பிதா பிதாக்களின் பிதா அர்ச்.சூசையப்பர்
பாகம்-1
ஆண்டவர் மனிதரை இரட்சிக்க மனிதாவதாரமாகச் சித்த மானபோது தமக்குத் தாயாராக மாமரியைத் தெரிந்து கொண்டார். அவர்களை சகல வரங்களால் அலங்கரித்து, சகல சிருஷ்டிகளுக்கும் மேலாய் அவர்களை உயர்த்தி, பரலோக பூலோக இராக்கினியாக முடிசூட்டி, இவ்விதமாகத் தமக்குத் தகுந்த தாயாய் இருக்கும்படி செய்தார். ஆண்டவர் தமக்கு ஓர் தாயை நினைத்து இவ்விதம் சிருஷ்டித்தபோதே, தம்மை வளர்த்துக் காப்பாற்றும் கைத்தாதையை நினைத்து, அவரையும் நன்மை வரங்களால் அலங்கரித்து, அவர் தமது தாயாருக்கு ஏற்ற துணையாயிருக்கவும், தம்மையே, சிறு பாலகனாயிருக்கும் காலத்தில் கையிலேந்தி அணைத்துக் காப்பாற்றத் தகுந்தவராகவும் சிருஷ்டித்தார். இதனால் தேவமாதாவை அடுத்து புனித சூசையப்பர், சகல புனிதர்களுக்குள் முதன்மை பெற்றவராகத் திருச்சபையில் வணங்கப்படுகிறார்
அர்ச். சூசையப்பர் அடைந்த பாக்கியமே பாக்கியம் இப்பாக்கியத்தைப் காண பிதாப்பிதாக்களும், தீர்க்கதரிசிகளும் பல்லாண்டு தபசு செய்து சர்வேசுரனைப் பிரார்த்தித்துவந்தனர். அர்ச். சூசையப்பரோ கண்ணால் பார்த்தது மாத்திரமல்ல, உலக இரட்சகரைத் தம் கையிலேந்தி, மார்போடு அணைத்து, கொஞ்சிக் குலாவும் பாக்கியம் பெற்றார். சகல ஜீவராசிகளுக்கும் உயிரும் உணவும் கொடுத்துவரும் ஆண்டவருடைய உயிரைக் காப்பாற்றவும் அவருக்குத் தமது கையால் உணவு தேடிக் கொடுத்துப் போவிக்கவும், புனித சூசையப்பர் தெரிந்தெடுக்கப் பட்டது எவ்வளவு உன்னதமான மேன்மை
அன்றியும் தேவமாதாவோடும் சேசுநாதரோடும், புனித சூசையப்பர் ஒரே வீட்டில் இரவும் பகலுமாய், ஒருநாள் அல்ல ஒரு மாதம் அல்ல, ஒரு வருடம் அல்ல, முப்பது வருடகால இருந்து ஜீவனம் செய்தது, சம்மனககளுக்குக்கூட கிடைக்க அரிதான பாக்கியம். இதுதான் பூலோக மோட்சம். இதுதான் சம்பூரணமான பாக்கியம். இதுதான் ஆனந்த பேரின்பம்
கடைசியில் அர்ச். சூசையப்பர் வியாதியுற்று அவஸ்தை யிலிருக்கும்போது, அவர் பக்கத்தில் சேசுநாதரும் தேவமாதாவுமிருந்து, ஆறுதலான வார்த்தைகள் சொல்லி, அவரைத் தூக்கி எடுத்து, அவருக்கு வேண்டிய உதவியெல்லாம் செய்தார்கள் அர்ச். சூசையப்பர் சந்தோஷத்தோடு தமது ஆத்துமத்தை சேசு நாதருடைய கையில் ஒப்புவித்து பாக்கியமான மரணமடைந்தார்.
மனிதர்களுக்குள்ளே யாருக்கும் இவ்வித பாக்கியம் வந்ததுமில்லை, இனி வரப்போவதுமில்லை சர்வேசுரன் தமது தேவகுடும்பத்தைக் காப்பாற்றி நடத்தும் பாதுகாவலராய் புனித சூசையப்பரைத் தெரிந்து கொண்டதுபோல, திருச்சபையும் சகல கிறீஸ்தவக் குடும்பங்களுக்கும் பாதுகாவலராக புனித சூசையப்பரைத் தெரிந்துகொண்டு, சகல குடும்பங்களையும் அவர் அடைக்கலத்தில் வைத்திருக்கிறது. கிறீஸ்தவ குடும்பங்கள் இதை மனதில் நினைத்து, தங்களையும் அர்ச். சூசையப்பரின் பாதுகாவலில் வைத்து, திருக்குடும்பத்தை தங்களுக்கு ஓர் மேல்வரிச்சட்டமாக நினைத்து, தங்கள் குடும்பமும், கூடுமானமட்டும் திருக்குடும்பத்திற்கு சமானமாய் இருக்கும்படி பிரயாசைப்பட வேண்டும்.
குடும்பத் தலைவர்களே! நீங்கள் உங்கள் குடும்பத்தை அணைத்து ஆதரித்து, பட்சத்தோடும் கவலையோடும் காப்பாற்றி, அர்ச். சூசையப்பரைப்போல் உங்கள் வீட்டில் உள்ளவர்களை நடத்த வேண்டும். சேசுநாதர் சுவாமியை உங்கள் வீட்டின் மத்தியில் ஸ்தாபித்து, எல்லோரும் அவரைப் பார்த்து அவருக்காக வேலை செய்து, அவருக்குப் பிரியப்படும்படியாய் நடக்க வேண்டும். தாயும் பிள்ளைகளும் குடும்பப் பாரத்தைத் தாங்கிப் பொறுத்து, வீட்டுத் தலைவருக்குப் பணிந்து நடக்க வேண்டும். இப்படி நடந்தால்தான், உங்கள் குடும்பத்திற்கும் கிறீஸ்தவர்களின் குடும்பம் என்கிற பெயர் பொருந்தும்.
அன்றியும் அர்ச். சூசையப்பர் நன்மரணத்திற்கு விசேஷ பாதுகாவலரானபடியால் நீங்கள் சாகும்போது தேவ இஷ்டப் பிரசாதத்தோடு மரிக்கவும், சேசுநாதரும் தேவமாதாவும், அர்ச்.சூசையப்பரும் உங்கள் கடைசி காலத்தில் துணையாயிருந்து உங்களைக் கைதூக்கி இரட்சிக்கவும் நீங்கள் ஆசைப்பட்டால், இப்போதே நீங்கள் நல்ல சௌக்கியமாயிருக்கும் காலத்தில் அர்ச். சூசையப்பர் பேரில் விசேஷ பக்தியாயிருங்கள். நாள் தோறும் அர்ச். சூசையப்பருக்கு தோத்திரமான சில ஜெபங்களைச் சொல்லுங்கள்
புதன்கிழமை அர்ச். சூசையப்பரின் நாளானதால், அன்று அவரைக் குறித்து ஏதாவது ஒரு நற்கிரிகை செய்யுங்கள். மார்ச் மாதம் அர்ச். சூசையப்பருடைய மாதம். அந்த மாதத்திலும் அவருடைய திருநாள் வரும்போதும், அவரைச் சிறப்பித்துக் கொண்டாடும்படி உங்களால் இயன்ற முயற்சி செய்யுங்கள் குடும்பத்தில் வியாதி, நோவு, தரித்திரம், துன்பம் வரும்போது நம்பிக்கையோடு அர்ச். சூசையப்பருடைய உதவியைக் கேட்டு மன்றாடுங்கள். பாவமும் அஞ்ஞானமும் அசுத்தமும் உங்கள் வீட்டில் நுழையாதபடி கவனமாயிருங்கள். இப்படி நீங்கள் உயிரோடிருக்கும் காலத்தில் அர்ச். சூசையப்பரை நினைத்து துதித்து அனுசரித்து வந்தால், நீங்கள் சாகும் சமயத்தில் அவர் உங்களைப் பாதுகாத்து நீங்கள் பாக்கியமான மரணமடைந்து நித்திய மோட்ச பாக்கியம் அடையும்படி கிருபை செய்வார்
ஆகவே புனித சூசையப்பர் பேரில் பக்தி, கிறீஸ்தவர்கள் மனதில் ஸ்திரமாய் வேரூன்றி நிலைநிற்கும்படியாய், தொடர்ந்து இனைந்திருப்போம்
தொடரும்.........
ஆமென்.
அனைத்து பாரம்பரிய புத்தகங்கள், ஜெபங்கள் படிக்க, தியானிக்க நமது வெப்சைட்டை பயன் படுத்துங்கள்
தொடர்ந்து இனைந்திருங்கள்
பரிசுத்த தமத்திருத்துவத்திற்கு மகிமை உண்டாவதாக !!! பரிசுத்த திருக்குடும்பமே துணை
பாரம்பரிய கத்தோலிக்க புத்தகங்கள் தொடர்புக்கு
பிரதர் பால்ராஜ் : 9487609983
பிரதர் கபிரியேல் :9487257479
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக