Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 18 பிப்ரவரி, 2015

திருச்சபையின் ஐந்தாம் கட்டளை (Fifth commandment of Church)

விலக்கப்பட்ட காலத்திலும் குறைந்த வயதிலும் விக்கினமுள்ள உறவுமுறையாரோடு  கலியாணம் செய்யாதிருப்பது 


திருமணம் என்பது ஓர் ஆணும், பெண்ணும் கணவன் மனைவியாக வாழ்வதாக தங்களுக்குள்ளே செய்து கொள்ளும் ஒப்பந்தம்.  மரணம் மட்டும் ஒன்று சேர்ந்து வாழும் கடமையை இந்த ஒப்பந்தம் அவர்கள் மீது சுமத்துகிறது. சர்வேசுரன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக என்ற வார்த்தையை கொண்டு சேசுநாதர் இதை தெளிவு படுத்தினார்.

சேசுநாதர் திருமணத்தை ஒரு தேவதிரவிய அனுமானமாக உயர்த்தினார். அர்ச். சின்னப்பர் இந்த மெய்விவாகத்தை ஒரு மாபெரும்  தேவதிரவிய அனுமானம் என்கிறார்.  மெய்விவாகம் வாழ்வோரின் தேவதிரவிய அனுமானமாக இருப்பதால், அது தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்தில் பெறப்பட வேண்டும்.  அதாவது திருமணம் செய்யும் ஆணும் பெண்ணும் சாவான பாவமின்றி இருக்க வேண்டும்.  மெய்விவாகம் என்னும் தேவதிரவிய அனுமானம் கணவனுக்கும் மனைவிக்கும் தங்கள் கடமைகளை நிறைவேற்ற தேவையான வரப்பிரசாதத்தை தருகிறது; தங்கள் பிள்ளைகளை தேவசிநேகத்திலும் தேவ பயத்திலும் வளர்க்க அவர்களுக்கு உதவுகிறது.

சட்டபூர்வமான வழிமுறைகள் பின்பற்றப்படாமல் செய்யப்பட்ட ஓர் ஒப்பந்ததை ரத்து செய்ய ஓர் அரசாங்கத்திற்கு அதிகாரம் இருப்பது போலவே மெய் விவாகம் என்னும் தேவதிரவிய அனுமானத்தை பெறுவதற்கான நிபந்தனைகளுக்குச் கட்டுப்படாமல் ஒரு கத்தோலிக்க ஆணும், பெண்ணும் செய்து கொண்ட திருமணம் செல்லாது என அறிவிக்கிற அதிகாரம் திருச்சபைக்கு இருக்கிறது.

ஒரு திருமணம் செல்லத்தக்க கத்தோலிக்க திருமணமாக இருப்பதற்கு இரு சாட்சிகள் முன்னிலையில் பங்கு குருவுக்கு முன்பாக அல்லது  அவரால் ,முறைப்படி அனுமதிக்கப்படுகிற ஒரு குருவுக்கு முன்பாக தங்கள் சம்மதத்தை தெரிவிப்பது அவசியம்.ஆனால் ஓர் அரசு அதிகாரி முன்போ அல்லது கத்தோலிக்கரல்லாத ஓர் ஊழியர் முன்போ நிகழ்கிற ஒரு கதோலிக்கனின்  திருமணம் சர்வேசுரனுடைய பார்வையில் திருமணமே அல்ல. ஏனெனில் மெய்விவாக அனுமானத்திற்கென ஏற்படுத்திஇருக்கிற நிபந்தனைகளுக்கு அவர்கள் கட்டுப் படுவதில்லை.  

அடுத்ததாக ஒரு திருமணம் செல்லுபடியாக ஆணும் பெண்ணும் சுதந்திரம் உள்ளவர்களாகவும் சுதந்திரமான விதத்தில் தங்கள் சம்மதத்தை தெரிவிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.  விவாகரத்து செய்து கொண்ட அல்லது திருமண பந்தத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ஓர் ஆளுக்கு மீண்டும் திருமணம் செய்யும் உரிமை இல்லை.   

ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயது முடியுமுன் செய்து கொள்வதை கத்தோலிக்க திருச்சபை விலக்குகிறது. 

இறுதியாக திருமணத்தை செல்லாததாக ஆக்கக்கூடிய விக்கினங்கள் எதுவும் இருக்க கூடாது.  இரண்டு விதமான விக்கினங்கள் இருக்கினறன.  அவை தடை செய்கிற விக்கனம், மற்றும் செல்லாததாக்குகிற விக்கினம் ஆகும்.

தடை செய்யும் விக்கினம் என்பது விசேஸ சலுகைபெறப்படாத நிலையில் திருமண ஒப்பந்தத்தை சட்டத்திற்கு எதிரானதாக ஆக்குகிறது.  திருமணம் செய்த இருவரில் ஒருவர் கன்னிமை வார்த்தைப்பாடு அல்லது உபதியோக்கன், தியோக்கன் மற்றும் குருத்துவம் பட்டம் பெற்றிருத்தல், அல்லது துறவற அந்தஸ்தில் சேரும் வார்த்தைப்பாடு கொடுத்தவராக இருந்தால் அவர் திருமணம் செய்து கொள்வது சட்டத்திற்கு விரோதமானது.

கலப்புத் திருமணம் மற்றொரு தடை செய்கிற விக்கினம் ஆகும்.  கத்தோலிக்ககர் ஒருவரும், எதாவது ஒரு பதித பிரிவினை சபையில் ஞானஸ்தானம் பெற்ற உறுப்பினராக இருக்கும் மற்றொருவரும் திருமணம் செய்து கொள்வதை திருச்சபை மிகக் கடுமையான முறையில் தடை செய்கிறது.  இத்தகைய திருமணங்கள் வேத அலட்சிய போக்கிற்கும் விசுவாச இழப்பிற்கும், குழந்தைகளின் ஞான உபதேசத்தில் அசட்டைத்தனத்திற்கும் வழிவகுத்து விடும் என்பதால் திருச்சபை கலப்பு திருமணத்தை தடை செய்கிறது.  சில குறிப்பிட்ட நிபந்தனைகளின் பேரில் மட்டும் இந்த விக்கினத்திற்கு திருச்சபை விலக்கு அளிக்கிறது.  கலப்பு திருமணம் செய்வதற்கு ஒரு நியாமானதும், தீவிரமுள்ளதுமான காரணம் இருக்க வேண்டும்.  திருமணம் செய்து கொள்ள போகும் இருவரில் கத்தோலிக்கராக இருக்கும் மற்றவருக்கு கத்தோலிக்க விசுவாசத்தை அனுசரிப்பதில் எந்த தடையும் விதிப்பதில்லை என்ற உத்திரவாதம் தர வேண்டும்.  மேலும் பிறக்கும் குழந்தைகள் அனைவரும் கத்தோலிக்க ஞானஸ்தானமும், கத்தோலிக்க கல்வியும் மட்டுமே பெறுவார்கள் என்று திருமணம் செய்து கொள்ள போகும் இருவரும் வார்த்தைப்பாடு தர வேண்டும்.

செல்லாதாக்குகிற விக்கினம் ஒரு திருமண ஒப்பந்தத்தை ரத்துச் செய்கிறது.  திருமணத்தை செல்லாதக்குகிற விக்கினங்கள் குறைந்த வயது, ஏற்கனவே உள்ள திருமண உறவு. இதர மதத்தினரோடு திருமணம், ஆள் கடத்தி திருமணம். உபதியோக்கன், தியோக்கன் மற்றும் குருத்துவம் பட்டம் பெற்றிருத்தல் ஞானத்தாய் அல்லது ஞானத்தகப்பன் அல்லது ஞானப்பிள்ளை உறவு, இரத்த உறவு நெருங்கின உறவு என்னும் உறவுகள் திருமணத்தை செல்லாததாக்குகிற விக்கினங்கள் ஆகும்.  திருமணத்திற்கு முந்தைய மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் பங்கு குருவானவர் திருமண அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதால் தங்கள் திருமணத்திற்கு சர்வேசுரனுடைய ஆசிர்வாதம் வேண்டும் என விரும்புவோர் தங்கள் திருமணத்திற்கு சில வாரங்களுக்கு முன்பாக தங்கள் பங்கு குருவுக்கு அறிவிக்க வேண்டும்.  


கத்தோலிக்கர் ஆண்டின் எந்தக் காலத்திலும் திருமணம் செய்து கொள்ளலாம்.  ஆனாலும் ஆகமணக் காலம், தபசுகாலம் ஆகிய தவ, ஒறுத்தல் முயற்சிகளின் காலங்களிலும், அதாவது, ஆகமன காலத்தின் முதல் ஞாயிறு முதல் கிறிஸ்மஸ் திருநாள் முடியவும், சாம்பல் புதன் தொடங்கி உயிர்ப்பு ஞாயிறு முடியவும் திருமணங்கள் அர்ச்சிக்கப்படுவதைத் திருச்சபை தடை செய்கிறது. 


மரியாயே வாழ்க 
Ave Maria  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக