சங். திரேஷியன் பாபு. FSSPX
முன்னுரை :
“திருச்சபைக்கு புறம்பே
இரட்சண்யம் இல்லை”, “இது திருச்சபையின் போதனை”. அது திருச்சபையால் கண்டிக்கப்பட்ட தப்பறை” என்ற சொற்றொடர்களை பலமுறை
நாம் வாசித்திருக்கிறோம். கேள்விப்பட்டிருக்கிறறோம். ஆனால் திருச்சபை என்றால் என்ன?
என்ற கேள்விக்கு
பதிலை தெரிந்துகொண்டோமா? திருச்சபையைப் பற்றி சரியாக தெரிந்துகொள்ளாததால்தான்
ஏராளமான பிரிவுகள், தப்பறைகள், ஆன்ம இழப்புகளைப் பார்க்கிறோம். ‘திருச்சபையில் காணக்கூடிய அமைப்பு இல்லை’ என்று சொன்ன லூத்தரால்
ஏற்பட்ட பிரிவினையை இன்றும் நாம் கண்டுக்கொண்டிருக்கிறோம். ‘மோட்சத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
(predestined) மட்டுமே திருச்சபையின்
உறுப்பினர்களாக இருக்கமுடியும்’ என்ற கால்வினின் (Calvin)
சித்தாந்தத்தால்
ஏற்பட்ட இழப்புகள் ஏராளம். இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் மிக முக்கியமான ஏடான “மக்களின் ஒளி” (Lumen Gentium) -ல் திருச்சபை என்ற சொல்லுக்கு
புதியதொரு இலக்கணம் அளிக்கப்பட்டதாக சங்க தந்தையரில் ஒருவரான கர்தினால்
வில்லிபிராண்ட் (Willebrand) கூறுகிறார்: புதியதென்றால், பழைய இலக்கணம் என்ன?
பழையதில் குறைபாடு
உள்ளதா? புதியதால்
வந்த நஷ்டம் என்ன? திருச்சபையின் போதனைகளை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அதை அறிந்து நடக்க
வேண்டுமானால், மெய்யான திருச்சபை எது என்றும், அதன் தன்மை என்னவென்றும் அறிவது அவசியமாகும்.
திருச்சபை என்றால் என்ன?
அதன் இயற்கை என்ன?
இயல்பு என்ன?
இலக்கணம் என்ன?
என்ற கேள்விகளுக்கு
பதில் அளிக்கும் வேதசாஸ்திரத்தின் ஒரு பகுதிதான் திருச்சபையியல் (Ecclesiology) என்று அழைக்கப்படும் சாஸ்திரம். இதனை ‘அடிப்படை
வேதசாஸ்திரத்தின்’ (fundamental theology) ஒரு
பகுதியாக வேதசாஸ்திரிகள் படிப்பது வழக்கம். மற்ற பகுதி தெய்வீக வெளிப்பாட்டை
பற்றியது. (De Revelatione)
14-ம் நூற்றாண்டு வரையிலான
எந்த வேதசாஸ்திர நூல்களிலும், ‘திருச்சபையியல்’ என்ற பிரிவு காணப்படவில்லை. இன்று உள்ளது போல்
புள்ளிகளை பிரித்தெடுக்கும் அறிவியலைவிட புள்ளிகளை சேர்த்து அழகிய ஓவியம்
படைக்கும் கலையை அவர்கள் விரும்பினார்கள். அடிப்படை வேதசாஸ்திரம் (fundamental theology) - ஒழுக்கம் சார்ந்த வேதசாஸ்திரம் (Moral theology) - வேத சத்தியங்கள் சார்ந்த வேதசாஸ்திரம் (Summa Thelogica’ ) என்று நவீன
பிரிவுகள் இல்லா வசந்த காலம் அது. உதாரணமாக கூறவேண்டுமானால், அர்ச். தாமஸ் அக்குவினாஸ்
எழுதிய - ‘Summa Theologica’ -வைப் பற்றி
குறிப்பிடலாம். இந்நூலில் எல்லா துறைகளும் அடங்கியுள்ளது. அனைத்தையும் ஒரே நூலில்
கோர்த்து சிதறியவற்றை ஒழுங்குபடுத்திய இந்நூல் உண்மையில் இமாலய சாதனைதான்.
அவருக்குப்பின் ஏற்பட்ட கால சூழ்நிலையால் இறையியலின் பல பிரிவுகள் தோன்றின.
அவற்றில் அஸ்திவாரமாய் அமைவது அடிப்படை வேதசாஸ்திரமாகும்.
“இன்று அர்ச். தாமஸ்
அக்குவினாஸ் மீண்டும் வந்து திருச்சபையியல் அடைந்திருக்கும் நிலையை காண்பாரானல்,
சந்தேகமின்றி
தன்னுடைய ளுரஅஅய வுhநழடழபiஉய-வின்
மூன்றாம் பாகத்தில் இதனை விரிவாக விவரித்திருப்பார்” என்கிறார் 20-ம் நூற்றாண்டின்
தலைசிறந்த கத்தோலிக்க வேதசாஸ்திரி Pére Gardeil, O.P., (La Crédibilité et
l’ apologétique, Ed. 1912, p.220).1-ம்
வத்திக்கான் சங்கத்திற்கு முன்:
திருச்சபையியல் என்ற
புதுப்பிரிவைத் தொடங்கியவர் என்ற பெருமை இஸ்பானிய வேதசாஸ்திரியான கர்தினால் ஜான்
தே தூர்கேமாடா என்பவரையே சாரும். இவர் எழுதிய
‘Summa de Ecclesia’ எனப்படும் மாபெரும் தொகுப்பு - இன்றும் திருச்சபையியலில்
சிறந்த குறிப்புரையாக விளங்குகிறது. இக்கால திருச்சபையியல் நூல் போலின்றி
பதிதங்களை எதிர்த்து கத்தோலிக்க விசுவாசத்தை போதிக்கும் விளக்க முறையாய்
தோன்றியது. பாப்பரசர்களின் அதிகாரப்பூர்வ போதனைகளை ஒன்றுகூட்டி திருச்சபையின்
படிப்பினையை தெளிவாக எடுத்துரைக்கும் நூல் இது.
திருச்சபை இலக்கியத்தின்
முதல் நூல் என்று பெருமையோடு அழைக்கப்படும் இந்நூலினை நான்கு பிரிவாக ஆசிரியர்
பிரிக்கிறார்.
1. திருச்சபையின் பொதுத்தன்மை குறித்தும்
2. பாப்பரசரின் முதன்மை குறித்தும்
3. பொதுசங்கங்கள் குறித்தும்
4. பிரிவினைகள், பதிதங்கள் குறித்தும்… என நான்கு பிரிவுகளாய் இந்நூலைப் பிரிக்கிறார். அவருக்குப்
பிறகு இப்பட்டியலில் குறிப்பிடப்பட வேண்டியவர் கர்தினால் தாமஸ் கயேதான் ஆவார்.
தாமஸ் கயேதான் என்பவர்
புகழ்பெற்ற இத்தாலிய கர்தினாலான இவர் அர்ச். சாமிநாதர் சபையைச் சேர்ந்தவர். 30 வயதைக் கடக்கும் முன்னரே
வேதசாஸ்திரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். 1508-ல் அர்ச். சாமிநாதர் சபையின்
தலைவராக நியமிக்கப்பட்ட இவர், பாப்பரசருடைய உரிமைகளுக்காக போராடினார். பின்னர் 1517-ல் பாப்பரசர் 10-ம் சிங்கராயரால் கர்தினாலாக
உயர்த்தப்பட்டார்.
அக்காலத்தில்
புராட்டஸ்டாண்ட் என்னும் புதிதாக முளைத்த பதிதர்களுக்கு எதிரான போராட்டத்தில் திருச்சபையின்
போதனைகளை எடுத்துரைக்கும் பணியில் தலைமை பொறுப்பேற்று அதனை செம்மையாக நடத்தினார்.
பாப்பரசரின் நிலையைக் குறித்து எழுந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில்
எழுதப்பட்ட நூல் - “திருச்சபை தலைவராக பாப்பரசர் ஏற்படுத்தப்பட்டது ஒரு தெய்வீக ஏற்பாடு…”
(“De Divina Insitutione Pontificatus Romani Pontificis)
“நீ இராயாய் இருக்கிறாய்,
இந்த இராயின் மேல்…”
(மத்.16:18)
என்ற வேத
வாக்கியத்தின் மிகச் சிறந்த விளக்க நூல் இது. ஒவ்வொரு வாக்கியமாய்ப் பிரித்து,
அதன் பொருளை
உணர்த்தி, அதன் நோக்கத்தை வலியுறுத்தி விளக்கமளிக்கிறார் தாமஸ்
கயேதான். வேதாகமத்தை நன்கு அறிந்த இவர், பழைய ஆகமத்தில் ஒவ்வோரு தடவையும் இவ்வாக்கியம்
எவ்வாறு பயன்படுத்தப்பட்டது. அதன் மூலம் பதிதர்கள் கூறுவது தவறு என்று இந்நூலின்
முதலாம் பாகத்தில் நிரூபிக்கிறார்.
திருச்சபை உலகம்
முடியும்வரை நீடித்திருக்கும்படி வழுவாமையும் (ஐகெயடடiடிடைவைல), சிரேஷ்ட முதன்மையும் (Pசiஅயஉல) அவசியமாய் இருப்பதால்
அர்ச். இராயப்பரின் அதிகாரமும், தவறாவரமும் அவர் இறப்பிற்கு பிறகு அர்ச். பாப்பானவருக்கு
எப்போதுமே இருக்கும் என்ற கத்தோலிக்க சத்தியத்தை நேர்த்தியாய் நிரூபிக்கும் முயற்சியை
தமது இரண்டாம் பாகத்தில் குறிப்பிடுகிறார்.
“De
Comparatione auctoritatis Papae et conciliorum”. பாப்பரசரின் அதிகாரத்தையும்,
பொதுசங்கங்களின்
அதிகாரத்தையும் ஒப்பிட்டுப்பார்க்கும் இந்நூல், பொதுசங்கங்களின் தன்மை குறித்து
எழுந்த தப்பறைகளுக்கு (ஊழnஉடையைசளைஅ) பதில்
அளிக்கும் விதமாய் அமைந்தது. இதன் மூலம் பரிசுத்த பாப்பரசரின் அதிகாரத்தை
அழகான முறையிலும், தெளிவோடும், கலை நுட்பத்தோடும் விளக்குகிறார்.
இவ்வரிசையில் இன்னும்
பலரை குறிப்பிடலாம். குறிப்பாக அர்ச். இராபர்ட் பெல்;;லார்மின், கர்தினால் தாமஸ் அருளப்பர்
என்னும் பல வேதசாஸ்திரிகள் திருச்சபையியலுக்காக பல்வேறு வழயில் பங்கு
ஆற்றியுள்ளனர். அர்ச்.இராபர்ட் பெல்லார்மின் வரையறுத்த திருச்சபை இலக்கணம் இன்;றும் ஞானோபதேசப்
புத்தகங்களில் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு, அக்கால தப்பறைகளை
எதிர்க்கும் முயற்சியாகவே, ‘திருச்சபையியல்’ நூல்கள் வெளிவந்தன. திருச்சபையின் தன்மை குறித்தான
நூல்கள் வெளிவருவது பிந்திய காலங்களில்தான்.
1-ம் வத்திக்கான் சங்கமும் அதன் பிறகும் :
மிக குறுகிய காலத்தில்
நடத்தப்பட்டாலும் இப்பொதுச்சங்கம் திருச்சபையியலுக்கு ஆற்றிய நன்மைகள் காலத்தால்
அளவிடமுடியாதவை. 1869-ல் தொடங்கி அதற்கு அடுத்த ஆண்டே நிறுத்த வேண்டிய கட்டாயத்தால் பாதியில்
நிறுத்தப்பட்ட இச்சங்கம் திருச்சபையின் 20-ம் பொதுச்சங்கமாகும்.
இதில் விவாதிக்கப்பட தேர்தெடுக்கப்பட்ட தலைப்புகள் இரண்டு.
1. விசுவாசம் (Dei Filius - DZ 1781 to
1820)
2. திருச்சபை (Pastor Aeternus - DZ 1821 to 1840)
திருச்சபை குறித்தான ஒரு கோட்பாடு விளக்கம் (Dogmatic Constitution) பொதுச் சங்கத்தினுள் அமைவது இதுவே
முதல் தடவையாகும். இதன் உருவாக்கம்,
அங்கு நடைபெற்ற
விவாதங்ககள், திருத்தங்கள் இவையனைத்தும் சுவராசியமானவை. அவற்றை தனியாக இன்னொரு முறை
காணலாம். அச்சங்கத்தில் திருச்சபையின் தன்மை குறித்து ஆராய முற்படும்போது சிலர்
திருச்சபையை புலன்களுக்கு புலப்படும் சபை (Visible Society) என்று வரையறுத்து திருச்சபையியலைத் தொடங்க
வேண்டுமென்றும், மற்றவர்கள் திருச்சபையை புலன்களுக்கு புலப்படாத - ஞான சரீர சபை (Mystical body) என்று தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
ஜொஹன்னஸ் ஆடம் மொலர் என்னும் ஜெர்மானிய வேத சாஸ்திரியினுடைய கருத்து அடங்கிய புதிய
கோட்பாடு, பல
ஜெர்மானிய வேதசாஸ்திரிகளின் ஆதரவை பெற்றிருந்தது. இக்கோட்பாட்டில் பயின்ற டொம்
ஸ்ரேடர் (Dom
Schrader) என்பவரால்தான் முதல் ஏடு தயாரிக்கப்பட்டது.
அதில் அதன் தாக்கமும் வெளிப்பட்டது. அவ்வேடு சங்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போது
அதனை சங்க தந்தையர் பலர் எதிர்த்தனர். ஒரு பொருளின் தன்மையை வரையறுக்கும்போது (to define) அப்பொருளின் சாரம் (essence) என்ன என்று கூறப்பட வேண்டுமே தவிர அதன்
ஒப்பனைகளை (analogies) தரக்கூடாது. ஒப்பனைகள்
விளக்கத்திற்கு அவசியமானாலும் வரையறுத்தலுக்கு பயன்படாது. அக்காரணங்களால் டொம்
ஸ்ரேடர் என்பவரின் ஏடு நிராகரிக்கப்பட்டது. பின்னால் சங். Kleutgen என்ற பெருமை வாய்ந்த வேதசாஸ்திரியால் இரண்டாம் கோப்பு
தயாரிக்கப்பட்டு, அது பொதுச் சங்கத்தின் நான்காம் அமர்வில் (ஜுலை18, 1870) திருச்சபையின் கோட்பாடு
விளக்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
20-ம் நூற்றாண்டு திருச்சபையின் நூற்றாண்டு:
முதலாம் வத்திக்கான்
சங்கம் தந்த தெளிவான போதனையாலும், பாப்பரசர் 13-ம் சிங்கராயர் திருச்சபை குறித்து எழுதிய மடல்கள்
மூலமாகவும், திருச்சபையியல் பல வேதசாஸ்திரிகளின் ஆர்வத்தை ஈர்த்தது. 13-ம் சிங்கராயர் எழுதி Immortale Dei (1889), Sapientiam
Christianae (1890),
Satis Cognitum (1896) சுற்றுமடல்கள் திருச்சபையியலின் மிக முக்கிய இலக்கியமாக
கருதப்படுகின்றன.
20-ம் நூற்றாண்டின் முதலாம்
பகுதியில் பல நூல்கள் வெளிவந்தன. திருச்சபையியலை குறித்தான நூல்களில் 80 சதவீதம்
இக்காலக்கட்டத்தில்தான் இயற்றப்பட்டன. Cardinal Billot S.J., Schultes S.J., Van Noort,
Catharin, Cardinal Journet O.P. ஆகிய தலைசிறந்த வேதசாஸ்திரிகள் எழுதிய நூல்கள்
திருச்சபையியலின் பாட நூல்களாய் மாறின. திருச்சபை இயலின் உயர்நிலை அறிவு பெற
விரும்புவோருக்கு Cardinal Billot S.J. எழுதிய ‘கிறீஸ்துவின் திருச்சபை’ (De Ecclesia Christ)
என்ற நூல் அவசியமானது. கூர்ந்த அறிவுடனும்,
தெளிவான
சிந்தனையோடும், துல்லிய விளக்கத்தோடும் அமைந்த இந்நூல் திருச்சபையியலின் அஸ்திவாரத்தில்
முக்கிய பங்கு வகிக்கிறது. பல்லாயிர குருமாணவர்களுக்கு இதுதான் பாடப்புத்தகமாய் பல
ஆண்டுகள் இருந்துள்ளது. இலத்தீன் மொழியில் இயற்றப்பட்ட இந்நூலினை முதன் முறையாக
அர்ச்.பத்தாம் பத்திநாதர் சபை குருவான சங். Jean Michel Gleize (ஈக்கோன் குருமட திருச்சபையியல்
பேராசிரியர்) பிரெஞ்சு மொழியில் மொழிப்பெயர்த்தார்.
திருச்சபை - ஞான சரீரம்:
முதலாம் வத்திக்கான்
சங்கத்தில் ஒரு பிரிவினர் இக்கொள்கையை கொண்டிருந்தனர் என்று குறிப்பிட்டிருந்தோம்.
இரு பிரிவு என்றதும் ஒரு பிரிவு சத்தியமும், மற்றொன்று தப்பறைகளையும்
கொண்டுள்ளது என்று அர்த்தம் இல்லை. மாறாக ஒன்று மற்றொன்றைவிட துல்லியமாகவும்,
தெளிவாகவும்
விளக்கம் தரக்கூடியது.
திருச்சபை -
கிறீஸ்துநாதரின் ஞான சரீரம் (Mystical body) என்ற
கண்ணோட்டத்தோடு பார்க்கும் முறை மிகவும் மேன்மையானது. ஆரோக்கியமானது. அர்ச்.
சின்னப்பர் திருச்சபையைப் பற்றி குறிப்பிடும்போதெல்லாம் அதனை கிறீஸ்துநாதரின்
திருச்சரீரமாக ஒப்பிடுகிறார்.
“எல்லாவற்றையும் அவருடைய
பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினதுமன்றி, அவரை சர்வ திருச்சபைக்கும் தலைமையாக கொடுத்தார்.
அந்த திருச்சபை அவருடைய சரீரமாகவும், எல்லாவற்றிலும் எல்லாமுமாக நிறைந்து நிரப்புகிற
அவருடைய பூரணமாகவும் இருக்கின்றது” (எபே.1:22-23)
“அவரே, திருச்சபையாகிய
சரீரத்திற்குத் தலைமையானவர். எல்லாவற்றிலும் தலைமைப்பட்டம்
பெற்றவராயிருக்கும்படிக்கு அவரே ஆதியும், மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.
இப்போது நான் உங்கள் நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷித்து, கிறீஸ்துவின் பாடுகளில்
குறைவாயிருப்பதை அவருடைய சரீரமாகிய திருச்சபைக்காக என் மாம்சத்தில் நிறைவேற்றி
வருகிறேன்” (கொலோ.1:18,24)
“நீங்களோ கிறீஸ்துநாதருடைய
சரீரமும், அவயத்தின்
அவயங்களுமாயிருக்கிறீர்கள்” (1கொரி.12:27)
இத்தகைய நோக்குடன் எழுப்பப்பட்ட திருச்சபையியலும் பல புத்தகங்கள் படைக்கப்பட்டது.
Fr.
Mersch, Fr. Mura, Mgr. Tromp S.J. என பல திருச்சபையியல் வல்லுநர்களின் படைப்பு
வியப்புக்குரியது. இருப்பினும் திருச்சபை இயலின் இலக்கணம் வரையறுக்கப்படும்போது
ஞான சரீரம் என்ற கருத்தோடு தொடங்கினால் ஆரம்பத்தில் எவ்வித அச்சமும்
இல்லையென்றாலும் இறுதியில் பலவித தப்பறைகள் உள்ளே நுழைய காரணமாயிருக்கிறது.
இதனை எவ்வாறு
புரிந்துகொள்ள வேண்டும், எவ்வாறெல்லாம் புரிந்துகொள்ளக் கூடாது, இதனை தவறாக புரிந்து
கொள்வதால் ஏற்படும் ஆபத்து என்னவென்று விளக்குவதற்காக பலருடைய கோரிக்கைகளை ஏற்று
நன்றாக ஆராய்ந்து, இறுதியில் 1945, ஜுன் 29-ம் தேதி “Mystici Corporis” என்ற சுற்றுமடலை
பாப்பரசர் 12-ம் பத்திநாதர் எழுதினார். இந்நிருபம் நிலைநிறுத்திய சத்தியங்களால் திருச்சபை
போதனைகளை ஏற்க மறுத்து புதிய பாதையில் திருச்சபையியலை கொண்டு செல்ல பலர் எடுத்த
முயற்சி நிலை குலைந்தது.
முடிவுரை:
வாசகர்களே! நம்மில் பலர்
சத்தியங்களை ஒரு மிக பெரிய சுவராக கருதி வருகிறோம். அதற்கு மறுப்பக்கம் என்ன
நடக்கிறது என்று நம்மால் அறிய இயலாது என்று கூறி, அதனை விட்டு விலகி செல்கிறோம்.
ஆனால் அதனை மாபெரும் சுவரென்று கருதுவது தவறு. மாறாக, அது பலவித திரவியங்களைக்
கொண்டுள்ள அருங்காட்சியகம். இது மிகப் பெரிய சமுத்திரம் போன்றது. உள்ளே செல்லச்
செல்லத்தான் எவ்வளவு செல்வங்கள் அடங்கியுள்ளது என்று நம்மால் அறிய முடியும். ‘தொட்டனைத் தூறும்
மணற்கேணி’ போன்றது.
திருச்சபையியலை நாம் கற்கக் கற்கத்தான் திருச்சபை பற்றிய நம் அறிவு பெருகும்.
விசுவாசமும் அதிகரிக்கும். தீபம் அதிகரிக்க வெப்பம் அதிகரிப்பதில்லையா? அதே போன்று விசுவாசம்
என்ற ஒளி அதிகரிக்க நம்மில் தேவ சிநேகம் என்ற திவ்விய வெப்பம் அதிகரிக்கும்.
வெளியே தேவையில்லா
முயற்சியாகத் தோன்றினாலும், உள்ளே செல்லும்போதுதான் அதன் தேவையும், அருமையும் புரிகிறது.
முத்துக்கள் இருப்பது ஆழத்தில்தானே!
மீண்டும் நல்லதொரு
திருச்சபையியல் தழைத்தோங்க திருச்சபையின் பாதுகாவலரான அர்ச்.சூசையப்பரிடம்
மன்றாடுவோமாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக