Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 5 மே, 2024

அர்ச். ஐந்தாம் பத்திநாதர்

மே 0️⃣5️⃣ம் தேதி 

🌹அர்ச்.ஐந்தாம் பத்திநாதர் பாப்பரசர் திருநாள்🌹



🌹மிக்கேல் கில்சியேரி கி.பி.1504ம் வருடம் இத்தாலியிலுள்ள லொம்பார்டி மாகாணத்தில், போஸ்கோ என்ற நகரில் பிறந்தார். இவர் ஆடுமாடு மேய்ப்பவராக 14வது வயது வரை வேலைபார்த்தார். 14வது வயதில், அர்ச்.சாமிநாத சபையைச் சேர்ந்த இரண்டு குருக்கள் இவரைச் சந்தித்தனர்; இவருடைய புண்ணியங்களையும், புத்திசாலிதனத்தையும் கண்டறிந்தனர்; இவரும், அர்ச்.சாமிநாத சபை மடத்தில் சேர்ந்து, 24வது வயதில் குருப்பட்டம் பெற்றார். பின் 16 வருட காலமாக தத்துவ இயலும் வேத இயலும் கற்பித்து வந்தார்.  பின் சூத்ரி என்ற இடத்தின் மேற்றிராணியாராக 1556ம் வருடம் அபிஷேகம் செய்யப்பட்டார். பின் மிலான் நகரில், திருச்சபையின் சத்திய போதனைகளுக்கு எதிராக பதிதத் தப்பறைகளைத் தோற்றுவிக்கும் பதிதர்களை விசாரிப்பதற்கான நீதிவிசாரணையாளரின் பதவிபொறுப்பில், அமர்த்தப்பட்டார். பின்னர் திருச்சபையின் பொது தலைமை நீதிவிசாரணையாளராக அலுவல் புரிந்தார். பின், 1557ம் வருடம் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். இவர் சென்ற இடங்களிலெல்லாம், மிகக் கடுமையாக  பதிதத்தையும், ஊழலையும் எதிர்த்துப் போரிட்டார்.
1566ம் வருடம் ஜனவரி 7ம் தேதியன்று, இவர் பாப்பரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாப்பரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னணியில் முக்கிய காரணமாக, இவருடைய இளம் நண்பரும் திருச்சபையின் மாபெரும் வேதபாரகருமான அர்ச்.சார்லஸ் பொரோமேயோ இருந்தார். பாப்பரசரானதும், இவர் தனது பெயரை ஐந்தாம் பத்திநாதர் என்று வைத்துக் கொண்டார்.
கிறீஸ்துவ நல்லொழுக்கத்தில் விசுவாசிகளை உயர்த்துவதின் மட்டிலும், குருக்களை சீர்திருத்துவதின் மட்டிலும், மிக உறுதியாக அன்னிய நாடுகளில் வேதபோதக அலுவல்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ஆதரவின் மட்டிலும், மாபெரும் திருச்சபையின் சங்கமான திரிதெந்தீன் பொதுச்சங்கம்  கொண்டு வந்த தீர்மானங்களை நிறைவேற்றுகிறதில் இவருடைய ஆட்சிகாலம் செலவழிக்கப்பட்டது. இவருடைய ஆட்சியின் காலத்தில் திரிதெந்தீன் சங்கத்தின் ஞான உபதேசம் முழுவதுமாக இயற்றப்பட்டது.  குருக்களுக்கான உரோமன் கட்டளை ஜெபப்புத்தகமும், திவ்யபலிபூசை புத்தகமும்  மறுபரிசீலனை செய்து திருத்தியமைக்கப்பட்டது; பாரம்பரிய திரிதெந்தீன் இலத்தீன் திவ்ய பலிபூசை இவருடைய காலத்தில் தொகுக்கப்பட்டு, நித்திய காலத்திற்குமாக செல்லுபடியாகிறதும், இதைத் தவிர வேறு எந்த முறையிலும் செய்யமுடியாததுமாக உண்மையான திவ்ய பலிபூசையின் நித்திய சட்டத்தை  “Quo Primum”  என்கிற ஓர் ஆணை மடலை தனது தவறா வரத்தினால் நித்தியத்திற்குமாக அர்ச்.ஐந்தாம் பத்திநாதர் பாப்பரசர் பிரகடனம் செய்தார்.
இவருடைய ஆறு வருட ஆட்சி காலத்தில் இடைவிடாமல் இரண்டு மாபெரும் எதிரிகளுடன் போரிட நேர்ந்தது. ஐரோப்பா முழுவதும் பதிதத் தப்பறையைப் பரப்பி வந்த புராட்டஸ்டன்டுகளும், கிழக்கிலிருந்து ஐரோப்பாவை ஆக்கிரமிக்க போரிட வந்த மகமதியர்களும் தான், அந்த இரண்டு எதிரிகள்.
அர்ச்.ஐந்தாம் பத்திநாதர், தெளிவான கத்தோலிக்க ஞான உபதேசத்தினாலும், பிரசங்கங்களாலும், கத்தோலிக்க வேதசத்தியங்கள் பற்றிய மிகச்சரியான விளக்கங்களாலும், புராட்டஸ்டன்டுகளை எதிர்த்துப் போராடினார். இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் அரசியை இவர் திருச்சபை நீக்கம் செய்தார்;  அரசியால் இங்கிலாந்திலும், மற்ற ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக ஜெர்மனியில் அரசர்களாலும் துன்ப உபத்திரவப்படுத்தப்பட்ட  கத்தோலிக்கர்களுக்கு, பாப்பரசர் ஆதரவளித்தார்.
அரசியல் களத்தில், அர்ச்.ஐந்தாம் பத்திநாதர், எல்லைமீறி படையெடுத்த மகமதியர்களின் படைகளுக்கு எதிராக,  ஐரோப்பாவின் எல்லா கத்தோலிக்க இராணுவப் படைகளையும் ஒன்றிணைக்க மிகக் கடுமையாக பாடுபட்டார்.1571ம் வருடம், அக்டோபர் 7ம் தேதியன்று, லெப்பான்டோவில் நிகழ்ந்த போரிலே மாபெரும் துருக்கிய படைக்கு எதிராக, கத்தோலி்க்கர்கள், மகா பரிசுத்த ஜெபமாலையால், புதுமையாக அடைந்த மாபெரும் வெற்றியே, இவருடைய ஆட்சி காலத்தில் நிகழ்ந்த மிகப் பிரபலமான வெற்றியாகும்!
   உரோமாபுரியைக் கைப்பற்றும் நோக்கத்துடன் மத்தியத் தரைக் கடலில் வந்த மகமதியர்களின் மாபெரும் கப்பற்படையை எதிர்கொள்வதற்காக பாப்பரசர் அர்ச்.ஐந்தாம் பத்திநாதர், ஒரு சிறு கத்தோலிக்கக் கப்பற்படையை அனுப்பி வைத்தார். அதே சமயம், பாப்பரசர், கத்தோலிக்கப் படையிலிருந்த ஒவ்வொரு கத்தோலிக்கரும் தினமும் திவ்யபலிபூசை கண்டு திவ்ய நன்மை உட்கொள்ளவேண்டும் என்றும் ஜெபமாலை ஜெபிக்க வேண்டும் என்றும் விண்ணப்பித்திருந்தார். மேலும், பாப்பரசர், ஐரோப்பியர்கள் அனைவருக்கும், போரில் கத்தோலிக்கர்கள் வெற்றிபெறும்படியாக, ஜெபமாலை ஜெபிக்கவும், உரோமாபுரியில் தேவாலயங்களில் மகா பரிசுத்த தேவநற்கருணைக்கு தோத்திரமாகவும் நிந்தைப் பரிகாரமாகவும், ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்  40 மணி நேர  ஆராதனைக்கு வரும்படியும் ,அழைப்பு விடுத்தார். மகா பரிசுத்த தேவமாதாவின் புதுமையால், கத்தோலிக்கர்களின் கப்பற்படை, மாபெரும் துருக்கிய கப்பற்படையை லெப்பான்டோ என்ற இடத்தில் அழித்து, தோற்கடித்தது!
மகா பரிசுத்த தேவமாதாவின் ஜெபமாலையால் புதுமையாக கத்தோலிக்கர்களின் கப்பற்படை அடைந்த இவ்வெற்றியின் ஞாபகார்த்தமாக அர்ச்.5ம் பத்திநாதர் பாப்பரசர், அக்டோபர் 7ம் தேதியன்று, மகா பரிசுத்த ஜெபமாலை மாதா திருநாளை அனுசரிக்கும்படி பிரகடனம் செய்தார்.  மேலும், பாப்பரசர், மகா பரிசுத்த தேவமாதாவின் பிரார்த்தனையில், கிறீஸ்துவர்களின் சகாயமான மாதாவே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்! என்கிற மன்றாட்டையும்  சேர்த்தார். 
அர்ச்.5ம் பத்திநாதர், ஜெபமாலையின் பாப்பரசர் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் 1572ம் வருடம் மே 1ம் தேதியன்று ஓ! “ஆண்டவரே! என்துன்பங்களையும், பொறுமையையும் அதிகரித்தருளும்” என்று உச்சரித்தபடி,பாக்கியமாய் மரித்தார்.  உரோமையிலுள்ள மகா பரிசுத்த தேவமாதாவின் பெரிய பசிலிக்கா தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.🌹✝️

🌹What is Ex Cathedra ⁉ அதாவது பாப்பரசரின் தவறா வரம்! என்றால் என்ன?🌹 பாப்பரசர் தவறா வரத்துடன் எதையாவது வரையறுத்துக் கூறும் போது, நமதாண்டவர் தாமே, “உங்களுக்கு செவி கொடுக்கிறவன், எனக்கு செவி கொடுக்கிறான்! (லூக் 10:16)” என்று  உன்னத ஆடம்பரமான விதமாகக் கூறுகின்றார். நமதாண்டவர் பேசும்போது, சத்தியத்தில் ஒருபோதும் எந்த முரண்பாடும் இருக்கக் கூடாததைப் போல்,அவர் ஒருபோதும் முரண்பாடாக எதுவும் கூறமாட்டார்!

பாரம்பரிய இலத்தீன் திவ்யபலிபூசையைப் பற்றி, அர்ச்.5ம் பத்திநாதர் பாப்பரசர், தனது தவறா வரத்தினால், 1570ம் வருடம் ஜுலை 19ம் தேதியன்று, பிரகடனம் செய்த “Quo primum”  , “கோ பிரிமம்” என்ற ஆணை மடல்:
நித்திய காலத்திற்குமாக செல்லுபடியாகிற இந்த நமது ஆணையினால், இந்த திவ்ய பலிபூசை புத்தகத்தில் ஒருபோதும் எதுவும் சேர்க்கப்படவோ, எதுவும் நீக்கப்படவோ அல்லது மாற்றப்படவோ கூடாது, என்று நாம் தீர்மானித்துக் கட்டளையிடுகிறோம்! இனி வரும் எதிர்காலத்தில் எச்சமயத்திலும், ஒரு குருவோ, மேற்றிராசன குருவோ, அல்லது துறவற சபைக்குருவோ, வேறு எவ்விதத்திலும் திவ்யபலிபூசையை நிறைவேற்றும்படி நிர்ப்பந்திக்கக் கூடாதவராக இருக்கிறார்!  மனச்சாட்சியினுடைய உறுத்தல்களையும், திருச்சபையின் தண்டனைகள் மற்றும் கண்டனங்கள் மட்டிலான பயத்தையும் ஒரேயடியாக தவிர்க்கும்படியாக, நாம் நம் அப்போஸ்தல அதிகாரத்தைக் கொண்டு, இந்த பூசையின் இப்போதைய ஒழுங்குமுறையின் மட்டில் நாம் ஆணையிட்டு தீர்மானிக்கிறோம் என்பதையும், இந்த நமது ஆணை, நித்திய காலத்திற்கும் நீடித்திருக்கும் என்பதையும், இது ஒருபோதும், ஏதாவது எதிர்காலத்தின் ஒரு தேதியில், சட்டபூர்வமாக ரத்து செய்யப்படவோ, திருத்தி அமைக்கப்படவோ கூடாது  என்பதையும் , நாம் பிரகடனம் செய்கிறோம். எல்லா காலத்திற்குமாக அளிக்கப்பட்ட இந்த நமது ஆணையின் கட்டளைக்கு எதிராக, யாராவது எப்போதாவது, ஏதாகிலும் ஒரு செயலில் ஈடுபட துணிந்தால்,  அவன் எல்லாம் வல்ல சர்வேசுரனுடையவும், அப்போஸ்தலர்களான முத்திப்பேறுபெற்ற இராயப்பருடையவும், முத்திப்பேறுபெற்ற சின்னப்பருடையவும், சாபத்திற்கு உள்ளாவான் என்பதை அறிந்து கொள்வானாக!” 
ஆகவே, அர்ச். 5ம் பத்திநாதர் பாப்பரசரின் இத்தவறா வரத்தின் காரணமாகத் தான், பாரம்பரிய இலத்தீன் திவ்யபலிபூசை நித்தியத்திற்குமாக நிரந்தர சட்டத்தினுள் நிலைத்திருக்கிறது! 

அப்படியென்றால், புதுப்பூசை என்று அழைக்கப்படுகிற வேறு எந்த பூசையும், பாரம்பரிய திரிதெந்தீன் இலத்தீன் திவ்யபலிபூசைக்கு  மாற்று ஆகவும் பதிலாகவும் நிறைவேற்றப்படக் கூடாததாக இருக்கிறது, என்பதை கத்தோலிக்கர்களாகிய நாம் அனைவரும் அறிந்து கொள்வோமாக! 
அவையெல்லாம் செல்லுபடியாகாத பதிதத் தப்பறையானதும் தேவ நிந்தனையானதுமான பூசைகளாகும்!  

🌹திவ்யபலிபூசைக்கு நித்தியச் சட்டத்தை அளித்துப் பாரம்பரிய கத்தோலிக்க விசுவாசத்தைப் பாதுகாத்த மாபெரும் பரிசுத்த பாப்பரசரே! அர்ச்.ஐந்தாம் பத்திநாதரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!    🌹

🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹