கடவுள் சிநேகமாக இருக்கிறார்.
(அர்ச். பதுவை அந்தோனியாரின் பிரசங்கம் ) இஸ்பிரீத்து சாந்து திருநாளுக்குப் பின்வரும் முதல் ஞாயிறு நிருபத்தின் முதல் பகுதி , "கடவுள் சிநேகமாயிருக் கிறார்" (1 அரு. 4:8) என்னும் இந்த முதல் வாக்கியத்தோடு பொருந்துவதாக இருக்கிறது. சிநேகம் எல்லாப் புண்ணியங் களிலும் மேலான புண்ணியம் என்பதால், நாம் ஒரு சுருக்க மான, தனிப் பிரசங்கம் ஒன்றை அதன்பேரில் தருவோம். நாம் கடவுளையும் நம் அயலானையும் ஒரே வித அன்பைக் கொண்டு, இஸ்பிரீத்து சாந்துவானவராகிய அன்பைக் கொண்டு நேசிக்கிறோம், ஏனெனில் கடவுள் சிநேகமாயிருக் கிறார். அர்ச். அகுஸ்தினார் இதைப் பற்றி, "சர்வேசுரனை, அவர் பொருட்டு, உன் முழு இருதயத்தோடு நேசிப்பாயாக, உன் அயலானை உன்னைப் போல நேசிப்பாயாக என்ற அன்பின் கட்டளை கடவுளால் தரப்பட்டுள்ளது. கடவுளின் நிமித்தம் உனக்கு நன்மையானது எதுவோ அதைத் தேடுவதன் மூலம், உன்னை நீ நேசிக்க வேண்டும். இதே முறையில், அதே கடவுளின் நிமித்தம் உன் அயலானுக்கு நன்மையானதும், அவனுக்குத் தீங்கா யிராததுமான காரியத்தைத் தேடுவதன் மூலம், அவனையும் நீ நேசிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் உன் அயலான்தான்; நீ தீங்கு செய்யக்கூடிய மனிதன் யாருமில்லை" என்று கூறுகிறார்.
''உன் முழு இருதயத்தோடும் (புத்தி), உன் முழு ஆத்துமத்தோடும் (சித்தம்), உன் முழு மனதோடும் (நினைவு) உன்
தேவனாகிய ஆண்டவரை நேசிப்பாயாக" என்ற வார்த்தைகளில் நாம் கடவுளை நேசிக்க வேண்டிய முறைமை குறித்துக்
காட்டப்படுகிறது. நம் புத்தியும், சித்தமும், நினைவுமாகிய ஆன்ம சத்துவங்கள்
யாரிடமிருந்து வருகின்றனவோ, அந்த சர்வேசுரனுக்கே
அவை அர்ப்பணிக்கப்பட வேண்டும். இதற்கு நம் வாழ்வின் எந்த பாகமும் விதிவிலக்கு
அல்ல. நம் மனதிற்குள் வரும் எந்த ஒரு காரியமும் அன்பினால், அதன் கடைசி இலக்காகிய கடவுளையே
நோக்கியதாக இருக்க வேண்டும்.
மேற்கண்ட நிருபத்தில், அர்ச். அருளப்பர் கடவுள் மீதும், அயலான் மீதும்
கொள்ளும் அன்பைப் பற்றி நமக்கு அதிகம் எடுத்துச் சொல்லி, அதைக்
கடைப்பிடிக்கும்படி நம்மை உற்சாகப் படுத்துகிறார். "தம்முடைய ஏக குமாரனால் நாம்
ஜீவிக்கும்படிக்குச் சர்வேசுரன் அவரை இவ்வுலகத்தில் அனுப்பினதினாலே, சர்வேசுரன் நமது
பேரில் வைத்த சிநேகம் வெளிப்பட்டது'' (1அரு.4:9). பிதாவானவர் நம் மீது வைத்த இந்த நேசம்
எவ்வளவு பெரியது! நாம் அவரால் வாழும்படியாகவும், அவரை நாம் நேசிக்கும்படியாகவும், அவர்தம் ஏகபேறான
திருச்சுதனையே நமக்காக நம்மிடம் அனுப்பினார். ஏனெனில் அவரின்றி வாழ்வது உண்மையில்
மரணமாகவே இருக்கிறது. "சிநேகியாதவன் மரணத்தில் நிலைகொண்டிருக்கிறான்" (1 அரு.3:14).
யார்
வழியாக சர்வேசுரன் உலகத்தைப் படைத்தாரோ, அந்தத்
தமது நேச குமாரனையே நமக்குத் தரும் அளவுக்கு மிக அதிகமாக அவர் நம்மை நேசித்தார்
என்றால், நாமும் ஒருவரை யொருவர் நேசிக்க
வேண்டியவர்களாக இருக்கிறோம். "நான்
உங்களுக்கு ஒரு புதிய கட்டளை யைத் தருகிறேன், நீங்கள்
ஒருவர் ஒருவரை நேசியுங்கள்" (அரு. 13:34). ஆடம்பரமாக உடை அணிந்திருந்த அந்தப்
பணக்காரன் இந்தக் கட்டளையை நிறைவேற்றவில்லை, எனவே அவன்
மரணத்தில் நிலைகொண்டிருந்தான். நேசமாகிய உண்மையான வாழ்வு அவனிடம் இல்லாத தால் அவன்
உயிருடன் புதைக்கப்பட்டான் என்றும் கூட நீங்கள் சொல்லலாம். தனது முன்னுரிமைகளைத்
தவறான வழியில் அவன் பயன்படுத்துவதால் பாவம் செய்கிறான்.
அர்ச். அகுஸ்தினார் இப்படிச் சொல்கிறார்: "நேசிக்கப்பட வேண்டிய
நான்கு காரியங்கள் இருக்கின்றன. ஒருவர் நமக்கு மேலே இருக்கிறார். அவர் கடவுள்.
இரண்டாவதாக நாம் இருக் கிறோம். மூன்றாவது காரியம், நம் அருகில் இருக்கிறது. அது நம்
அயலார். நான்காவது காரியம் நமக்குக் கீழே இருக்கிறது, அது நம் சரீரம்." அந்த செல்வந்தன் தன்
உடலை எல்லாவற்றிற்கும் மேலாக நேசித்தான். கடவுளையும், தன் சொந்த
ஆன்மாவையும், தன் அயலானையும் பற்றியோ அவன் சற்றும் கவலைப்படவில்லை. அதனால்தான்
அவன் தண்டனைத் தீர்ப்படைந்தான்.
"நம் சரீரத்தை நம்
பொறுப்பிலுள்ள ஒரு நோயாளியைப் போல நாம் நடத்த வேண்டும். அது விரும்பினாலும், அதற்கு நன்மையாக இராத
பல காரியங்கள் இருக்கின்றன. அவற்றை அதற்குத் தர நாம் மறுக்க வேண்டும். அதற்கு
நன்மையானதும், ஆனால் அது விரும்பாததுமான பல காரியங்கள் இருக்கின்றன. அவற்றை நாம்
அதற்கு வற்புறுத்தித் தர வேண்டும். நம் சரீரம் நமக்குச் சொந்தமல்ல, மாறாக, மிகப் பெரும் விலை
கொடுத்து நம்மை வாங்கியவரை நம் சரீரத்தில் மகிமைப்படுத்தும்படியாக, அது உண்மையில்
அவருக்கே சொந்தமாயிருக்கிறது என்பது போல நாம் நம் சரீரத்தை நடத்த வேண்டும்" (காண்க. 1 கொரி.6:20) என்கிறார் அர்ச்.
பெர்னார்ட்.
"நீ நம்மை மறந்து
நம்மை உன் முதுகின் பின்னாலே தள்ளிப்போட்டதினிமித்தம் நீயும் உன் குற்றத்தையும், உன் வேசித்தனத்தையும்
சுமந்து கொள் என்று தேவனாகிய ஆண்டவர் சொல் கிறார்" (எசேக். 23:35) என்று எசேக்கியேல் தீர்க்கதரிசி கூறும்
கடவுளின் கண்டனத்தை நம்மீது வருவித்துக் கொள்ளாதபடி நாம் கவனமாயிருக்க வேண்டும்.
நாம் நம் சரீரங்களை நான்காவது, கடைசி இடத்தில் வைத்துத்தான் நேசிக்க வேண்டும், "சரீரத்தின் பொருட்டே
நாம் வாழ்கிறோம் என்பது போல் அல்லாமல், அது இல்லாவிடில் நாம் வாழ முடியாது
என்பதற்காகவே அதை நாம் நேசிக்க வேண்டும்.'' ஆமென். (இக்கட்டுரை அர்ச். பதுவை
அந்தோனியாரின் பிரசங் கங்கள் அடங்கிய Antonius Patavinus Sermones என்னும் நூலிலிருந்து
எடுக்கப்பட்டது.)
Matha Parikara Malar –
March – June 2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக