தொடர் கட்டுரை
"தற்காலத்தின் அசட்டைத்தனத்திற்கும், ஒரு வகையில் ஆத்துமங்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதற்கும், அதன் விளைவாக எழும் மோசமான தீமைகளுக்கும் முதன்மையான காரணம் தெய்வீகக் காரியங்களைப் பற்றிய அறியாமைதான்." (அதாவது கத்தோலிக்க ஞான உபதேசத்தை அறியாமல் இருப்பதே )
- அர்ச். பத்தாம் பத்திநாதர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முன்னுரை
ஒவ்வொருவனும் தன் பாதையைத் தானே தேர்ந்து கொள்ள வேண்டும். இந்தத் தெரிவு ஒரு கடினமான போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், நாம் கடவுளுக்குச் சொந்தமானவர்கள் என்பதையும், அவர் நம்மை நேசிக்கிறார் என்பதையும், அவர் நமக்கு உதவுவார் என்பதையும், கீழ்ப்படிதலின் பாதையின் முடிவில் அவர் நமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் நாம் நினைவில் கொண்டிருப்போம் என்றால், கடினமான பாதையைத் தேர்ந்து கொள்வதில் நாம் பலப்படுத்தப்படுவோம்.
1. பரிசுத்த வேதத்தை அறிதல்
மனிதனின் இறுதிக் கதி என்ன? -
கடவுளைச் சென்றடைவதே மனிதனின் இறுதிக் கதி. மனிதன் கடவுளிடமிருந்து வருகிறான்; அவன் முற்றிலும் அவருக்கே சொந்தமாயிருக்கிறான். மனிதன் கடவுளிடம் திரும்பிச் செல்ல நியமிக்கப்பட்டிருக்கிறான்.
1. நம்மை யாரோ ஒருவர் உண்டாக்கியிருக்கிறார் என்று நம் அறிவு கூறுகிறது. அந்த யாரோ ஒருவர்தான் கடவுள் ஆவார்.
2. கடவுள் ஏதோ ஒரு நோக்கத்திற்காகத்தான் நம்மை உண்டாக்கியிருக்க வேண்டும் என்றும் நம் அறிவு கூறுகிறது. இவ்வுலகில் தம்மை அறிந்து, தம்மை நேசித்து, தமக்கு ஊழியம் செய்யவும், மறுவுலகில் என்றென்றும் அவரோடு மகிழ்ச்சியாயிருக்கவும் கடவுள் மனிதனைப் படைத்தார். கடவுள் தமக்காகவே நம்மைப் படைத்தார்.
3. நாம் கடவுளுக்குச் சொந்தமானவர்கள். நாம் அவருடைய படைப்புகளாக இருப்பதால், அவர் மட்டில் நமக்குக் கடமைகள் உள்ளன. அவற்றை நாம் நிறைவேற்ற வேண்டும். பரிசுத்த வேதம் இந்தக் கடமைகள் என்னென்ன என்று நமக்குக் கற்பிக்கிறது.
பரிசுத்த வேத அனுசரிப்பு என்றால் என்ன? -
பரிசுத்த வேத அனுசரிப்பு என்பது ஒரு புண்ணியம். இந்தப் புண்ணியத்தின் மூலம், நம்மைப் படைத்தவரும், நம் எஜமானரும், நம் உன்னத ஆண்டவருமாகிய கடவுளுக்கு மட்டுமே உரியதாக இருக்கிற மகிமையையும், ஊழியத்தையும் அவருக்குச் செலுத்துகிறோம். இந்தப் புண்ணியத்தைக் கடைப்பிடிப்பதற்கு நாம் :
1. கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட எல்லா சத்தியங்களையும் விசுவசிக்க வேண்டும்.
பரிசுத்த வேதத்தில் நாம் கடவுளைப் பற்றியும் அவருடைய இலட்சணங்களைப் பற்றியும் கற்றுக்கொள்கிறோம். அவர் நம்மீது கொண்டுள்ள பேரன்பைப் பற்றி ஓரளவு கற்றுக்கொள் கிறோம். எது சரி, எது தவறு என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம். நாம் என்ன செய்ய வேண்டு மென்று கடவுள் கட்டளையிடுகிறார் என்று கற்றுக்கொள்கிறோம். அவர் நமக்காக ஆயத்தம் செய்திருக்கிற எதிர்காலத்தைப் பற்றி நாம் கற்றுக்கொள்கிறோம்.
2. நாம் கடவுளுக்குக் கடன்பட்டுள்ள கடமைகளைப் பற்றியும், அவருடைய கட்டளை களைப் பற்றியும், விருப்பங்களைப் பற்றியும் கற்றுக்கொள்வதை நம் வாழ்வில் நாம் நிறைவேற்ற வேண்டும். வெறும் அறிவு என்பது பரிசுத்த வேத வாழ்வு அல்ல. அது நமக்கு எந்த விதத்திலும் பயன்படுவதில்லை. பசாசுக்கு அறிவு உண்டு. ஆனால் அவன் வேதத்தைக் கடைப்பிடிப்பது இல்லை. வேதத்தை அனுசரித்தல் என்பதில், கடவுள் மட்டில் நாம் கொண்டுள்ள கடமை களைப் பற்றி நாம் கற்றுக்கொண்டவற்றை நிறைவேற்றுவதன் மூலம் அவருக்கு ஊழியம் செய்வது அடங்கியுள்ளது. வேத அனுசரிப்பு என்பது உணர்வு சார்ந்த காரியமல்ல; அது நம் சித்தம் மற்றும் செயல் சார்ந்த காரியமாக இருக்கிறது.
"சர்வேசுரனுடைய வாக்கியத்தைக் கேட்டு, அதை அநுசரிக்கிறவர்கள் பாக்கியவான்கள்'' என்று நம் ஆண்ட வர் கூறுகிறார் (லூக். 11:28).
"நீங்கள் வாக்கியப்படி செய்கிறவர்களாயிருங்கள். ஆனால் உங்களையே மோசம் போக்கி (வாக்கியத்தைக்) கேட்கிறவர்களாய் மாத்திரம் இருக்க வேண்டாம்" என்று அர்ச். யாகப்பர் கூறுகிறார் (யாக. 1:22).
பரிசுத்த வேதத்தைக் கடைப்பிடிப்பது நமக்கு அவசியமா?
பரிசுத்த வேதத்தைக் கடைப்பிடிப்பது நமக்கு முற்றிலும் அவசியம். கடவுள் இந்தக் காரியத்தில் வேறு எந்தத் தெரிவையும் நமக்குத் தரவில்லை .
1. வாழ்வில் நம் முதன்மையான அலுவல், நாம் செய்ய வேண்டுமென்று கடவுள் நமக்குக் கட்டளையிடுகிற அலுவல், நம் ஆத்துமத்தின் இரட்சணியமே. இது நம் வேத அனுசரிப்பைச் சார்ந்திருக்கிறது.
2. அநேகர் உலக செல்வங்களையும், பட்டம் பதவிகளையும், இன்பங்களையும் அடைய முயல்வதில் தங்கள் வாழ்வை வீணாக்குகிறார்கள். ஆனால் இவை இவ்வுலகிலும் கூட மனிதனின் இருதயத்தைத் திருப்திப்படுத்துவதில்லை. மேலும், மரண நேரம் வரும்போது இவை அனைத்தையும் விட்டுச் செல்ல வேண்டியவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.
"ஏனெனில், அவன் மரித்த பின்பு (இவைகளை) எல்லாம் கொண்டு போவதுமில்லை, அவனுடைய மகிமை அவனோடு இறங்குவதுமில்லை " (சங். 48:16).
3. பரிசுத்த வேதத்தின் மூலமாகத்தான் நாம் எதற்காகப் படைக்கப்பட்டோமோ அந்த நோக்கத்தை நாம் நிறைவேற்ற முடியும். ஆனால் கடவுள் வெளிப்படுத்தியுள்ளவற்றை விசுவசிப்
கடவுளை அறிகிறோம். அவரை அறிவதன் காரணமாக, அவரை நேசிக்காமல் இருக்க நம்மால் முடியாது. நாம் அறிந்து கொண்டதை அனுசரித்து, கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதன் மூலம் நாம் அவருக்கு ஊழியம் செய்கிறோம்.
"என் கற்பனைகளைக் கைக்கொண்டு அவைகளை அநுசரிக்கிறவன் எவனோ, அவனே என்னைச் சிநேகிக்கிறவன்" (அரு. 14:21).
அப்படியானால், எந்த ஒரு மனிதனுக்கும் அனைத்திலும் அதிக முக்கியமான கல்வி எது? -- அது வேதக் கல்வியே.
1. இரட்சிப்படைய நாம் எதை விசுவசிக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று நமக்குக் கற்பிப்பது பரிசுத்த வேதமே. இயற்பியல், கவிதை அல்லது வரலாறு பற்றிய அறிவை விட நம் இரட்சணியம் எவ்வளவோ அதிக முக்கியத்துவம் மிக்கது. நாம் நம் ஆத்துமத்தை இரட்சித்துக் கொள்ளவில்லை என்றால், நம் ஞானத்தாலும், அறிவாலும், செல்வத்தாலும், உலக மகிமைகளாலும் நமக்கு எந்தப் பயனுமில்லை .
"மெய்யாகவே மனிதன் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக்கொண்டாலும், தன் ஆத்துமம் சேதப்பட்டால் அவனுக்குப் பிரயோசனமென்ன?" (மத் 16:26).
2. இந்தக் கல்விக்கு சிந்தனையும், கவனமும் அவசியம். திருச்சபை மற்றும் அதன் குருக் களாகிய நல்ல ஆசிரியர் சொல்வதை நாம் கவனிக்க வேண்டும். நாம் தனியாக அதை நன்றாகக் கற்றுக்கொள்ள முடியாது.
"(தியாக்கோனான) பிலிப்பு ஓடிச் சேர்ந்து, அவன் (எத்தியோப்பியன்) இசையாஸ் தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசிக்கிறதைக் கேட்டு : "நீர் வாசிக்கிறதைக் கண்டுபிடிக்கிறதாக நினைக்கிறீரோ?" என்று கேட்டார். அதற்கு அவன் : "யாராவது எனக்கு விளக்கிச் சொல்லா விட்டால், எப்படி என்னால் புரிந்து கொள்ள முடியும்?" என்றான்" (அப். 8:31).
3. இந்தக் கல்வியை அலட்சியம் செய்வதுதான் இன்று இவ்வுலகிலுள்ள எல்லாக் குற்றங் களுக்கும் அடிப்படைக் காரணம். கடவுளைப் பற்றிய அறிவு இல்லாவிடில், மனிதன் தனது மிகக் கீழான, மிக அருவருப்பான ஆசாபாசங்களுக்குத் தன்னைக் கையளித்து விடுகிறான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக