மகா பரிசுத்த தேவநற்கருணையின் பாப்பரசர் அர்ச். பத்தாம் பத்திநாதர் திருநாள்
ஜோசப் சார்த்தோ (கியுசெப்பே சார்த்தோ-இத்தாலிய பெயர்) 1836ம் வருடம் இத்தாலியில் டிரவிசோ மேற்றிராசனத்திலுள்ள ரியஸெ என்ற இடத்தில் பிறந்தார். ஒரு கிராமத்தின் தபால்காரருடைய மகனாயிருந்த இவருடைய குழந்தைப் பருவம் வறுமையிலும் ஏழ்மையிலும் கழிந்தது. ஏழைகளாயிருப்பினும், இவருடைய பெற்றோர்கள், இவரை பக்தியில் வளர்த்தனர்; இவருக்கு சிறந்த கல்வியை அளிப்பதில் கருத்தாயிருநதனர். ஜோசப் ஒவ்வொரு நாளும் ஆறு கி.மி.தூரம் நடந்து சென்று பள்ளிக்கூடத்தில் கல்வி கற்று வந்தார். இவர், சிறுவயதிலேயே, குருவானவராக வேண்டும் என்கிற ஆவல் கொண்டிருந்தார். அதன்படி, 1858ம் வருடம் செப்டம்பர் 18ம் தேதியன்றுஃ காஸ்டல்ஃப்ராங்கோ கதீட்ரலில் குருப்பட்டம் பெற்றார்; 1867ம் வருடம், சால்ஸானோ என்ற மிகப்பெரிய பங்கினுடைய பங்குக் குருவானார். அச்சமயம், ஒரு கொள்ளை நோய் வந்தது; அதன் காரணமாக அந்த பங்கில் எல்லா இடங்களிலும், ஏறக்குறைய எப்போதும், சங்.ஜோசப் சார்த்தோ சுவாமியார் இருப்பதைக் கண்டு பங்கு மக்கள் ஆச்சரியப்பட்டு அவரைப் பாராட்டிக் கொண்டாடினார்: அவர் வியாதியஸ்தர்களுடைய பாவசங்கீர்த்தனத்தைக் கேட்டார்; இறந்தவர்களை அடக்கம் செய்தார்; சக பங்கு மக்களுக்கு ஞான உற்சாகத்தை அளித்துத் தைரியப்படுத்தினார்; எப்போதும் மகிழ்ச்சியுடன் தன் குருத்துவக் கடமைகளை நிறைவேற்றினார்; இரவில் நான்கு மணி நேரம் மட்டுமே உறக்கத்திற்காக செலவிட்டார். எளிமையானதும், காண்பவர் இருதயங்களில் தேவசிநேகத்தைத் தூண்டுவதுமான பரிசுத்த ஜீவியம் ஜீவித்தார்; விசுவாசிகளுக்கு மிகுந்த நன்மையை அளிப்பதிலும், அயராமல் ஆன்ம ஈடேற்ற அலுவலிலும், எப்போதும் ஈடுபட்டிருந்தார்.
1875ம் வருடம், டிரெவிஸெ கதீட்ரலின் அதிபராக இவர் நியமிக்கப்பட்டார்; 1884ம் வருடம், மாந்துவா நகர மேற்றிராணியாராக அபிஷேகம் செய்யப்பட்டார். 1891ம் வருடம் வெனிஸ் நகரத்தின் பிதாப்பிதாவாக கர்தினாலாக ஏற்படுத்தப்பட்டார். 1903ம் வருடம், 13ம் சிங்கராயர் பாப்பரசர் மரித்தபோது, ஆகஸ்டு 4ம் தேதியன்று,இவர் பாப்பரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; சமீப காலத்தில், இதற்கு முந்தியிருந்த 9ம் பத்திநாதர் மற்றும் அவருக்கு முந்தியிருந்தவர்களும், திருச்சபைக்காக அதிகம் உழைத்தவர்களும் துன்புற்றவர்களுமான 7ம் மற்றும் 8ம் பத்திநாதர் பாப்பரசர்களுக்கும் தோத்திரமாக தனது பெயரை 10ம் பத்திநாதர் என்று வைத்துக் கொண்டார். மேலும் இப்பாப்பரசர்கள், அதிலும் குறிப்பாக 9ம் பத்திநாதர் பாப்பரசர், வேத இயல் விடுதலைவாதிகளுடைய தப்பறைகளுக்கு எதிராகப் போராடுவதிலும், சகல உலக அதிகாரங்களுக்கும் மேலான பாப்பரசருடைய தலைமைப் பொறுப்பின் அதிகாரத்தின் மேன்மையான உச்ச உயர்நிலைமையை நிலைநாட்டி, ஸ்தாபிப்பதிலும், அயராமல் ஈடுபட்டு உழைத்தார்.
1903ம் வருடம், ஆகஸ்டு 9ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று, இவர் பாப்பரசராக முடிசூட்டப்பட்டார். பாப்பரசராக பொறுப்பேற்றதும், திருச்சபைக்குள்ளிருந்தே திருச்சபையை அழிக்கும்படியாக ஈடுபட்டிருந்த கெட்ட குருக்களை திருத்தும்படியாகவும், திருச்சபை அதிகாரிகள் மத்தியிலிருந்த களையெடுப்பதற்காகவும், சாட்டையை எடுக்கத் துவக்கினார்.
அர்ச்.பத்தாம் பத்திநாதர் பாப்பரசர், நவீன தப்பறைக்கு சகல பதிதத்தப்பறைகளின் ஒட்டுமொத்தக் கூட்டுக்கலவை! என்கிற முத்திரை குத்தினார். 1907ம் வருடம், இவர் எழுதிய “பாச்செந்தி தோமினிச்சி கிரெகிஸ்” என்கிற சுற்று மடல் நிரூபத்தில், நவீன தப்பறையை மிகக் கடுமையாகக் கண்டனம் செய்தார்; நவீனத் தப்பறையின் கறைபடிந்தவர்களாகவோ, அல்லது அத்தப்பறைக்கு நல்ல தோற்றத்தை அளிப்பவர்களோ, யாராயிருந்தாலும், சரித்திரத்திலும், தொல்பொருள் ஆராய்ச்சியிலும், பரிசுத்த வேதாகம விளக்கவுரையிலும் புதுமையை நேசிக்கிறவர்களாயிருந்தாலும், அவர்கள் எல்லோரும் கட்டாயமாக, நிர்வாகத்திலிருந்தும் கற்பிக்கும் ஆசிரியப் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட வேண்டும் என்கிற கட்டளையைப் பிறப்பித்தார்.
சமூக ஆர்வலர்களாயிருந்தாலும், புராட்டஸ்டன்டு அல்லது மற்ற பதித அல்லது அஞ்ஞான மதத்தினர் யாராயிருந்தாலும் அவர்களையெல்லாம் பார்ப்பதற்கு அர்ச்.பத்தாம் பத்திநாதர் ஒருபோதும் நேரத்தை ஒதுக்கியவரல்ல! 1910ம் வருடம், அமெரிக்க ஜனாதிபதியான ரூஸ்வெல்ட்டைச் சந்திப்பதற்கு மறுப்பு தெரிவித்தார். ரூஸ்வெல்ட் உரோமிலிருந்த மெத்தடிஸ்டு பதித தேவாலயத்திற்குச் செல்வதை இரத்து செய்தபிறகு மட்டுமே, இவர் தம்மைச் சந்திப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதிக்கு அனுமதியளித்தார்.
அர்ச்.பத்தாம் பத்திநாதர் பாப்பரசர் 1914ம் வருடம், ஆகஸ்டு 20ம் தேதியன்று மரித்தார். முதல் உலகப்போர் துவங்கியதைப் பற்றியும், திருச்சபைக்குள் ஊடுருவிய எதிரிகள் பற்றியும் ஏற்பட்ட மாபெரும் கவலையாலேயே இந்த நல்ல பரிசுத்த பாப்பரசருக்கு வியாதி ஏற்பட்டு 78வது வயதில்,மரித்தார். இவருடைய ஜீவிய சரித்திரத்தை, முழுமையாக பாரம்பரிய கத்தோலிக்கர்களாகிய நாம் எல்லோரும் கட்டாயமாக படிக்க வேண்டும். 12ம் பத்திநாதர் பாப்பரசர் 1954ம் வருடம், மே 29ம் தேதியன்று, இவருக்கு அர்ச்சிஷ்டப்பட்டம் அளித்தார்.
அர்ச்.பத்தாம் பத்திநாதர் பாப்பரசர் அநேக தீர்க்கதரிசன காட்சிகள் கண்டார். ஒரு சமயம், பிரான்சிஸ்கன் துறவியரைச் சந்தித்தபோது, அர்ச்.பத்தாம் பத்திநாதர் பாப்பரசர், திடீரென்று, பரவசநிலைக்குச் சென்றார்; சிறிது நேரம் கழித்து, அந்த பாப்பரசர் நானாக இருக்குமோஃ அல்லது, எனக்குப் பின் வருபவரா? இதில் நிச்சயமாயிருப்பது என்னவெனில், பாப்பரசர், ஒருநாள் வத்திக்கானை விட்டு வெளியேறுவார்; அச்சமயம், இறந்துபோன குருக்களின் சடலங்களை அவர் கடந்து செல்ல வேண்டியிருக்கும் என்பது தான்! என்று கூறினார்.
🌹மகா பரிசுத்த தேவநற்கருணையின் பாப்பரசரான அர்ச்.பத்தாம் பத்திநாதரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்! நல்ல பாப்பரசரைத் திருச்சபைக்குப் பெற்றுத் தாரும்!🌹
🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹