Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 28 டிசம்பர், 2013

மோட்சத்திற்கு ஓர் எளிய வழி!


(சங். ஜேம்ஸ் பீக் சுவாமி, 1985-ல் ஈக்கோனில் அதிமேற்றிராணியார் வந். லெஃபவர் ஆண்டகை அவர்களால் குருப்பட்டம் பெற்றார். சுவாமியவர்கள் சபையின் பல்வேறு குருமடங்களில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தற்சமயம் அமெரிக்காவின் வினோனாவிலுள்ள அர்ச்.தாமஸ் அக்குவினாஸ் குருமடத்தில் இலத்தீன், தத்துவ சாஸ்திரம் மற்றும் பரிசுத்த சுவிசேஷம் ஆகிய பாடங்களை கற்றுக்கொடுக்கிறார். இங்கே, சுவாமியவர்கள் 2004-ம் ஆண்டு தவக்காலத்தின் 2-ம் ஞாயிறன்று மேலே குறிப்பிட்ட குருமடத்தில் நிகழ்த்திய பிரசங்கத்தின் தமிழாக்கம் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்.)
உங்கள் அர்ச்சிப்பே கடவுளின் சித்தமாயிருக்கிறது
                இன்றை நிருபத்திலிருந்தும், (சுவிசேஷத்தின்) வேறு பல பகுதிகளிலிருந்தும், நாம் அர்ச்சிஷ்டவர்களாக வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார் என்பதை நாம் அறிகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, இதுவே நம்முடைய சிருஷ்டிப்பின் நோக்கமாக இருக்கிறது. கடவுளை அறிந்து, சிநேகித்து, சேவிப்பதும், அதனால் மோட்சத்தில் என்றென்றும், அவரோடு மகிழ்ந்திருப்பதுமே அந்த நோக்கம். மேலும் பாவத்திற்குப் பிறகு, இதுவே சேசுநாதருடைய மனிதாவதாரம் மற்றும் இரட்சண்யத்தின் நோக்கமாக இருக்கிறது. ஏனெனில், தம்முடைய ஏகபேறான திருச்சுதனில் விசுவாசங் கொள்கிறவன் எவனும் அழிந்துபோகாமல், நித்திய ஜீவியத்தைப் பெற்றுக் கொள்ளும்படியாக, தமது ஏக பேறான திருச்சுதனையே உலகிற்குக் கையளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகத்தை நேசித்தார்.
                நாம் அர்ச்சிஷ்டவர்களாக வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார். நம்முடைய கண்ணோட்டத்தின்படி நாம் செய்ய வேண்டியது என்ன? நாம் அதை விரும்ப வேண்டும். நம்முடைய அர்ச்சிஷ்டதனம் முழுவதும் தேவ சித்தத்தோடு நம் சித்தத்தை ஒன்றிப்பதில்தான் அடங்கியிருக்கிறது. என்னை நோக்கி ஆண்டவரே, ஆண்டவரே என்று சொல்லுபவன் எல்லாம் மோட்ச இராச்சியத்திற்குள் பிரவேசிக்க மாட்டான், பரலோகத்திலுள்ள என் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுகிறவன் எவனோ அவனே பிரவேசிப்பான்என்கிறார் ஆண்டவர். ஆகவே அவருடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்பட வேண்டும்என்று நாம் ஜெபிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நம்முடைய அர்ச்சிஷ்டதனம் முழுவதும் இதிலேதான் அடங்கியிருக்கிறது. மகா பரிசுத்த கன்னி மாமரியின் விஷயத்திலும் இதுவே உண்மையாக இருந்தது. அடுத்த ஞாயிறன்று மாமரி போற்றி ஸ்துதிக்கப்படுவதை நாம் கேட்போம். உம்மைத் தாங்கிய உதரமும், நீர் பாலுண்ட கொங்கைகளும் பாக்கியம் பெற்றவையேஎன்று ஒரு பெண் சொல்ல, நம் ஆண்டவர் ஆனாலும் ஆண்டவருடைய வார்த்தையைக் கேட்டு கடைப்பிடிக்கிறவர்கள் அதினிலும் பாக்கியவான்கள்என்று பதில் சொன்னார். இதுவே மகா பரிசுத்த கன்னிகையின் மனநிலையாக இருந்தது: இதோ, ஆண்டவருடைய அடிமையானவள்@ உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவதுஎன்று மாதா சொன்னார்கள். இதுவே அவர்களுடைய அர்ச்சிஷ்டதனமாக இருந்தது. எண்ணிலடங்காத கொடைகளைக் கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட அவர்கள், அவற்றை முழுமையாகப் பயன்படுத்த வேண்டியவர்களாக இருந்தார்கள். அப்படியே அவர்கள் அவற்றைப் பயன்படுத்தவும் செய்தார்கள்.
                நம்முடைய அர்ச்சிஷ்டதனம், தேவ சித்தத்தை நாம் நிறைவேற்றுவதில் அடங்கியிருக்கிறது. இந்த தேவ சித்தம் எது? நம்முடைய அர்ச்சிப்புதான். நாம் அதை விரும்ப வேண்டியவர்களாக இருக்கிறோம். நாம் மோட்சத்திற்குப் போக விரும்புகிறோமா? நாம் சொல்லும் பதில்: ஆம்! என்பதுதான். ஆனால் மோட்சத்தில் அர்ச்சிஷ்டவர்கள்தான் இருக்கிறார்கள். ஆகவே மோட்சத்திற்குப் போக விரும்புவது என்பதன் அர்த்தம், அர்ச்சிஷ்டவனாக விரும்புவது என்பதுதான். நாம் அதை விரும்ப வேண்டும். இவ்வளவு வெளிப்படையான ஒரு விஷயத்தைப் பற்றி நான் ஏன் இவ்வளவு அதிகமாக வலியுறுத்துகிறேன்? ஏனென்றால் இதைப்பற்றி ஒரு முடிவுக்கு வரும்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஓர்  அர்ச்சிஷ்டவனாக வேண்டும் என்று உண்மையாகவே விரும்புவதுதான். கடவுள் இதை விரும்புகிறார். நாம் இதை விரும்புவோமானால், அது அப்படியே ஆகும்.
                இதுவே அர்ச். குழந்தை சேசுவின் திரேசம்மாளின் விசுவாசமாகவும், நம்பிக்கையாகவும் இருந்தது. தன்னை நாம் கண்டுபாவிக்க வேண்டுமென்று அவள் அழைக்கிறாள். ஆகவே இந்த ஞாயிற்றுக்கிழமையில், இந்த மிக எளிமையானதும், எல்லாவற்றிற்கும் மேலாக, நம்மை மிகவும் ஊக்கப்படுத்துவதுமான அவளுடைய ஞான படிப்பினையை நமக்கு நாமே நினைவுப்படுத்திக் கொள்வது நமக்கு நன்மையளிப்பதாக இருக்கும். அர்ச். தெரேசம்மாள் தன்னுடைய சுய சரிதையில், இப்படி எழுதுகிறாள்: அன்புள்ள தாயாரே, நீங்கள் அறிந்திருப்பது போல, ஓர் அர்ச்சிஷ்டவள் ஆக வேண்டும் என்று நாம் எப்போதுமே விரும்பி வந்திருக்கிறேன். ஆனால அர்ச்சிஷ்டவர்களோடு என்னை நான் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எல்லாம் இந்தத் துரதிர்ஷ்டமான வித்தியாசம் எப்போதும் இருப்பதை நான் காண்கிறேன். அவர்கள் மேகங்களுக்குள் தங்கள் தலைகளை மறைத்துக் கொள்கிற பெரிய மலைகளாக இருந்தார்கள். நானோ கடந்து போகிறவர்களின் கால்களில் மிதிபடுகிற எந்த முக்கியத்துவமுமில்லாத ஒரு மணற்துகளாக மட்டுமே இருக்கிறேன்.அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரங்களை நாம் வாசிக்கும்போதெல்லாம், இதுதான் நம்முடைய அனுபவமாக இருக்கிறதல்லவா?  அவர்களை மோட்சத்திற்கு கூட்டிச் செல்ல கடவுள் பயன்படுத்திய பாதைகளை நாம் பார்க்கிறோம். இந்தப் பாதைகளை நாம் பார்த்து, என்னால் முடியாது என்று நாம் சொல்கிறோம். அது எனக்கு உரியது அல்ல என்று நாம் நினைக்கிறோம். உதாரணமாக, வட அமெரிக்க வேதசாட்சிகளின் சரித்திரங்களை நாம் வாசிக்கிறோம். அதிலே அவர்களுடைய மிகக் கொடுமையான வேதசாட்சிய மரணத்தைக் காண்கிறோம். அது போக, அவர்களுடைய கடுமையான வேதபோதக உழைப்புகளையும், அஞ்ஞானிகள், புறஜாதிகள், காட்டுமிராண்டிகள் மத்தியில், அந்த சீதோஷ்ண நிலைகளில் அந்த உணவு வகைகளோடு ஜீவித்த அவர்களுடைய வாழ்வின் பெரும் சிரமங்களையும் நாம் பார்க்கிறோம். அந்த அளவுக்கு உயர முடியாது என்று நாம் நினைக்கிறோம். அதுவும் உண்மையாகவே இருக்கிறது. அர்ச்சிஷ்டவர்களுடைய சரித்திரங்களை நாம் வாசிக்கும்போதும், அவர்களுடைய தவ வாழ்வையும், அவர்களுடைய ஜெபங்களையும், அவர்களுடைய பரவச நிலைகளையும், அவர்களுடைய புதுமைகளையும் கூட நாம் காணும்போதும், ஓர் அர்ச்சிஷ்டவனாக இருப்பதற்கு இவையெல்லாம்தான் வேண்டியிருக்கிறது என்றால், இது எனக்கு அப்பாற்பட்டது என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோம்.
                இதுவே அர்ச். தெரேசம்மாளின் முடிவாகவும் இருந்தது: அவர்கள் மலைகள்@ நானோ ஒரு சிறு மணல். அவர்களைப் போல் ஒரு அர்ச்சிஷ்டவள் ஆவது சாத்தியமே இல்லை. நான் மிகவும் சிறியவள். மிக அற்பமானவள்”. அவள்  தொடர்ந்து பேசுகிறாள்: ஆனாலும் நான் அதைரியப்படப் போவதில்லை. நிறைவேற முடியாத நோக்கங்கள் எதையும் கடவுள் என்னில் தூண்டி யெழுப்பமாட்டார். கடவுள் இதை விரும்புகிறார். ஆம், கடவுள் நம் அர்ச்சிப்பை விரும்புகிறார். ஆகவே இது சாத்தியம்தான். இந்த சாத்தியம் நமக்குள் இல்லை. இருந்தாலும் இது சாத்தியம்தான். வெளிப்படையாகத் தெரிகிறபடி, பெரிய காரியம் எதுவும் என்னிலிருந்து வர முடியாது. நாமல்ல, நம்மிடமுள்ள மிகக் குறைவான திறமைகளைக் கொண்டு. அர்ச்சிஷ்டவர்கள் என்று நாம் அழைக்கிற அந்த சம்மனசுகளைப் போல, அந்த விசுவாச நாயகர்களைப் போல வளர நம்மால் முடியாது”- அர்ச். தெரேசம்மாள் இப்படியே உணர்ந்தாள்.
                காளை மாடுகளின் பெரிய உருவத்தால் கவரப்பட்ட ஒரு தவளை பற்றிய பழங்கதை ஒன்று எனக்கு நினைவூட்டுகிறது. அது எந்த அளவுக்கு அதிகம் கவரப்பட்டது என்றால், காற்றைத் தொடர்ந்து உள்ளிழுப்பதன் மூலம் அவற்றைப் போல் தான் ஆக வேண்டுமென்று விரும்பியது. இவ்வாறு செய்து அது வீங்கிக் கொண்டே வந்தது. அந்தக் காளைகளைப் போல் ஆக தொடர்ந்து முயற்சி செய்து, கடைசியில் வெடித்துச் சிதறிப்போனது. மாபெரும் அர்ச்சிஷ்டவர்களின் அச்சுக்குள் நம்மை நாமே பொருத்திக் கொள்ள விரும்பினால், நமக்கும் இதுதான் நடக்கும். அவர்களுடைய  தவ ஜீவியமும், மற்ற ஜீவிய முறைகளும் நமக்கு அப்பாற்பட்டவை. அவற்றிற்கு முயற்சித்தால் நாம் வெடித்து விடுவோம். அர்ச்.தெரேசம்மாள் இப்படித்தான் நினைத்தாள்: என்னிடமிருந்து பெரிதான காரியம் எதுவும் வர முடியாதென்று. ஆனாலும் அந்த அர்ச்சிஷ்டதனத்தை என்னில் தூண்டுவது எனக்கு சாத்தியமானதாகவே இருக்க வேண்டும். என் அற்பத் தன்மையையும் மீறி, நான் இருக்கிற விதமாகவே என்னை நான் அர்ச்சிஷ்டதனத்திற்கு எழுப்ப வேண்டியிருக்கிறது. ஆனாலும் மோட்சத்திற்கு ஒரு நேரடியான குறுக்கு வழியாக, என்னுடைய சொந்தப் பாதையாக இருக்கிற ஒரு சிறிய பாதையை நான் எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும்.
                ஒரு மணற்துகள் ஒருபோதும் மலையாக முடியாது. இருநதாலும் அதன் அர்ச்சிஷ்டதனத்தை கடவுள் விரும்புகிறார்;. எனவே அது சாத்தியமானதுதான். ஆகவே ஒரு குறுக்கு வழி இருக்க வேண்டும். உத்தமதனத்தின் ஏணியில் ஏறுவதற்குப் பதிலாக, உவமானப்படி ஒரு மின்தூக்கியாக அவளை மேலே தூக்கிச் செல்கிற ஒரு குறுக்கு வழியில் அவள் மேலேறி வருவாள். நேராக மோட்சத்திற்குப் போவதற்கான ஒரு எளிதான வழி இல்லையா? தெரேசம்மாளை சுமந்து செல்கிற மின்தூக்கி இருக்கிறதா, இல்லையா?  இதற்கான பதிலைத் தனக்குள் கண்டுபிடிக்க முடியாமல், அவள் தனக்கு வெளியே அதைத் தேடினாள். கடவுளையும் அவருடைய எழுதப்பட்ட வார்த்தையையும் கலந்தாலோசித்தாள். அதிலே, “சிறியவனாயிருக்கிறவன் எவனோ, அவன் என்னிடம் வருவானாக" என்ற வார்த்தைகளை அவள் வாசித்தாள். ஆக சிறியவனாயிருத்தல் என்பது இந்த அர்ச்சிஷ்டதனத்தை ஆவலோடு நாடுவதற்கு ஒரு தடையாக இல்லை. அது அதற்கான ஒரு நிபந்தனையாகக் கூட இருக்கிறது. சிறியவனாயிருக்கிறவன் எவனும் என்னிடம் வரக்கடவான்”. அவள் தொடர்ந்து வாசித்தாள்: தன் மகனை உற்சாகப்படுத்தும் ஒரு தாயைப்போல நாம் உன்னைத் தேற்றுவோம். நீ அவளுடைய மார்பில் சுமந்து செல்லப்படுகிற குழந்தையைப் போலவும், ஒரு தாயின் மடியில் சீராட்டப்படுகிற குழந்தையைப் போலவும் இருப்பாய்”. “என் இருதயத்தை மகிழ்வித்த இவ்வளவு அதிக கனிவுள்ளதும், அதிக  மதுரமுள்ளதுமான வார்த்தைகளை நான் ஒருபோதும் கேட்டதில்லை. என்னை மோட்சத்திற்கு எடுத்துச் செல்லத் தேவையான மின்தூக்கி, உமது திருக்கரங்கள்தான், என் சேசுவே!என்பதுதான் இதற்கு அவளுடைய பதிலாக இருந்தது.
                நம்முடைய அர்ச்சிப்பை சர்வேசுரன் விரும்புகிறார். அவரே அதை நிறைவேற்றுவார். நம்மால் அது முடியாது. நம்மையே அர்ச்சிஷ்டவர்கள் ஆக்குவது நம்மால் முடியாத காரியம். அது தெய்வீக வேலை. கடவுளே அதைச் செய்வார். ஒரு சில தாலந்துகளை மட்டுமே அவர் எனக்குத் தருகிறார் என்றால், ஒரு சில தாலந்துகளைத்தான் அவர் என்னிடமிருந்து திருப்பிக் கேட்பார். ஆசீர்வதிக்கப்பட்ட திவ்விய கன்னிகைக்கு, தாலந்துகளின் மிகப்பெரும் புதையல் ஒன்று கொடுக்கப்பட்டது. பெரும் அர்ச்சிஷ்டவர்களுக்கு, அதாவது மக்கள் கூட்டங்களிடையே மலைகளாக இருந்தவர்களுக்கு மிக அநேக தாலந்துகள் கொடுக்கப்பட்டன. அவர்களும் அவற்றை திருப்பிச் செலுத்தினார்கள். ஒரு சில தாலந்துகள் மட்டுமே கொடுக்கப் பட்டிருக்கிறவர்கள், ஒரு சிலவற்றையே திரும்பச் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கடவுள் நம்மை சிருஷ்டித்திருக்கிற விதமாகவே நாம் அர்ச்சிஷ்டவர்களாக வேண்டும் என்று விரும்புகிறார். தெய்வீக வேலை என்ற காரியம் எழும்போதெல்லாம், நம்முடைய அர்ச்சிப்பு, அல்லது மற்றவர்களுக்குக் கடவுளைத் தருவதாகிய அப்போஸ்தலிக்க அலுவல் ஒரு தெய்வீகமான அலுவலாக இருக்கிறது. நம்மால் எதுவும் செய்ய முடியாது. தனக்கு ஓர் அப்போஸ்தலிக்க அலுவல் தரப்பட்ட சமயத்திலும் இதுவும் அர்ச். தெரேசம்மாளின் முடிவாக இருந்தது. அப்போஸ்தலர்களாயிருக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிற நாமும் இதைக் காண்பது நமக்கு நல்லதாக இருக்கிறது.
                அவள் நவ கன்னியர்களின் தலைவியாக நியமிக்கப்பட்டாள். இது எளிதான வேலைதான், தன் சொந்த உணர்வின்படி ஆத்துமங்களுக்கு போதிப்பது மட்டும்தான் என்றே அவள் முதலில் நினைத்தாள். ஆனால் அது தவறு என்று சீக்கிரமே அவள் உணர்ந்துகொண்டாள். இல்லை, ஓர் ஆத்துமத்தை நீங்கள் அசைக்க விரும்பினால், அதற்கு வரப்பிரசாதம் தேவைப்படுகிறது.
                அதைப்போல ஓர் ஆத்துமத்தின் மீது செயல்படுவது நமக்கு சாத்தியமில்லாத காரியம். பிரியமுள்ள தாயாரே, என்னால் எதையும் செய்ய முடியாது என்பதை நான் புரிந்து கொண்டவுடன், நீங்கள் எனக்குத் தந்த அலுவல் மேற்கொண்டு கடினமானதாகத் தோன்றவில்லை. அது முடியாத காரியம், ஆகவே அது கடினமாக இல்லை. எனக்குத் தேவையான ஒரே ஒரு காரியம் சேசுவோடு என்னை அதிகமதிகமாக ஒன்றிப்பதுதான், மற்றதெல்லாம் எனக்கு சேர்த்துக் கொடுக்கப்படும் என்று நான் உணர்ந்தேன்”. “முதலில் சர்வேசுரனுடைய இராச்சியத்தையும், அதன் நீதியையும் தேடுங்கள். பிறகு மற்றதெல்லாம் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்”. நம் ஆண்டவர் கடவுளையும், அவருடைய கட்டளைகளையும் அவருடைய சித்தத்தையும் தேடுவது பற்றிப் பேசினார். அஞ்ஞானிகள் தேடுகிற உடை, தங்குமிடம், உணவு, இளைப்பாற்றி போன்ற மற்ற காரியங்கள் எல்லாம் உனக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும் என்று அவர் கூறினார். அர்ச். தெரேசம்மாள் மேலும் ஒருபடி மேலே போகிறாள்: கடவுளைத் தேடுங்கள், கடவுளை மட்டும் தேடுங்கள், அப்போது மற்றவையெல்லாம், அதாவது, தனக்கும் மற்றவர்களுக்கும் தேவையான வரப்பிரசாதங்கள், நமக்குக் கொடுக்கப்படும். இதன் கருத்து முழுவதும் கடவுளை மையமாகக் கொண்டது. அவள் கடவுளை நாடினாள், அவரை மட்டுமே நாடினாள், வேறு எதையுமல்ல. மற்ற எல்லாமும், நமக்குத் தேவையான எந்த வரங்களும், தேவைப்படும் எந்த ஒரு புண்ணியமும் நமக்குத் தரப்படப்போகிறது. ஆகவே நான் நல்ல ஆண்டவரின் கரங்களில் ஒரு குழந்தையாக என்னை வைத்துவிடுகிறேன். அவருடைய கரங்களில் சௌகரியமாக அமர்ந்துகொண்டு, நான் அவரிடம் : ஆண்டவரே, உம்முடைய குழந்தையைப் போஷிக்க இயலாத அளவுக்கு நான் மிகவும் சிறியவள் என்று அவள் சொன்னாள். கடவுள்தான் அதைச் செய்ய வேண்டும். அவளே கூறுவது போல, அவள் அவருடைய கரங்களைவிட்டு விலகமாட்டாள். அவருடைய முகத்திலிருந்து தன் கண்களைக் கூட அகற்றமாட்டாள். மேலும் அவள் மகளுக்குரிய நம்பிக்கையோடு தன்னை அர்ப்பணித்த அவளுடைய அர்ப்பண உணர்வுபற்றி நாம் பேசுகிறோம்.
                கடவுள் நம் தந்தை. நாம் அவருடைய பிள்ளைகள். அவர் மெய்யாகவே ஒரு தந்தையாக இருக்கிறார்.  பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவேஎன்ற பெயரால் நாம் அவரை அழைக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். ஒரு குடும்பத்தில் உள்ள நிலை என்ன என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அதில் சிறியவர்கள் தாங்கள் இருக்கிறபடியே ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் சிறியவர்களாக இருப்பதற்காக அவர்கள் திட்டப்படுவதில்லை. அவர்கள் அன்போடு ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். பெரிய குழந்தைகள் எந்தக் காரியத்தைச் செய்வதால் கடிந்து கொள்ளப்படுவார்களோ அதே காரியத்தை இவர்கள் செய்தால், அதற்காக இவர்கள் கடிந்து கொள்ளப்படுவதில்லை. நம் மட்டில் கடவுளின் மனநிலையும் இதுதான். நம்முடைய தகுதி என்ன என்பது அவருக்குத் தெரியும். தங்கள் பெற்றோரை நேசித்து, அவர்களை சந்தோஷப்படுத்த விரும்புகிறவர்களும், அவர்களுக்காக சிறு சேவைகள் செய்கிறவர்களும், சிறு பரிசுகளை அவர்களுக்குத் தருகிறவர்களுமாகிய குழந்தைகளாக நாம் இருக்க வேண்டும். கடவுளின் பேரில் இதுவே நமது மனநிலையாக இருக்க வேண்டும். நாம் சிறியவர்கள், அதாவது நாம் வரம்புக்குட்பட்டவர்கள், குறைபாடுள்ளவர்கள், பெரிய காரிங்களைச் செய்ய நமக்கு சக்தியில்லை.
                தனது சுயசரிதையில் அர்ச். தெரேசம்மாள் தன்னுடைய சிறிய தன்மையை, தன்னுடைய குறைபாடுகளை வலியுறுத்துகிறாள். ஜெபத்தின்போது உறக்க மயக்கமாக இருப்பதும், நன்றியறிதலின்போதும், தியானப் பிரசங்கங்களின்போதும் வறட்சியுள்ளவர்களாக இருந்தது போன்ற தன்னுடைய சிறிய தன்மையின் குறைபாடுகளை அர்ச்.தெரேசம்மாள் தன் சுயசரிதையில் எழுதியிருக்கிறாள். மேலும் தான் ஜெபமாலை ஜெபிக்கும் விதம் பற்றிஅவள் என்ன சொல்கிறாள்? இதை ஒப்புக்கொள்வது ஒரு பயங்கரத்திற்குரிய காரியமாக இருக்கிறது. ஆனால் எந்த ஒரு மயிராடையையும்விட ஜெபமாலை செய்வது எனக்கு கூடுதல் பரித்தியாக செயலாக இருக்கிறது. நாம் மிக மோசமாக ஜெபமாலை ஜெபிக்கிறேன். சித்தத்தின் மீதான சோதனைகள் என்னை வலுவந்தம் செய்கின்றன. ஜெபமாலையின் பரம இரகசியங்களை என்னால் தியானிக்க முடியவில்லை. அவற்றின் மீது என் மனதை நிலைநிறுத்த என்னால் முடியவில்லை. மிகுந்த சிநேகமுள்ளவளாக இருக்க முயன்றவளாகிய தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கான கடைசி வழி ஜெபிப்பதை விட்டுவிட்டு ஓடிப்போவதுதான். எப்போதுமே அதை நன்றாகச் சொல்ல அவளால் முடியவில்லை. அவள் தன்னுடைய குறைபாடுகளை ஏற்றுக்கொண்டாள். அவற்றிற்கு எதிராகப் போராடினாள். அவற்றைக் குறித்து தன்னையே பலவந்தத்திற்கு உட்படுத்தினாள். ஆனாலும், இதைக் குறித்துக்கொள்ளுங்கள்: அவள் தான் இருக்கிறபடியே தன்னை ஏற்றுக்கொண்டாள். அவள் தனக்கெதிராகப் போராடினாள். தன் குறைபாடுகளை எவ்விதமான எரிச்சலோ, மனக்கலக்கமோ, கவலையோ, அதைரியமோ இன்றி கவனித்தாள். இங்கே அவள் தனக்கு அளிக்கப்பட்ட தாலந்துகளை மட்டும் கொண்டிருந்தாள். அவற்றை மட்டுமே அவள் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் கடவுளின் விருப்பமாக இருந்தது. இதுமட்டுமேதான். அவள் ஒரு போதும் அதைரியப்பட்டிருக்க மாட்டாள். உதாரணமாக, நான் வார்த்தைப்பாடு கொடுப்பதற்கு முன்பாக நான் செய்த தியானப் பயிற்சிகளைப் பற்றிய விஷயத்தை நான் நிஜமாகவே சொல்ல வேண்டியிருக்கிறது. அது எந்த ஆறுதலலையும் எனக்குத் தரவில்லை. வெறுமனே முழுமையான வறட்சியையும், கிட்டத்தட்ட ஒரு அலட்சிய உணர்வையும் மட்டுமே அது எனக்குத் தந்தது. நித்தியத்தின் மாபெரும் தியானத்தை நான் தொடங்கும் வரையிலும், கடவுள், தம்முடைய பிரசன்னத்தை நான் உணரச் செய்யவேயில்லை என்று கூட நான் சொல்லத் துணிவேன். நான் அதைப் பற்றி முறையிடவில்லை. அது நிகழ வேண்டுமென்று விரும்பினேன். உண்மையில், என்னில் அர்ச்சிஷ்டவர்களுக்குரிய எதுவும் இருக்கவில்லை என்பதை இது காட்டுகிறது! ஜெபத்தில் என்னுடைய இந்த வறட்சிக்கு என் சொந்தத் தவறும், என் சொந்த ஞான வெதுவெதுப்பும், பிரமாணிக்கமின்மையும்தான் காரணமென்று நான் ஒப்புக்கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன். ஏழு ஆண்டுகள் துறவற ஜீவியத்திற்குப் பின், நானும் உறங்கி விட்டது போல இயந்திரத்தனமாக என் எல்லா ஜெபங்களும், நன்றியறிதல்களும் செய்வதற்காக நான் என்ன சாக்குப்போக்கு சொல்ல முடியும்? ஆனால் அதைப்பற்றி நான் வருந்தவில்லை. தங்கள் பெற்றோரின் நேசமுள்ள கவனிப்பின் கீழ் படுத்துறங்குகிற சிறு குழந்தைகளைப் பற்றி நான் சிந்திக்கிறேன். நாம் எதைக் கொண்டு சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை, எப்படி கடவுள் அறிந்திருக்கிறார் என்பதை நான் நினைவுகூர்கிறேன். நாம் வெறும் தூசிதான் என்பதை அவரால் மறக்கமுடியாது. நாம் தூசி மட்டும்தான். மனிதா நீ மண்ணாயிருக்கிறாய் என்பதை நினைவில் வைத்துக்கொள். அதாவது இந்தத் தாழ்ச்சி என்கிற புண்ணியம் நம்முடைய தொடக்கப் புள்ளியாக இருக்குமானால், சுபாவ ஒழுங்கில் நாம் சிருஷ்டிகளே தவிர வேறொன்றுமில்லை. ஒன்றுமில்லாமையிலிருந்து, மண்ணிலிருந்து நாம் படைக்கப்பட்டவர்கள், மண்ணுக்கே திரும்ப வேண்டியவர்கள் என்பதை நாம் கண்டுகொள்வோமானால் நல்லது.
                மேலும் வரப்பிரசாத ஒழுங்கில், வரப்பிரசாதத்தை தருவது அல்லது பெறுவது என்னும் காரியத்தில், நம்மால் எதுவும் செய்ய முடியாது. தனக்கோ, மற்றவர்களுக்கோ வரப்பிரசாதத்தைப் பெற்றுக்கொள்வது முற்றிலும் இயலாத காரியமாகும். இந்த அலுவல் மெய்யாகவும், முழுமையாகவும் தெய்வீகமானது. நாம் ஒன்றுமில்லாமையாக இருக்கிறோம். நம்முடைய தொடக்கப் புள்ளி தாழச்சியாக இருந்தால், நம்முடைய நம்பிக்கை அளவற்றதாக இருக்கும். ஏனென்றால் நம்முடைய நம்பிக்கை முழுவதும், அளவற்றவரும், நேசமுள்ள தந்தையாகிய கடவுள் மேல் இருக்கிறது. கிட்டத்தட்ட கடவுளைப் பிரியப்படுத்தத் தேடுவது மட்டுமே அவளுடைய முழு உணர்வுமாக இருந்தது. கடவுள் சகலமுமாக இருக்கிறார். தனக்கென எந்த சுய தேடலுமின்றி கடவுளை மகிழ்விப்பதற்காக ஒரு புனிதையாக அவள் விரும்பினாள். ஏனென்றால், கடவுளே அதை விரும்பினார். கடவுள் விரும்பினார் என்பதற்காகத்தான் அவள் ஒரு புனிதையாக விரும்பினாள். கடவுளைப் பிரியப்படுத்துவதற்காக அவள் அர்ச்சிஷ்டவளாக விரும்பினாள். இந்த விஷயத்திற்காக, நாம் ஞாயிறு மதிய ஜெபத்தில் பாடுகிற ப்ரோப்தெர் ரெத்ரிபூத்ஸியோனெம்ஓ ஆண்டவரே, உம்முடைய சம்பாவணைக்காக, உம்முடைய நியாயத்தைச் செய்வதற்கு என் இருதயத்தை என்றென்றும் சார்புள்ளதாக்கிக் கொண்டேன்என்ற சங்கீத அரசரின் வார்த்தைகளைக் கொண்டு சற்று அதிகமாக அவள் தன்னை எப்போதும் தூண்டிக் கொள்ள வேண்டியிருந்தது. நான் சொன்னதுபோல, அந்த ப்ரோப்தெர் ரெத்ரிபூத்ஸியோனெம்ஒரு வெகுமானத்திற்காக அதைச் செய்ய அவள் விரும்பவில்லை, மாறாக தன் தந்தையாகிய சர்வேசுரனைப் பிரியப்படுத்தும்படியாக மட்டுமே அவள் அதைச் செய்ய விரும்பினாள். நிச்சயமாக நம்மைவிட அதிகமான தாலந்துகள் அவளுக்குத் தரப்பட்டிருந்தன.
                இது முற்றிலுமாக நம்முடைய மனநிலையாக இல்லாதிருக்கலாம். ஆனாலும் நாம் அவரைப் பிரியப்படுத்த விரும்ப வேண்டும். நாம் எப்படி அவரைப் பிரியப்படுத்துவது? ஒருவேளை, நம் தபசு காலத்தில் நம்மை ஊக்குவித்துக் கொள்வது மூலமாக, அர்ச். தெரேசம்மாளின் ஒரு சிறிய, கடைசி மேற்கோளோடு நாம் முடிப்போம். அவளுடைய சாவுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, இறந்த பிறகு பூமியிலுள்ள ஆத்துமங்களுக்கு அவள் எதைக் கற்றுக்கொடுக்க விரும்புகிறாள் என்ற அவளிடம் கேட்கப்பட்டது. அவள் இவ்வாறு பதில் கூறினாள்: பிரியமுள்ள தாயாரே, நான் ஞான பாலத்துவத்தையும், முழுமையான அர்ப்பணத்தையும் கற்றுக் கொடுக்க விரும்புகிறேன். அவை என் மட்டில் மிக உத்தமமான வகையில் வெற்றியடைந்துள்ளன. மேலும், இங்கே பூமியில் அவர்கள் செய்ய வேண்டிய காரியம் ஒன்றே ஒன்று உள்ளது. அது சிறு பரித்தியாகங்களின் மலர்களைக் கொண்டு சேசுவை மகிழ்விப்பதாகும் என்று அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அன்பின் அடையாளங்களைக் கொண்டு அவரை வெற்றிக்கொள்ளுங்கள். நான் இப்படித்தான் அவர் மீது வெற்றிக் கொண்டேன். அதனாலேயே நான் உன்னதத்தில் மிக நல்ல முறையில் ஏற்றுக்கொள்ளப்படுவேன்”.
பிதா, சுதன், இஸ்பிரீத்துசாந்துவின் நாமத்தினாலே, ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக