குரல் கேட்டல்
பிரான்சிசின் வரலாற்றில் வருகின்ற பிச்சைக்காரனின் கதையில் இருந்து உலகப்பற்றை அவர் வெறுத்தது குறித்து அறியலாம். இதன்படி, தந்தைக்குப் பதிலாக இவர் சந்தையில் ஒருநாள் துணி விற்றுக்கொண்டிருந்தார். அப்போது, ஒரு பிச்சைக்காரன் இவரிடம் பிச்சை கேட்டான். இவர் அப்போது வாடிக்கையாளருடன் வணிகத்தில் ஈடுபட்டிருந்தார். அது முடிந்ததுமே, தனது பொருட்களை அப்படியே விட்டுவிட்டு பிச்சைக்காரனைத் தேடி ஓடினார். அவனைக் கண்டதும், தன்னிடம் இருந்த எல்லாவற்றையுமே அவனிடம் கொடுத்துவிட்டார். இச்செயலை முன்னிட்டு இவரது நண்பர்கள் பிரான்சிசைக் குறைகூறினர். வீட்டுக்குச் சென்றதும் பிரான்சிசின் தந்தை மிகவும் கோபம் கொண்டு அவரைக் கண்டித்தார்.
1204 இல் பிரான்சிசு நோய் வாய்ப்பட்டதைத் தொடர்ந்து, தம் வாழ்க்கையின் பொருள் பற்றி ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினார். 1205 இல் பூலியா (Puglia) என்னும் இடம் நோக்கிப் பயணமான அவர் அங்கே வால்ட்டர் என்னும் பெயர் கொண்ட பிரியேன் கவுண்ட்டின் (Count of Brienne) படையில் சேரத் துணிந்தார். வழியில் அவர் அதிசயமானதொரு காட்சி காணும் பேறு பெற்றார். அதில் ஒரு பெரிய மண்டபத்தில் பல வகையான போர்க்கருவிகள் இருந்தன. அவற்றின் மீது சிலுவைச் சின்னம் வரையப்பட்டிருந்தது. அப்போது ஒரு குரல் "இந்த ஆயுதங்கள் உனக்கும் உன் போர் வீரர்களுக்கும் உள்ளன" என்று கூறியது. உடனே பிரான்சிசு மிகுந்த உற்சாகத்துடன், "அப்படி என்றால் நான் புகழ்மிக்க இளவரசன் ஆவேன்" என்றார்.
ஆனால் வழியில் அவர் நோய்வாய்ப்பட்டார். மேலும் ஒரு காட்சியில் ஒரு குரல் அவரை மீண்டும் அசிசி நகருக்குத் திரும்பிப் போகக் கூறியது. "நீ தலைவருக்கு (கடவுளுக்கு) வேலை செய்யவேண்டுமே ஒழிய, பணியாளருக்கு (உலக அதிகாரிகள்) அல்ல" என்று கூறிய அக்குரலைக் கேட்ட பிரான்சிசு அசிசி நகருக்குத் திரும்பிச் சென்றார். 1205ஆம் ஆண்டில் பிரான்சிசுக்கு இந்த ஆன்மிக அனுபவம் ஏற்பட்டது என்று அவரது வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்
அர்ச். தமியானோ கோவிலில் பிரான்சிசு
1206ஆம் ஆண்டில் ஒருநாள் பிரான்சிசு அசிசி நகர்ப் பள்ளத்தாக்கில் அமைந்திருந்த அர்ச் தமியானோ கோவிலுக்குள் நுழைந்து சர்வேசுரனிடம் ஜெபம் செய்யச் சென்றார். அக்கோவில் பெரிதும் பழுதுபட்டு, பாழடைந்த நிலையில் இருந்தது. கோவிலின் உள்ளே சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் திருவுருவம் சித்தரிக்கப்பட்ட ஒரு திருவோவியம் இருந்தது. அது பிசான்சிய-இத்தாலியக் கலைப் பாணியில் 12ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஓவியம்.
கோவிலின் உள்ளே நுழைந்த பிரான்சிசு இயேசுவின் திருச்சிலுவைத் திருவோவியத்தின் முன் மண்டியிட்டு உருக்கமாக வேண்டிக்கொண்டிருந்தார். அவர் ஏறிட்டு இயேசுவின் திருமுகத்தைப் பார்த்தபோது ஓர் அதிசயம் நிகழ்ந்ததைக் கண்டார். இயேசுவின் உதடுகள் அசைவதுபோலத் தெரிந்தது. இயேசுவின் குரல் தெளிவாக பிரான்சிசின் காதுகளிலும் உள்ளத்திலும் ஒலித்தது:
“ | பிரான்சிசு, என் வீடு பாழடைந்து கிடப்பதைப் பார்க்கிறாய் அல்லவா, எழுந்து சென்று அதைச் செப்பனிடு! | ” |
இச்சொற்களைக் கேட்ட பிரான்சிசுக்கு ஒரே அதிர்ச்சி. அக்குரல் எங்கிருந்து வந்தது என்று அறிவதற்காக கோவிலில் சுற்றுமுற்றும் பார்த்தார்.. இயேசுவே தம்மிடம் பேசுகிறார் என்பதை உணர்ந்ததும் பிரான்சிசு, "அப்படியே செய்கிறேன், ஆண்டவரே" என்று உற்சாகத்தோடு பதிலிறுத்தார்.
அர்ச் தமியானோ கோவிலில் பிரான்சிசுக்கு ஏற்பட்ட அனுபவம் அவரது இறையனுபவத்தின் ஓர் உச்சக்கட்டமாக வரலாற்றாசிரியர்களால் கருதப்படுகிறது. பிரான்சிசு தம் வாழ்க்கை முழுவதையும் கடவுளுக்குப் பணிபுரிவதிலேயே செலவழிக்கப் போவதாக உறுதிபூண்டார். முதலில் அர்ச் தமியானோ கோவிலைச் செப்பனிடுவது பற்றித்தான் சிலுவையில் தொங்கிய இயேசு தம்மிடம் கேட்டதாக பிரான்சிசு நினைத்தார். ஆனால் நாள் போகப் போக, தம்மிடம் இயேசு செய்யக் கேட்ட பணி விரிவான ஒன்று என்பதை அவர் உணர்ந்தார். இயேசுவின் பெயரால் கூடுகின்ற சமூகமாகிய திருச்சபையைச் சீரமைக்கவே இயேசு தம்மிடம் கேட்டார் என்பதைப் புரிந்துகொண்ட பிரான்சிசு ஒரு புதிய வாழ்க்கை முறையைத் தழுவலானார்.
முதலில் அவர் தம் வீட்டுக்கு விரைந்து சென்று, தம் தந்தையின் துணிக்கடையில் இருந்த விலையுயர்ந்த துணிகள் பலவற்றை எடுத்து மூட்டையாகக் கட்டி தம் குதிரை மீது ஏற்றினார். அசிசி நகருக்கு அருகே இருந்த ஃபொலீனோ (Foligno) என்னும் நகரச் சந்தைக்குச் சென்று துணிகளையும் அவற்றோடு குதிரையையும் விலைபேசி விற்றுவிட்டு, கிடைத்த பணத்தை வாங்கிக்கொண்டு அர்ச் தமியானோ கோவிலுக்குத் திரும்பிச் சென்றார்.
கோவில் குருவிடம் பணத்தைக் கொடுத்து, அக்கோவிலைச் செப்பனிடுமாறு கேட்டார். ஆனால் பணம் எங்கிருந்து வந்தது என்பதை அறிந்ததும் குரு அதை வாங்க மறுத்துவிட்டார். பிரான்சிசு பணத்தை அங்கேயே போட்டுவிட்டு, தம் தந்தைக்கு அஞ்சி ஓரிடத்தில் போய் ஒளிந்து கொண்டார்.
இதற்கிடையில், தம் மகன் துணிகளையும் குதிரையையும் விற்றதையும் அப்பணத்தைக் கோவில் குருவிடம் கொடுக்க முயன்றதையும் கேள்வியுற்ற பியேட்ரோ விரைந்து அர்ச் தமியானோ கோவிலுக்கு வந்தார். அங்கு பிரான்சிசைத் தேடிப்பார்த்தும் காணாததால் ஏமாற்றத்தோடு வீடு திரும்பினார்.
ஒரு மாதத்திற்குப் பிறகு ஒளிவிடத்திலிருந்து வெளியே வந்த பிரான்சிசு வீடு திரும்பினார். பசியால் வாடி மெலிந்துபோயிருந்த அவர் கந்தைத் துணிகளோடு தெருவில் நடந்து போனதைக் கண்ட சிறுவர்கள் சிலர் அவரைப் பைத்தியம் என்று எள்ளி நகையாடியதோடு அவர்மீது கல்லெறிந்தனர். அவருடைய தந்தை பியேட்ரோ பெர்னார்டோனே பிரான்சிசை வீட்டுக்கு இழுத்துக்கொண்டுபோய், நையப்புடைத்து, அவரது கால்களில் சங்கிலியைக் கட்டி, அவரை ஓர் அறையில் அடைத்துப் போட்டார். பியேட்ரோ வீட்டில் இல்லாத நேரம் பார்த்து பிரான்சிசின் தாய் மகன் மீது இரக்கம் கொண்டு அவரை விடுவித்தார். பிரான்சிசு மீண்டும் அர்ச் தமியான் கோவிலுக்குச் சென்று, தம் நாட்களை சர்வேசுரனிடம் ஜெபம் செய்வதில் கழித்தார்.
துறவற சபைகளை நிறுவுதல்
பின்னர் பிரான்சிசு உரோமை நகருக்குத் திருப்பயணமாகச் சென்றார். அங்கு அர்ச் இராயப்பர் பேராலயத்தின் அருகே பிச்சையெடுத்துக் கொண்டு இருந்தவர்களோடு தாமும் போய் அமர்ந்துகொண்டு, ஒரு பிச்சைக்காரராக மாறினார். இந்த அனுபவம் அவருக்கு ஏழ்மையின் பொருளை ஆழ்ந்த விதத்தில் உணர்த்திற்று. வாழ்நாள் முழுவதும் ஏழ்மையிலேயே கழிக்க வேண்டும் என்று பிரான்சிசு உறுதி பூண்டார்.
பிரான்சிசு வீடு திரும்பியதும், அசிசி நகரின் தெருக்களில் இறங்கி நடந்து சென்று, இயேசுவைப் பற்றிப் போதிக்கலானார். அவர் கூறியதைக் கேட்டு ஒரு சிலர் அவருக்குச் சீடர்களாக மாறினர்.1209 ஆம் ஆண்டு 12 இளையோருடன், "சிறு சகோதரர்கள்" என்ற சபையை ஆரம்பித்தார். பிரான்சிசு திருத்தந்தை மூன்றாம் இன்னசண்டை அணுகித் தம் குழுவை ஒரு துறவற சபையாக அங்கீகரித்து ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திருத்தந்தை 1210இல் பிரான்சிஸ்கன் சபைக்கு அதிகாரப்பூர்வமான இசைவு வழங்கினார்.
பின்னர், பிரான்சிசு 1212 இல் கிளாரா என்ற பெண்மணியோடு சேர்ந்து பெண்களுக்கான ஒரு துறவற சபையையும், 1221இல் மேலும் தவ முயற்சிகளை மேற்கொள்ளும் பொதுநிலை சகோதர சகோதரிகளுக்கென்று "மூன்றாம் சபை" என்று அழைக்கப்பட்ட ஒரு அமைப்பையும் ஆரம்பித்தார்
சிலுவைப் போரில் பங்காற்றுதல்
திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட் விடுத்த அழைப்பை ஏற்று, பிரான்சிசு 1219 இல் சிலுவைப் போர் வீரர்களோடு சேர்ந்து எகிப்து செல்லப் பயணமானார். அங்கு இயேசு பிறந்து வளர்ந்து இறந்த திருநாட்டை மீட்க போரிடும்போது இறக்க நேர்ந்தால் தம் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு வேதசாட்சியாக உயிர்துறக்கலாம் என்னும் எதிர்பார்ப்பு அவரிடம் இருந்தது. மேலும், கிறித்தவர்களும் இசுலாமியர்களும் நட்புடன் வாழ்வதற்குப் போர் தவிர வேறு வழிகள் உண்டு என்பதிலும் அவருக்கு நம்பிக்கை இருந்தது.
இதற்கிடையில் பிரான்சிஸ்கு சபை மிகப் பெரியதாக வளர்ந்தது. எனவே சபையை ஒழுங்கமைப்பதற்காக பிரான்சிசு முயற்சிகள் மேற்கொண்டார். சபையின் ஒழுங்குகள் திருத்தந்தையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், பிரான்சிசு நிர்வாகப் பொறுப்பில் அதிகம் ஈடுபடவில்லை.
.
பிரான்சிசு ஒரு தொழுநோயாளரை அரவணைத்த நிகழ்ச்சி
உலகப் போக்கை விடுத்து, ஆன்மிக வாழ்வை மேற்கொள்ளத் துணிந்த பிரான்சிசுவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பல வரலாற்று ஆசிரியர்களும் குறிப்பிடுகின்றனர். அது பிரான்சிசு ஏழைகளிடமும் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டோர்களிடமும் காட்டிய அன்பை எடுத்துரைக்கிறது.
ஒருநாள் பிரான்சிசு அசிசி பள்ளத்தாக்கில் குதிரை மீது பயணமாகச் சென்றுகொண்டிருந்தார். அப்போது உடலெல்லாம் புண் நிறைந்த ஒரு தொழுநோயாளியைத் தொலையில் கண்டார். செல்வத்தில் பிறந்து வீர சாகசங்கள் புரிவதில் ஆர்வம் கொண்டு வளர்ந்த பிரான்சிசுக்கு தொழுநோய் என்றாலே வெறுப்பு. அருவருக்கத்தக்க அந்த நோய் யாரைத் தொற்றியதோ அவர்களை அணுகவே அவருக்குப் பிடிக்காமல் இருந்தது. தமக்கு இயல்பாக இருந்த உணர்வுகளை அடக்கிக் கொண்டு, பிரான்சிசு குதிரையிலிருந்து வேகமாக இறங்கினார். ஓடிச் சென்று அந்தத் தொழுநோயாளியைக் கட்டிப் பிடித்து அரவணைத்து முத்தமிட்டார்.
அருவருக்கத்தக்க நோயால் பீடிக்கப்பட்டாலும் மனிதர்கள் எல்லாரும் கடவுளின் சாயலாக உருவாக்கப்பட்டவர்களே என்னும் ஆழ்ந்த உண்மையை பிரான்சிசு உணர்ந்தார். அதன் பின், அசிசி நகரின் எல்லைக்கு வெளியே அமைந்திருந்த தொழுநோயாளர் இல்லத்திற்குச் சென்று, அவர்களுக்குப் பணிபுரிவதில் அவர் மகிழ்ச்சி கண்டார். சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட மக்களில் துன்புற்ற இயேசுவின் சாயலை அவர் கண்டார்.
உரோமை நகருக்குத் திருப்பயணமாகச் சென்றபோது, அங்கு கோவில் படிகளில் அமர்ந்து ஏழைகளுக்காகப் பிச்சைகேட்டார். ஏழைகளோடு ஏழையாகத் தம்மையே இணைத்துக்கொண்டார்.
அசிசியின் ஏழை மனிதர் பிரான்சிசு
கடவுள் பணிக்குத் தம்மை அர்ப்பணித்து, இயேசுவை முழுமையாகப் பின்பற்றத் துணிந்துவிட்ட பிரான்சிசு தம் நகராகிய அசிசியின் மலைப்பகுதிகளில் நடந்து, இறைவனின் புகழைப் பாடிச் சென்றார். ஒருநாள் வழிப்பறித் திருடர்கள் சிலர் அவரை நிறுத்தி, "நீ யார்?" என்று கேட்டதற்கு பிரான்சிசு பதில்மொழியாக, "நான் மாபெரும் அரசரின் தூதுவன்" என்றுரைத்தார். அவர்கள் அவரை இகழ்ச்சியோடு நோக்கி, அவரிடமிருந்ததைப் பிடுங்கிக்கொண்டு, அவரை அருகிலிருந்த குழியில் தள்ளிவிட்டுச் சென்றனர். அரைநிர்வாணமாகக் குளிரில் வாடிய பிரான்சிசு அண்மையிலிருந்த ஒரு துறவியர் இல்லத்தை அடைந்து, அங்கு கொஞ்சநாள் அடுக்களை வேலை செய்தார். அங்கிருந்து கூபியோ (Gubbio) என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய நண்பர்கள் சிலர் அவர்மீது இரங்கி, அவருக்கு ஒரு மேலாடை, கச்சை, ஊன்றுகோல் ஆகியவற்றைக் கொடுத்தனர்.
பின்னர் பிரான்சிசு அசிசி நகருக்குத் திரும்பினார். தெருவெல்லாம் நடந்துசென்று, மக்களிடம் புனித தமியானோ கோவிலைச் செப்பனிடுவதற்குக் கற்கள் தருமாறு வேண்டினார். கிடைத்த கற்களைச் சுமந்து, கோவிலுக்குக் கொண்டுபோய், தம் கைகளாலேயே அதைச் செப்பனிட்டார். அதுபோலவே, கைவிடப்பட்ட நிலையில் கிடந்த வேறு இரண்டு கோவில்களையும் அவர் செப்பனிட்டார். அவை புனித பேதுரு கோவிலும், வானதூதர்களின் அன்னை மரியா (Saint Mary of the Angels) கோவிலும் ஆகும். மரியா கோவிலுக்குப் "போர்சியுங்குலா" (Portiuncula = "சிறுநிலம்") என்னும் பெயரும் உண்டு.
அக்காலத்தில் பிரான்சிசு பிறரன்புப் பணியிலும், குறிப்பாகத் தொழுநோயாளருக்குப் பணிபுரிவதிலும் ஈடுபட்டார். வானதூதர்களின் அன்னை மரியா கோவிலின் அருகே ஒரு சிறு குடிசை அமைத்து அதில் தங்கினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக