Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 24 ஜனவரி, 2014

பெற்றோரும் பிள்ளைகளும்


பெற்றோரும் பிள்ளைகளும்

(குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர்களுக்குரிய பிரதான கடமைகள் எவை என்பதைப் பற்றிய கட்டுரை)

                பிள்ளைகள் மட்டில் தங்களுக்குள் பிரதான கடமைகளைப் பெற்றோர் சந்தேகமின்றி அறிந்து இருப்பது அத்தியாவசியம். தாய் தந்தையர் இந்த கடமைகளை அறியாதிருப்பதினால் அல்லது அறிந்தும் அலட்சியம் செய்வதினால், அநேக பிள்ளைகள் துஷ்டர்களாய் வளர்ந்து குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கிறார்கள். இது விஷயத்தில் பெற்றோர் தேவ சந்நிதானத்தில் மகா கண்டிப்பான கணக்கு கொடுக்க வேண்டியவர்கள்.  ஆதலால் பிள்ளைகள் மட்டிலுள்ள கடமைகளைப் பிரமாணிக்கமாய் நிறைவேற்றி வருகிறேனோ இல்லையோவென்று அடிக்கடி சோதித்துப் பார்த்துத் தன்னைத் திருத்திக் கொள்வது தாய் தந்தையர் ஒவ்வொருவர் மீதும் சுமத்தப்பட்ட கடன் ஆகும். அப்படியானால் பிள்ளைகள் மட்டில் பெற்றோருக்கு உள்ள கடமைகள் எவை? பிள்ளைகளின் ஆத்தும சரீர நன்மைகளைக் கவனித்தல், அவர்களுக்கு புத்தி புகட்டல், அவர்கள் குற்றங்குறைகளைத் திருத்துதல், அவர்களுக்கு கல்வி கற்பித்தல் ஆகிய இவைகளே பிள்ளைகளின் மட்டில் பெற்றோருக்குரிய பிரதான கடமைகளாம்.
1.            பிள்ளைகளின் ஆத்தும சரீர நன்மைகளைக் கவனித்தல்:
பிறந்த குழந்தைக்கு கூடிய சீக்கிரம் ஞானஸ்நானம் கொடுத்து அதை சர்வேசுரனுடைய பிள்ளையாக்குதல். பெற்றோரின் முதல் கடமை, முக்கிய கடமை. தான் பெற்ற பிள்ளைக்குத் தாய் அமுதூட்டி வளர்ப்பது சுபாவ ஓழுங்கு. சுபாவ ஒழுங்கு என்றால் கடவுளினால் நியமிக்கப்பட்ட இயற்கைச் சட்டம். ஆடு, மாடு முதலிய அறிவில்லாப் பிராணிகள் கூட இச்சட்டப்படி நடப்பதை நாம் கண்கூடாய் கண்டுவருகிறோம். தாய்மார் தக்க காரணமிருந்தாலன்றி தங்கள் பிள்ளைகளைச் செவிலித்தாயிடம் கொடுத்துப் பால் ஊட்டி வளர்க்கச் செய்வது உசிதமன்று. குழந்தையை வேலைக்காரி வசம் ஒப்படைத்துவிட்டு, நாடகம், சினிமா, ரேடியோ, தொலைக்காட்சி, சங்கீதக் கச்சேரி, குதிரைப் பந்தயம் முதலான வேடிக்கை விநோதங்களில் காலத்தைப் போக்குதல் தாய் தன் பிள்ளைக்குத் துரோகம் செய்வதாகும். அந்தஸ்துக்கு தகுந்தாற்போல் பிள்ளைகளுக்கு அன்னவஸ்திரம் அளித்தல் தந்தையின் கடமை. இதனிமித்தம் தகப்பன் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். உன் நெற்றியின் வியர்வை நிலத்தில் விழப் பிரயாசைப்பட்டு உழைப்பாய்என்பது மனிதனுக்கு கடவுளிட்ட கட்டளை. குடும்பத் தலைவன் தான் பாடுபட்டுத் தேடிய பணத்ததைக் காதல், கவறாடல், கள்ளுண்டல் ஆகிய அநாச்சாரங்களில் விரயம் ஆக்குவது பெரும் பாதகம். வீண் வழக்குகளில் ஈடுபட்டு காசைக் கரியாக்குவது மதியீனம். தான் தேடிய பொருளைக் குடும்ப வாழக்கைக்குச் சிக்கனமாய்ச் செலவிட்டு, மீதமுள்ள பணத்தை பத்திரமாய்க் காப்பாற்றி விருத்தி செய்து, பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானதும் அவர்களுக்குப் பாரபட்சமின்றி பகிர்ந்து கொடுக்கும் தந்தையே புத்திமான். தன் பிள்ளைக்கு வீட்டில் இடங்கொடாமல் தெருவில் அலைந்து திரியவிடும் தகப்பன் அன்பில்லாத முரடன். பட்சிகளிடமிருந்து தாய் தந்தையர் ஓர் நல்ல பாடம் கற்றுக்கொள்ளட்டும். பறவைகள், தங்கள் குஞ்சுகளுக்கு ஆகாரம் தேடிக் கொடுத்து அவற்றைப் போஷித்துப் பாதுகாப்பதே தங்கள் முக்கிய கவலையாகக் கருதி நாள் முழுவதும் அயராது உழைக்கின்றன. குஞ்சுகளுக்கு இறக்கை முளைத்து அவை நன்றாய் பறக்க சக்தியடையும் வரையில், தாய்ப் பறவையும் அதன் சேவலும் தங்கள் குஞ்சுகளைக் கூட்டை விட்டு வெளியே துரத்திவிடுவதில்லை என்று ஒரு ஞான நூலாசிரியர் எழுதி வைத்திருக்கிறார்.
2.            பிள்ளைகளுக்கு நற்புத்தி புகட்டல் :
உனக்குப் பிள்ளைகள் இருந்தல், சிறுவயதிலிருந்தே அவர்களுக்குப் புத்திமதி சொல்லி வளர்ப்பாயாக…. உன் மகனுக்கு நற்புத்தி புகட்டு, அவன் உன் ஆத்துமத்தை சந்தோஷப்படுத்துவான்உன் மகன் தன் இஷ்டம் போல் நடக்க விட்டுவிட்டால், நீ அவனுக்குப் பயந்து நடுங்க வேண்டியதாயிருக்கும்என்னும் இவை போன்ற வேத வாக்கியங்கள், பிள்ளைகளை சிறு வயதிலிருந்தே நற்புத்தி புகட்டி வளர்ப்பது பெற்றோரைச் சார்ந்த முக்கிய கடமை என்று தெளிவாய்க் காட்டுகின்றன. பிள்ளைகளை கிறீஸ்துநாதரிடம் கொண்டுவந்து சேர்த்தலே பிள்ளை வளர்ப்பின் பிரதான நோக்கம்என்கிறார் அர்ச். சார்லஸ் பொரோமியோ. கிறீஸ்தவத் தாய் தன் பிள்ளைகளுக்குப் படம், சுரூபம் முதலிய பரிசுத்தப் பொருட்களைக் காண்பித்து, சமயோஜிதமாய் வேத சத்தியங்களைப் போதிப்பாள் பாடுபட்ட சுரூபத்தைக் காட்டி அன்புடன் முத்தி செய்யப் பழக்குவாள். பிள்ளை தன்னுடன் முழந்தாளிருந்து சிலுவை வரையவும், சேசு மரி என்னும் திருநாமங்களைப் பக்தி விசுவாசத்துடன் உச்சரிக்கவும் கற்றுக் கொடுப்பாள். ஐந்து வயதுக் குழந்தை நேசிக்கவும் சிறுவயதிலிருந்தே பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்தால் அவர்கள் உத்தம கத்தோலிக்கராய் வளர்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. வாலிபன் சிறுபிராயத்தில் எவ்வழியில் நடந்தானோ அவ்வழியைவிட்டு விருத்தாப்பியத்திலும் விலக மாட்டான்” (பழ.22:6)
                பிரான்ஸ் தேசத்து அரசியாகிய பிளான்ஷ் தே காஸ்தில், தனது மூத்த மகனாகிய லூயிஸ் சிறு பிள்ளையாயிருக்கும் போதே அவனைப் பார்த்து, “ என் அருமைக் குழந்தாய், எவ்வளவு நேச பாசத்தோடு நான் உன்னைச் சிநேகிக்கிறேன் என்று உனக்குத் தெரியும் ஆனால் நீ வளர்ந்து பெரியவனான பின் ஓரே ஒரு சாவானப் பாவத்தைக் கட்டிக்கொள்வதைவிட இப்போதே என் கண் முன் நீ இறந்துபோவது நலம்என்று அடிக்கடி சொல்வாள். இவ்வார்த்தைகள் பசுமரத்தாணி போல் பிள்ளையின் சிறு ஆத்துமத்தில் ஆழமாய்ப் பதிந்தது. லூயிஸ் பிரான்ஸ் தேசத்தை பெரும் புகழுடன் ஆண்டபோது, இந்த வார்த்தைகளைத் தினந்தோறும், முக்கியமாய் சோதனை நண்பர்களுக்குச் சொல்லியிருக்கிறார். பக்தியுள்ள தாயின் மடியில் ஞானப்பால் உண்டு வளர்ந்த இந்தப் பிள்ளைதான் அரசரான 9-ம் லூயிஸ் என்னும் அர்ச். ஞானப்பிரகாசியார். இவருடைய திருநாள் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
                பருவத்தே பயிற்செய் என்பது மூத்தோர் சொல். சிறுபிள்ளையின் ஆத்துமம் மெழுகுபோலிருக்கிறது. அதன்மேல் நல்ல முத்திரையைப் பதித்தால் அது ஆழமாய்ப் பதிந்து என்றும் அழியாதிருக்கும். பிள்ளையின் சிறு ஆத்துமத்தில் கிறீஸ்தவப் புண்ணியங்களைச் சிறுகச் சிறுக பதிப்பிப்பது நல்ல தாயின் முக்கிய கடமை. ஏழைகள் மீது இரக்கம், துன்பப்படுகிறவர்கள் மட்டில் அநுதாபம், பெற்றோருக்கு மரியாதை, கீழ்ப்படிதல், பிறர்மட்டில் அன்பு, பொறுமை, சாந்தம் முதலிய கிறீஸ்தவப் புண்ணியங்களை அநுசரிக்க ஞானமுள்ள தாய் தன் பிள்ளைக்குக் கற்றுக் கொடுப்பாள். தாயின் உதவியின்றி குழந்தை நடக்குமா? பிள்ளையினருகில் தாய் நின்றுகொண்டு அதன் சிறு பாதங்களைத் தரையில் ஊன்றி நடக்கப் பழக்க வேண்டாமா? இவ்வாறே கிறீஸ்தவத் தாய் தன் பிள்ளையின் சிறு மனசாட்சியை சன்மார்க்க நெறியில் நடந்துசெல்லப் பழக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக தாய் தந்தையர் தங்கள் முன்மாதிரிகையினால் பிள்ளைகளைக் கிறீஸ்துநாதரிடம் கொண்டுவந்து சேர்க்கப் பிரயாசைப்பட வேண்டும். வார்த்தையைவிட மாதிரிகையே உத்தமம். பார்த்ததைச் செய்வது பிள்ளைகளின் சுபாவம். பக்தி விசுவாசமுள்ள தாய் தந்தையர் காலை மாலை ஜெபிப்பதையும், தினம் திவ்விய பூசை காண்பதையும், வீட்டில் ஒருவயொருவர் அந்நியோன்னியமாய் நேசித்து சமாதானமாய் வாழ்வதையும் கண்கூடாய் பார்த்துவரும் மனிதருக்கும் உகந்த புண்ணிய சீலரென யாவராலும் புகழப்படுவார்களென்பது நிச்சயம்.
                அர்ச். ஞானப்பிரகாசியார் ஐந்து வயதுப் பிள்ளையாய் இருக்கும்போது தமது மாளிகையில் ஒரு மூலையில் தனியே முழந்தாளிலிருந்து தன் சிறு கரங்களைக் குவித்துக்கொண்டு பக்தியுடன் ஜெபிப்பார். ஏன் இப்படி செய்கிறாய் என்று யாராவது அவரைக் கேட்டால், “ அம்மா அப்படி செய்கிறார்களே அவர்கள் செய்கிறதுபோல நானும் செய்கிறேன்என்று குழந்தைக்குரிய எதார்த்தத்துடன் பதில் அளிப்பார்.
                லயன்ஸ் நகரில் மாதாவின் ஆலயத்தில் வயோதிபரான சேனாதிபதி ஒருவர் ஒரு நாள் கோவிலினுள் பிரவேசித்து தேவதாயின் பீடத்துக்குமுன் முழந்தாளிலிருந்து சற்று நேரம் மகா பக்தி உருக்கத்துடன் ஜெபித்தபிறகு, அங்கிருந்த பங்கு  விசாரணைக் குருவானவரிடம் சென்று, “சுவாமி, நான் சிறு பிள்ளையாயிருக்கும்போது பக்தியுள்ள என் தாய் என்னை இந்த ஆலயத்திற்குத் தினந்தோறும் அழைத்து வந்து மாதா சுரூபத்திற்குமுன் தன்னருகில் முழந்தாளில் இருக்கச் செய்வாள். அந்த நல்ல தாய் செய்ததுபோல் நானும் என் சிறு கரங்களைக் குவித்து, மாதா சுரூபத்தைப் பார்த்து, பக்தியுடன் வேண்டிக் கொள்வேன். அந்த நாட்கள் எனக்கு மிகவும் பாக்கியமுள்ள நாட்கள்  என் ஜீவியம் பரிசுத்த ஜீவியமாயிருந்தது. என் அன்னையின் முன்மாதிரிகையை நான் ஒருபோதும் மறந்ததில்லைஎன்று சொன்னார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக