தீர்வாக அதனைச் சுட்டிக் காட்டினார்கள்.
                “…உலகில் என் மாசற்ற இருதயத்தின் மீது பக்தியை ஏற்படுத்த சர்வேசுரன் விரும்புகிறார். நான் உங்களிடம் கூறுவதை நீங்கள் செய்தால் அநேக ஆன்மாக்கள் காப்பாற்றப்படுவார்கள். சமாதானமும், நிலவும். இந்த யுத்தம் முடிவடையும். ஆனால், மனிதர்கள் கடவுளை நோகச் செய்வதை நிறுத்தாவிட்டால், இதைவிட இன்னொரு கொடிய யுத்தம் 11-ம் பத்திநாதர் காலத்தில் ஆரம்பிக்கும்..
                “… இதைத் தடுத்து நிறுத்த, ரஷ்யாவை என் மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக்கொடுக்க வேண்டுமென்றும், முதல் சனிக்கிழமைகளில் பரிகார நன்மை வாங்க வேண்டுமென்றும் கேட்க வருவேன். என் விருப்பங்கள் நிறைவேற்றப்பட்டால் ரஷ்யா மனந்திரும்பும். சமாதானம் நிலவும். இல்லாவிட்டால் ரஷ்யா தன் தப்பறைகளை உலகமெங்கும் பரப்பும். யுத்தங்களையும், திருச்சபை கலாபனைகளையும் எழுப்பிவிடும். நல்லவர்கள் கொல்லப்படுவார்கள். பாப்பரசர் அதிக துன்பங்களை அனுபவிக்க நேரிடும். பல நாடுகள் இல்லாமல் அழிக்கப்படும்.
                “…ஆனால், இறுதியில் என் மாசற்ற இருதயம் வெற்றி பெறும். பாப்பரசர் ரஷ்யாவை எனக்கு ஒப்புக்கொடுப்பார். அது மனந்திரும்பும். உலகிற்கு ஒரு சமாதான காலம் கொடுக்கப்படும்.
                இந்த வார்த்தைகளால், நமதன்னை மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு ரஷ்யா அர்ப்பணம் செய்வதால் கொடுக்கப்படும் இரண்டு புதுமை வரப்பிரசாதங்களை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். அவை, 1. ரஷ்யாவின் மனந்திரும்புதல், 2. உலகிற்கு சமாதான காலம்.
                அதோடு கூட, நமதன்னை, ரஷ்யாவை என் மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று கேட்க வருவேன்…” என்றும் குறிப்பிட்டார்கள். அர்ப்பணத்துக்கான சரியான, மிகவும் அவசியமான, வாய்ப்பான சமயத்தில் அதனைக் கேட்க (எதிர்காலத்தில்) மாதா வருவார்கள் என்பதே இதற்குப் பொருள். அதன்படியே, சகோதரி லூஸியா துயி (ஸ்பெயின்) கார்மெல் கன்னியர் மடத்தில் இருக்கும்போது, 1929, ஜுன் 13-ல் தாம் மீண்டும் வருவேன்என்று கூறியபடியே மாதா வந்தார்கள். அர்ப்பணத்தைக் கேட்டார்கள். இறுதி காட்சி என்று அழைக்கப்படும் அர்ச்.தமதிரித்துவ காட்சியில் தேவதாய்: “…பாப்பரசர் உலக மேற்றிராணிமார் அனைவருடனும் இணைந்து என் மாசற்ற இருதயத்திற்கு ரஷ்யாவை  ஒப்புக்கொடுக்கும்படி அவரை சர்வேசுரன் கேட்கும் தருணம் இதோ வந்துள்ளது.  இதன் மூலமாக ரஷ்யாவை கடவுள் காப்பாற்றுவதாக வாக்களித்துள்ளார். பாவங்களின் தொகை மிகவும் பெருகி விட்டது. கடவுளின் நீதி அவைகளைத் தீர்ப்பிடுகிறது. இப்பாவங்கள் எனக்கு எதிராகக் கட்டிக்கொள்ளப்படுகின்றன. ஆதலால், எனக்குப் பரிகாரம் செய்யப்பட வேண்டும் என்று கேட்க நான் வந்திருக்கிறேன். இந்தக் கருத்துக்காக உன்னைப் பலியாக்கி ஜெபிப்பாயாக…”
                இந்தச் செய்தியைப் பெற்றுக்கொண்ட பின் சகோதரி லூஸியா, தமது ஆன்மக்குருவான சங்.கொன்சாலஸ் சுவாமிக்கு 1930 மே மாதத்தில் இரண்டு கடிதங்களை எழுதினாள். அவற்றில், மரியாயின் மாசற்ற இருதயப் பரிகாரப் பக்தியும்,  ரஷ்ய ஐக்கிய அர்ப்பணமும் ஒன்றையொன்று தொடர்புடையன என்பதான மோட்சத்தின் வேண்டுகோள்களை விளக்கியுள்ளாள்.
                அக்கடிதங்களில் : பரிசுத்த பாப்பரசர், உலக அனைத்து மேற்றிராணிமார்களையும் தம்மோடு இணைத்து சேசு மரிய இருதங்களுக்கு பரிகார முயற்சியையும், ரஷ்ய அர்ப்பணத்தையும் மிகவும் ஆடம்பரமாகச் செய்யுமாறு கட்டளையிட்டு செய்தால் நல்ல ஆண்டவர் ரஷ்யாவில் கலாபனையை முடிவுக்கு கொண்டுவருவதாக வாக்களிக்கிறார். இதற்காக பரி. பாப்பரசர் பரிகார பக்தி முயற்சியை (மாதத்தின் முதல் சனி பக்தி) அங்கீகரித்து, அதனை அனுசரிக்குமாறு விசுவாசிகளுக்கு சிபாரிசு செய்ய வேண்டும்…” (ஆதாரம் : Fatima Intimate Joy, world event. Ch.9)
                தேவ அன்னையினுடைய வார்த்தைகளும், சகோதரி லூஸியாவுடைய கடிதங்களும் பரலோகம் கேட்கும் அர்ப்பணத்தின் சரியான வடிவத்தைக் காட்டுகின்றன. (நிபந்தனைகள்), அது என்ன?
·         ரஷ்ய அர்ப்பணம் பகிரங்கமாக இருக்க வேண்டும். ரஷ்யாவை மறைமுகமாகவோ, குழப்பமாகவோ (தெளிவில்லாமலோ) குறிப்பிட்டோ் உலகத்தையோ அல்லது மனுக்குலத்தை மட்டுமே அர்ப்பணம் செய்யாமல், ரஷ்யாவின் பெயரிட்டு தெளிவாக அர்ப்பணம் செய்யப்பட வேண்டும்.
·         பரிசுத்த பாப்பரசர் கத்தோலிக்க உலகின் அனைத்து மேற்றிராணிமார்களையும் தம்மோடு இணைத்துக்கொண்டு அர்ப்பணம் செய்ய வேண்டும்.
·         ஒவ்வொரு மேற்றிராணியாரும், பாப்பரசர் செய்யும் அதே நேரத்தில், அவரோடு இணைந்து தமது சொந்த மேற்றிராசனத்தில் அர்ப்பணம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
·         பரிசுத்த பாப்பரசர், உலக ஆயர்கள் தம்மோடு இணைந்து, ஐக்கியமாக அர்ப்பணம் செய்யும்படி அவர்களுக்கு கட்டளையிட வேண்டும்.
·         இறுதியாக, இந்த அர்ப்பணம் மிகவும் ஆடம்பரமாக நடைபெற வேண்டும். இந்த பகிரங்கமான பரிகார முயற்சியும், ஆடம்பர அர்ப்பண நிகழ்ச்சியும் மனிதர்களின் மனதில் மிகவும் ஆழமாகப் பதியும் வகையில் இருக்க வேண்டும். அதனால் அதிகப்படியான கத்தோலிக்க மக்கள் அதில் பங்கேற்கத் தூண்டப்படுவார்கள்.
2. நடைபெற்றதாகக் கூறப்படும் மூன்று அர்ப்பணங்கள் மோட்சம் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றும்படி அமைந்தனவா?
                இதனை ஒவ்வொரு அர்ப்பணமாகப் பார்த்து தெளிவு பெறுவோம்.
                1. 1952-ம் ஆண்டில் ஜூலை 7-ம் நாளன்று ரஷ்ய மக்களுக்காக எழுதப்பட்ட அப்போஸ்தலிக்க நிருபத்தில் பாப்பரசர் 12-ம் பத்திநாதர் ரஷ்யாவை மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு அர்ப்பணித்த செயல்.
                பாப்பரசர் எழுதிய இந்த நிருபத்தில் ரஷ்ய அர்ப்பணம் உண்மையாகவே செய்யப்பட்டது. ஆனால், அனைத்து ஆயர்களின் ஐக்கியம் இல்லாமலும், எவ்வித பகிரங்க அறிவிப்போ இல்லாது தனியாக பாப்பரசரால் மட்டுமே செய்யப்பட்டது. இது சகோதரி லூஸியா கூறியது போல் பகிரங்க பரிகார முயற்சியைப் பற்றிய அறிவிப்பையோ, அர்ப்பண செயலையோ கொண்டிருக்கவில்லை. ஆகையால், இத்தகைய கடிதத்தை எழுதியது அநேகருக்கு தெரியாமலும், விரைவில் மறந்துபோகக் கூடிய வகையில் இருந்தது.
                1952-ம் வருடம் கோடை காலத்தில் சகோதரி லூஸியா, பாப்பரசரின் இந்த செயலை, தனக்கு கத்தரித்து அனுப்பப்பட்ட செய்தித்தாள் துண்டின்மூலம் அறிந்துகொண்டதைப் பற்றி நன்றி தெரிவித்து எழுதிய கடிதத்தில், “…இந்த அர்ப்பணம் நமதன்னைக் கேட்டுக்கொண்டபடி செய்யப்படாததற்கு நான் மிகவும் வருந்துகிறேன்…” என்று குறிப்பிட்டாள். ஆக, இந்த அர்ப்பணம் சரியாக இல்லை.
                2. 1982, மே 13-ல் பாப்பரசர் 2-ம் அருள் சின்னப்பர் பாத்திமாவில் செய்த ஒப்புக்கொடுத்தலும், அர்ப்பணமும்.
                1982, மே 13-ம் நாளன்று பாத்திமா பதியில் காலைப் பூசைப் பிரசங்கத்தில் பாப்பரசர் அர்ப்பணம் செய்யும் தமது எண்ணத்தை வெளியிட்டார். அப்போது எனக்கு முன்சென்ற பாப்புமார்கள் ஏற்கனவே செய்ததை நான் மீண்டும் ஒருமுறை நிறைவேற்ற கருத்தாய் இருக்கிறேன். உலகத்தை அந்தத் தாயின் இதயத்தில் வைக்கிறேன்என்று குறிப்பிட்டார்.
                பாப்புவின் இந்த ஒப்புக்கொடுத்தல் மற்றும் அர்ப்பணச் செயல் நமதன்னை கேட்டுக் கொண்டபடியான அர்ப்பணமாக அமையவில்லை. அதற்கு பல காரணங்கள் உள்ளன்
·         பாப்பரசர் உலகத்தைத்தான் அர்ப்பணம் செய்தார், ரஷ்யாவை அல்ல. ரஷ்யாவை ஒருமுறைக்கூட குறிப்பிடவில்லை.
·         இந்த அர்ப்பணம் மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு பகிரங்கமாக செய்யப்பட வில்லை.
·         இறுதியாக பாப்பரசரோடு அனைத்து மேற்றிராணிமார்களின் ஐக்கியம் அவசியமாக்கப்படவில்லை.
சகோதரி லூஸியாவும், தமது உறவினளான மரிய தஃபேட்டால் என்பவளுக்கு 1982 ஆகஸ்ட் 11-ல் எழுதிய கடிதத்தில், நான் வயதானவள், 75 வயதாகிவிட்டது. சர்வேசுரனை முகமுகமாய்த் தரிசிக்க தயாராக இருக்கிறேன். எனது எல்லா எழுத்துக்களையும் பரிசுத்த திருச்சபையிடம் ஒப்படைத்துவிட்டேன், நான் சமாதானமாய் மரிக்கப் போகிறேன், ஆனால் யாராவது எனது கருத்தை அறிய விரும்பினால், இதை மட்டுமே சொல்வேன். அது, நமதன்னை கேட்டபடி ரஷ்யா அர்ப்பணம் செய்யப்படவில்லை என்பதையே…” என்று குறுப்பிட்டிருந்தாள். இதே கருத்தை மற்றொரு சிநேகிதிக்கு எழுதிய கடிதத்திலும் குறிப்பிட்டிருந்தாள் சகோதரி லூஸியா.
                மேலும், 1983, மார்ச் 19-ல் போர்த்துக்கல் நாட்டின் அப்போஸ்தலிக்க பிரதிநிதியான (Nuncio) வந். போர்த்தா லூயி ஆண்டகைக்கு வழங்கிய பேட்டியின் போது எழுதிய கடிதத்தில் இதே கருத்தை எழுதியுள்ளாள்.
                “…1982, மே 13-ம் நாளன்று ஒப்புக்கொடுத்தலில் ரஷ்யா அர்ப்பண பொருளாகவே குறிப்பிடப்படவில்லை. எந்த ஒரு மேற்றிராணியாரும் அவரது மேற்றிராசனத்தில் பகிரங்கமாகவோ, ஆடம்பர பரிகார மற்றும் ரஷ்ய அர்ப்பண சடங்கினை ஏற்பாடு செய்யவில்லை. பாப்பரசர் 2-ம் அருள் சின்னப்பர், மறைந்த பாப்பரசர் 12-ம் பத்திநாதர் 1942, அக்டோபர் 31-ல் செய்த உலக அர்ப்பணத்தையே புதுப்பித்தார். இந்த அர்ப்பணத்தினால் சில வகையான நன்மைகள் கிடைக்கக்கூடும். ஆனால், ரஷ்யாவின் மனந்திரும்புதல் அல்ல…” என்று எழுதியுள்ளாள்.
                அப்போஸ்தலிக்க பிரதிநிதிக்கு எழுதிய இந்தக் கடிதத்தில் முடிவில் சகோதரி லூஸியாவின் வருத்தம் கலந்த வேதனை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரிகள் தாழ்ச்சி நிறைந்த எளிமையான அவளது கீழ்ப்படிதலையே சுட்டிக்காட்டுவதாக உள்ளன. அவை, “…ரஷ்ய அர்ப்பணம் நமதன்னை கேட்டுக்கொண்டபடி செய்யப்படவில்லை. அப்படி என்னால் கூறக்கூட முடியாதவளாய் இருக்கிறேன். ஏனெனில் அப்படி சொல்ல பரிசுத்த ஸ்தானத்தின் (Holy See) அனுமதியை நான் கொண்டிருக்கவில்லை!இந்த இறுதி வரிகள், சகோதரி லூஸியா திருச்சபையின் அதிகாரிகள் உலகில் சர்வேசுரனின் பிரதிநிதிகளாய் இருக்கிறார்கள். ஆகையால், அவர்களுக்கு வேண்டிய மரியாதையையும், அனைத்திலும் கீழ்ப்படிதலையும் காட்ட தாம் கடமைப்பட்டுள்ளதை உணர்ந்துள்ளாள் என்பதை வெளிக்காட்டுகின்றன. ஆகையால்தான் ரஷ்ய அர்ப்பணம் நடைபெறவில்லை என்ற தமது கருத்தை வெளிப்படையாக அறிவிப்பது என்பது முடியாத காரியம் - அது அவளது துறவற கீழ்ப்படிதலுக்கு எதிரானது என்பதை அறிந்திருந்தாள். ஆனால் தனிப்பட்ட முறையில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உறுதியோடு, திடமாக அர்ப்பணம் செய்யப்படவில்லை என்பதை வெளியிட்டு வந்தாள்.
                3. 1984, மார்ச் 25-ல் உரோமை அர்ச். இராயப்பர் பேராலய முற்றத்தில் நடைபெற்ற அர்ப்பண புதுப்பித்தல்.
                பாப்பரசர் 2-ம் அருள் சின்னப்பர் அனைத்து மேற்றிராணிமார்களுக்கும் 1983, டிசம்பர் 8-ம் தேதி எழுதிய கடிதத்தில் தாம் மேற்கொள்ளவிருக்கும் அர்ப்பண புதுப்பித்தலை அறிவித்தார். அதன் இறுதியில், “…நான் மேற்கொள்ளவிருக்கும் புதுப்பித்தலை அதே நாளில் (1984, மார்ச்25) அதே சமயத்தில் நீங்களும் செய்ய விருப்பமாயிருந்தால் நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருப்பேன்…” என்று கூறியிருந்தார்.
                1982 அர்ப்பணத்தின் புதுப்பித்தலாக இது அமைந்தாலும் அர்ப்பண செபத்தில் சில சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆயினும் இந்த அர்ப்பணம் முக்கிய காரியங்களில் குறைவுபட்டதாகவே இருந்தது. அது எப்படியெனில்,
                1) இது, 1942-ல் பாப்பரசர் 12-ம் பத்திநாதர் செய்த உலக அர்ப்பணித்தலின் புதுப்பித்தலாக மட்டுமே அமைந்தது. அதன் முழு ஜெபத்தையும் வாசித்துப் பார்த்தால் சில பகுதிகள் குழப்பமாகவே இருப்பதை அறியலாம். அவை, “… ஓ தாயே உலகத்தையும், எல்லா மனிதர்களையும், அனைத்து நாடுகளையும் உம்மிடம் கொடுக்கிறேன். உலகத்தின் அர்ப்பணத்தையும் உம்மிடம் கொடுக்கிறேன். உமது தாய்மையான இருதயத்தில் அதனை வைக்கிறேன்…”
                2) அதோடு இதில் ரஷ்யா ஒரு தடவைக்கூட குறிப்படப்படவில்லை.
                3) இறுதியாக, இந்த அர்ப்பணம் வெளிப்படையாக மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு செய்யப்படவில்லை. மாறாக, தாயான மரியாய்க்குதான் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
                அதோடுகூட அர்ப்பணம் செய்த சற்று நேரத்துக்குப் பின்னர் பாப்பரசர், பொது நிலையினருக்காகவுள்ள பொந்திப்பிக்கல் குழுவின் துணைத் தலைவரான வந்.கோர்டு (Cordes) ஆண்டகையிடம் ஏன் ரஷ்யாவை பெயரிட்டு கூறுவதைத் தவிர்த்தார் என்பதை விளக்கியுள்ளார். “…அப்படிப்பட்ட வார்த்தைகள் சோவியத் நாட்டின் ஆட்சியாளர்களை கோபமூட்டுவதாக அமைந்துவிடும்…” என்று கூறி தமது இயலாமையை வெளியிட்டார்.
                இந்த சமயத்தில் சகோதரி லூஸியாவை அர்ப்பண சடங்கு நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக பெஸ்டான் என்ற பெண்மணி சந்தித்தார். அப்போது அவள், நல்லது சகோதரி லூஸியா, இந்த ஞாயிறன்று அர்ப்பணம் நடைபெறும் தானே?என்று கேட்க, அதற்கு லூஸியா வருத்தமுடன் மறுப்புத் தெரிவிக்கும் பாவணையாக, இந்த அர்ப்பணமும் தேவையான அம்சங்களைக் கொண்டிருக்கவில்லைஎன்று கூறினாள்.
                லூஸியாவின் அர்ப்பணம் பற்றிய எண்ணத்தை காட்டும் சம்பவம் ஒன்று அதே ஆண்டு (1984) வசந்த காலத்தில் கோயிம்பிரா கார்மெல் மடத்தில் நடந்தது. அன்று நடந்த ஒரு வழிபாட்டில் சங். கொன்டுர் சுவாமி 1984, மார்ச் 25-ம் நாளது அர்ப்பணச் செபத்தை படிக்கிறதைக் கேட்ட சகோதரி லூஸியாவின் பாவனை திடீரென மாறியது. வேதனைகள் அவளது முகத்தில் வெளிப்பட நிலைகுலைந்தது போல காணப்பட்டாள். இது அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருந்தது. (காண்க. Fatima Intimate Joy, world event..பக்.383)
                ஆக, 1952, 1982 மற்றும் 1984-ம் ஆண்டுகளில் நடைபெற்ற அர்ப்பணங்களை ஆராய்ந்ததிலிருந்தும் சகோதரி லூஸியாவின் தொடர்ச்சியான எழுத்து மூலமான (கடிதம்) அறிவிப்பு மற்றும் அவளது செயல்கள் மூலமும், நாம் ஒரு முடிவுக்குத்தான் வர முடியும். அது் ரஷ்யா, மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு மோட்சம் கேட்டுக்கொண்டபடி அர்ப்பணம் செய்யப்படவில்லை.
2. மேலே குறிப்பிட்ட அர்ப்பணங்களால் மாதா உலகிற்குப் பெற்றுத் தருவதாக வாக்களித்த விளைவுகள் கிடைத்தனவா?
                மாதா வாக்களித்திருக்கும் வரப்பிரசாத விளைவுகளுக்கான எந்த ஒரு அடையாளமும், அவற்றின் அறிகுறியும் உலகில் காணப்படவில்லை என்பதையே ரஷ்யாவின் ஐக்கிய அர்ப்பணம் நடைபெறவில்லை என்பதற்கு சான்றாகக் கொள்ளலாம். பரலோகம் கேட்டுக்கொண்டபடி ரஷ்யா மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு சரியானபடி - அதன் நிபந்தனைகளின்படி அர்ப்பணம் செய்யப்பட்டிருந்தால், மாதா உலகத்திற்கு தருவதாக கூறிய வாக்குறுதிகளை இன்று உலகம் பெற்றுள்ளதா என்று பார்ப்போம்.
                1. உலகிற்கு ஒரு சமாதான காலம் கொடுக்கப்படும்.
                இன்று உலகம் சமாதானமாய் இருக்கிறதா? என்பதைப் பார்ப்போம். 1988, ஏப்ரல் மாதத்தில் ஜெனிவாவில நடைபெற்ற The Institute International Studies  மாநாட்டில், U.N.O. வின் முன்னாள் பொதுச் செயலாளர் திரு. ஜுவியர் பேரீஸ் தே கூல்லார் 1945-ம் ஆண்டிலிருந்து, 1986-ம் ஆண்டின் இறுதிவரையிலான காலங்களில் மட்டுமே 1 கோடியே 70 லட்சம் மக்கள் ஆயுதமேந்தி போர்களினால் கொல்லப்பட்டனர் என்றும், இதில் 80 சதவீதம் பேர் சாதாரண குடிமக்கள் என்றும் அறிவித்தார். இதில் பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் தான் அதிகம்! சமாதானம் நிலவிய காலம் என்று அழைக்கப்பட்ட இந்த 40 ஆண்டுகளில் போர்களால் மடிந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 70 லட்சம் ஆகும். இது முதல் உலகப் போரில் ஏற்பட்ட உயிரிழப்பைக் காட்டிலும் அதிகமாகும். அதாவது, 1914-1918 ஆகிய முதல் யுத்த காலத்தில் உயிரிழந்தவர்கள் 80 சதவீதம். அதாவது 1 கோடியே 38 லட்சம் பேர். இவர்கள் போர்வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
                மேலும் அவர் கூறுகையில், 1986 இறுதியில் உலகமெங்கும் 36 ஆயுதப்போர்கள் நடந்தன. அதில் 41 நாடுகளில் 55 லட்சம் இராணுவ வீரர்கள் ஈடுபட்டது் இந்த 36 போர்களில் 4 போர்கள் 1945 மற்றும் 1949 ஆண்டு காலக் கட்டங்களில் துவங்கியது. 1960-69-ல் 7போர்களும், 1970-79-ல் 17 போர்களும் நடந்தன என்ற புள்ளி விபரத்தையும் வெளியிட்டார்.
                24 மணி நேரம் என்ற போர்த்துக்கீசிய நாளிதழ், 1999, ஏப்ரல் 18-ம் தேதியன்று 1990-99-ல் நடைபெற்றுக் கொண்டிருந்த உள்நாட்டுப் போர்கள் (Civil Wars) பற்றிய வரைப்படத்தை வெளியிட்டது. அதோடு, அவை நடைபெற்ற நாடுகளையும், அங்கு பலியானோர் எண்ணிக்கையையும் குறிப்பிட்டிருந்தது. அவை :

நாடுகள்                   பலியானோர்    நாடுகள்                         பலியானோர்
சூடான்          1,900,000                             அல்ஜீரியா                      80,000
அங்கோலா      1,000,000                             ஸ்ரீலங்கா                        56,000
ருவாண்டா                 1,000,000                             செஸினியா                           40,000
திபெத்          1,000,000                             துருக்கி                         37,000
சோமாலியா     3,00,000                            காங்கோ                        10,000
கிழக்குதைமூர்   3,00,000                            வடக்குஅயர்லாந்து    3,200
போஸ்னியா     2,00,000                            சியரா லீயோன்       3,000
                                                மொத்தம் : 59, 29, 200 பேர்.
இந்தப் பட்டியலில் கடந்த பத்து ஆண்டுகளில் (2000 - 2010) நடந்த எல்லா உள்நாட்டுப் போர்களில் பலியானோர் சேர்க்கப்படவில்லை. குறிப்பாக மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளான குவாடமாலா, பெரு, கொலம்பியா ஆகிய நாடுகளில் கொரில்லா போரில் நாளொன்றுக்கு சராசரியாக 40 பேர் கொடூரமாகக் கொல்லப்படுகின்றனர். பிலிப்பைன்ஸில் கம்யூனிச மற்றும் இஸ்லாமிய தீவிரவாத கொரில்லாக்களால் நடைபெறும் தாக்குதலால் எண்ணற்றோர் இறக்கிறார்கள்.
                எத்தியோப்பியா - எரிட்டிரீயன் சண்டை, காஷ்மீர் பிரச்சனையால் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளிடையேயான சண்டையில், 1990-லிருந்து, 30,000 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கோசோவா நாடுகளில் நடைபெற்ற சண்டைகளில் கொல்லப்பட்டவர்கள் மேலேயுள்ள பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
                ஆக, உலகில் 1945-லிருந்து இன்றுவரை நடைபெற்ற கோடூரமான கொலைகள் இப்படியிருக்கிறது. இன்று உலகத்தில் எந்த நாடும் சமாதானமாக இல்லை என்பதே உண்மை. இதுவா மோட்சம் வாக்களித்துள்ள சமாதானக்காலம்? அல்ல, உலகம் அதனை பெற்றுக் கொள்ளவே இல்லை. ஏனெனில் அதற்கு மோட்சம் கேட்கும் விலை ரஷ்ய ஐக்கிய அர்ப்பணம். அது இன்னும் நடைபெறவே இல்லை!
                2. ரஷ்யா சத்திய விசுவாசத்திற்கு - கத்தோலிக்க விசுவாசத்திற்கு உடனடியாக மனந்திரும்பும்.
                சங். Leite கூறுவது போல ரஷ்யாவின் மனந்திரும்புதல் நடைபெறுகிறதா? இல்லை என்றுதான் கூற வேண்டும். அது பற்றிய நம்பகமான சான்று் அங்கு 3 ஆண்டுகள் போதகத்தில் ஈடுபட்டு அர்ஜெண்டினா நாட்டுக்கு திரும்பிய சங். Hector Munoz O.P என்ற குருவானவர் Cristo Hoyஎன்ற வார இதழுக்கு வழங்கிய பேட்டியிலிருந்து சில விபரங்களை அறியலாம்.
                கேள்வி் ரஷ்ய மக்களின் சமூக அரசியல் சூழ்நிலை எப்படி இருக்கிறது?
                பதில் : ரஷ்யா கடந்த நூற்றாண்டுகளாக மார்க்சீஸத்தால் சீரழிக்கப்பட்டுவிட்ட நாடு. நாத்தீகம் அந்நாட்டில் வேரூன்றியிருக்கிறது. அங்குள்ள பிரிவினைவாத ரஷ்யன் ஆர்த்தோடாக்ஸ் சபை குருக்கள் கூறும் புள்ளி விபரத்தின்படி அப்பிரிவில் 2 சதவீதத்திற்கும் குறைவான மக்களே சமய நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்டுள்ளனர். ஆட்சியாளர்கள் ஊழலினால் துர்மாதிரிகைக்குள்ளாகிறார்கள். அங்கு உழைப்பாளிகளின் பொருளாதார நிலை மோசமாகியுள்ளது. அவர்களின் மாதச் சம்பளம் 84 யு.எஸ். டாலர் (இந்திய மதிப்பில் ரு.3900) மட்டுமே. மாஸ்கோவில் 70 சதவீதம் திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. 45 சதவீதம் குடும்பங்கள் பிளவுபட்டுள்ளன.
                இந்த பேட்டி 80 ஆண்டு கால கம்யூனிச ஆட்சியின் இலட்சணத்தை படம் பிடித்துக் காட்டுகிறது. அங்கு எல்லா மதங்களும் ஏறக்குறைய அழிக்கப்பட்டு விட்டன. அதில், கத்.திருச்சபையின் நிலையோ பரிதாபம். கி.பி.988-ல் கத்தோலிக்க கிறீஸ்தவ நாடாக மனம் மாறிய ரஷ்யா, கம்யூனிச புரட்சிக்கு முன்பு (1917-ல்) 150 பங்குகளுடனும், 250 குருக்களுடனும், 5 லட்சம் கத்தோலிக்க விசுவாசிகளைக் கொண்ட நாடாக இருந்தது. இன்று, “Wikipedia - encyclopedia” தகவலின்படி  ரஷ்யாவில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 7,50,000 ஆகும். கத்.திருச்சபையின் நான்கு பங்குத் தளங்களை மட்டுமே கொண்டுள்ள அந்நாட்டில் இது மொத்த ஜனத்தொகையில் வெறும் 0.5 சதவீதம் மட்டுமே! உண்மை நிலை இப்படியிருக்க ரஷ்யா எங்கே மனந்திரும்ப துவங்கியது? அது மனந்திரும்பவே இல்லை.
                இன்னும் கூற வேண்டுமானால்? ரஷ்யாவில் பாரம்பரியமான மதங்கள்என்ற அரசின் அங்கீகாரம் பெற்ற மதங்களாக ரஷ்யன் ஆர்த்தோடாக்ஸ் கிறீஸ்தவர்கள் (இது பிரிவினைசபை) யூத மதம், இஸ்லாம் மற்றும் பௌத்த மதம் ஆகியவைகளே திகழ்கின்றன. ஆனால் அதில் கத்தோலிக்க திருச்சபை இல்லை. ஆம்ஸ அங்கு நமது கத்தோலிக்க வேதம் துன்புறுத்தப்படுகிறது. கலாபனைக்கு உட்படுத்தப்படுகிறது. அங்கு எவ்விதமான ஞானக் காரியங்கலும் பகிரங்கமாக அனுமதிக்கப்படுவதில்லை. இதுவா பரலோகம் வாக்களித்த மனந்திரும்புதல்? அல்ல. சரி. அப்படியானால் ரஷ்யாவின் மனந்திரும்புதல் எப்படியிருக்கும்? உடனடியாக சத்திய -கத்.விசுவாசத்தை அம்மக்கள் பெற்றுக்கொள்வார்கள் - அதன் மனந்திரும்புதல் உடனடியாக இருக்கும்.
                ஆனால்? இன்று உலகிலும் நமது நவீன திருச்சபையிலும் மனந்திரும்புதல் திரித்துக் கூறப்படுகிறது. பொருளாதார ரீதியாகவும்? அரசியல் காரணங்களாலும் சிதறுண்டு போன சோவியத் யூனியனை காட்டி? ரஷ்யா மனந்திரும்பிவிட்டது என்று பாடுகிறார்கள். இல்லை! ரஷ்யா இன்னும் மனந்திரும்பவில்லை என்பது உறுதி! அப்படியானால் ரஷ்யா இன்னும் பரலோகம் விதித்த நிபந்தனைகளின்படி மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு அர்ப்பணம் செய்யப்படவில்லை என்பதுதான் உண்மை!
பாரம்பரிய கத்தோலிக்கர்களாகிய நமது கடமை!
                வாசகர்களே! இன்று உலகமும், நவீனத் திருச்சபையும் எங்கே போய்க் கொண்டிருக்கிறது. பாப்பரசர் 6-ம் சின்னப்பர் அன்று (டிசம்பர் 7,1968), திருச்சபை தன் சுய அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறதுஎன்று கூறினார். அது அப்படியல்ல. அர்ச். இராயப்பரின் மீது கட்டப்பட்ட திருச்சபையை ஒருபோதும் நரகத்தின் வாசல்கள் ஜெயிக்க முடியாது. பாப்பரசர் குறிப்பிட்ட - சுய அழிவை நோக்கி செல்லும் திருச்சபை உண்மையான பாரம்பரிய போதனைகளை கொண்டுள்ள சத்திய திருச்சபை அல்ல. அது 2-ம் வத்திக்கான் சங்கத்தைப் பின்பற்றும் சங்க திருச்சபையே!
                பாரம்பரிய விசுவாசத்தைக் கொண்ட திருச்சபையின் சிறு மந்தையாக நாம் இருந்தாலும், நமது கடமைகளும், அலுவல்களும் அதிகமாக உள்ளன. இன்று பாத்திமா செய்திகள் சங்கச்சபையால் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது. நடக்காத அர்ப்பணங்களை நடந்துவிட்டதாக அறிவித்து விசுவாசிகளை ஏமாற்றி அதற்காக ஜெபிக்கத் தூண்டாமல், முதல் சனி பரிகாரப் பக்தியை அநுசரிக்கவிடாமல் செய்யும் முயற்சிகள் வெற்றி பெற்றுவருகின்றன. அதுமட்டுமல்லாமல், அர்ப்பணத்தை வலியுறுத்திவந்த சகோ. லூசியா மரணமடைந்துவிடவே நிலைமை மோசமாகிவிட்டது.
                பாரம்பரிய விசுவாசிகள் என்று அழைத்துக் கொள்ளும் நாமாவது பாத்திமா செய்திகளை கற்றறிந்து தேவதாயும் சேசுவும் கேட்கும் முதல்சனிப் பரிகாரப்பக்தியை அன்புடனும், பரிகார உணர்வுடனும் கடைபிடித்துவர வேண்டும். இதனைதான் நமது சபை பொது சிரேஷ்டர் வந்.ஃபெல்லே ஆண்டகை தமது நண்பர்கள் மற்றும் உபகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில்(எண்.74) தமது சபைக்குருக்கள் தங்கள் பூசைத் தளங்களிலே முதல்சனி பக்தியை அநுசரிக்க விசுவாசிகளைத் தூண்ட வேண்டும் என்று பணித்துள்ளார். ஏனெனில் ஆண்டகையே கூறுவது போல், அதனால்தான் மரியாயின் மாசற்ற இருதய வெற்றி விரைவில் வரும். அப்போது பாப்பரசர் உலக ஆயர்களோடு இணைந்து ரஷ்யாவை ஆடம்பரமாக, பகிரங்கமாக மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு அர்ப்பணிப்பார். அதன்பலனாக உலகம் - ரஷ்யா சத்திய வேதத்திற்கு மனந்திரும்புதலையும், சமாதானக்காலத்தையும் பெற்றுக்கொள்ளும். உலகில் சேசுவின் இராச்சியம் வரும்படியாக மரியாயின் இராச்சியம் துலங்கும்! இதுவே சர்வேசுரனின் வெற்றியாக - அவர் தாயின் வெற்றியாகத் திகழும்!



Download Tamil Catholic Songs......Click Here....