1907-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உரோமையில் பாப்பரசரின் ஆட்சிமன்றம் (Roman Curia) மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. விரைவில் வந்துவிடும் என்று எதிர்பார்த்த “நவீனர்களுக்கு எதிரான சுற்றுமடல்” பற்றிய வதந்தியே அதற்குக் காரணம்! அதில் யார் யார் குறிப்பிடப்படுவார்களோ? அதனால் வரப்போகும் விளைவுகள் எவையோ? என்னென்ன மாற்றங்கள் நிகழப்போகின்றனவோ? என்ற கேள்விகளால் ஆட்சி மன்ற தந்தையர்களிடையே ஒருவிதமான எதிர்பார்ப்பு தோன்றியது! ஏனெனில் சில மாதங்களுக்கு முன்புதான், அதாவது 1907, ஜுலை 3-ம் தேதி “Lamentabili Sane Exitu” வெளிவந்த – தப்பறைகளின் தொகுப்பு” என்ற பாப்பரசரின் தன்னிச்சை மடலின் சாரம் அப்படிப்பட்டது. ஆம்! அதில் திருச்சபையில் தவறாகப் போதிக்கப்பட்டு வந்த தப்பறைகள் கண்டிக்கப்பட்டிருந்தன. (அம்மடலில் 64 கண்டிக்கப்பட்ட போதனைகளின் தொகுப்பு வெளியிடப்பட்டது. 1-24 வரை வேதாகமத்தைக் குறித்தவை: 25-26 விசுவாசத்தின் தன்மை குறித்தவை: 27-38 நமதாண்டவர் சம்பந்தமானவை: 39-52 தேவதிரவிய அநுமானத்தைக் குறித்தவை: 52-64 வரையிலான போதனைகள் திருச்சபையின் செயல்பாடு மற்றும் அமைப்புக் குறித்தவை.
இந்த தன்னிச்சை மடலின் தாக்கம் பெரியதாக இருந்தது. அதன் விளக்கவுரையான பாப்புவின் சுற்றுமடல் வரவிருக்கிறது என்ற எண்ணமே நவீனர்களை கலக்கியது. ஏனெனில் அப்போதைய பாப்பரசரின் குணம் அப்படிப்பட்டது! நவீனத்திற்கு எதிரான தீர்க்கமான எண்ணம் கொண்டவர். அதே சமயம் அர்ச்சிஷ்டவர் என்ற மனப்பான்மை திருச்சபையின் அதிகாரிகளின் மத்தியில் நிலவி வந்திருந்தது. யார் அந்த பாப்பானவர்? அவரே அர்ச். பத்தாம் பத்திநாதர்! “நவீனத்திற்கு சம்மட்டி” என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட அவர் தாம் அறிவித்தது போலவே 1907, செப்டம்பர் 8-ம் நாளன்று “Pascendi Dominic Gregis” என்ற சுற்றுமடலை வெளியிட்டார். உரோமை பாப்புவின் ஆட்சிமன்றத்தினரின் எதிர்ப்பார்ப்பைப் போலவே அது நவீனர்களுக்கு பேரிடியாக வந்து இறங்கியது! திருச்சபையின் அன்பர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக விளங்கியது!
பாப்பரசர் வெளியிட்ட வரலாற்று சிறப்பு மிக்க அந்த சுற்றுமடல் அக்காலக்கட்டத்தில் மிக நீளமானதாகக் கருதப்பட்டது. (2-ம் அருள் சின்னப்பரின் குருத்துவத்தைப் பற்றிய Pastores Dabo Vobis – இதனைவிட இரண்டரை மடங்கு நீளமானதாகவும், நெடுந்தொடர்களைக் கொண்டதாகவும் உள்ளது. ஆர்.)
பாப்பரசர் அர்ச். பத்தாம் பத்திநாதர் எதிரிகளின் கைகளிலிருந்து திருச்சபையைக் காப்பாற்ற இந்த சுற்று மடலை எழுதினார். இதனை எழுத அவருக்கு கர்தினால் Billot. அதிமேற்றிராணியார் Umberto Benigni மற்றும் சங். Lemius என்ற தலைசிறந்த வேத அறிஞர்கள் உதவினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே குறிப்பிட்டது போல இம்மடல் திருச்சபையை அழிப்பதற்காக உருவான “நவீனம்” என்ற தப்பறையை எதிர்த்துப் போராடவும், விசுவாசிகளுக்கு அதன் உண்மையான நிறத்தை உரித்துக்காட்ட வேண்டும் என்ற நோக்குடன் இயற்றப்பட்ட இவ்வருமையான ‘இலக்கியம்’ உண்மையில் ஒரு இமாலய சாதனையாகும். எங்கும் பரந்து வியாபித்துக் கிடந்த நவீனர்களின் கருத்துச் சிதறல்களை ஒன்றுக்கூட்டி, அதன் கொடூரத்தை இனம் காட்டிய இப்பெரும் முயற்சியினைக் கண்டு வியந்தவர்களில் நவீனர்களும் உண்டு. தங்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வைக்கும் இந்த நிருபத்தை இவர்கள் வெறுத்தாலும்… தங்களது (நவீனர்களின்) குற்றங்களை வெகு நேர்த்தியாய் கண்டுபிடித்த பாப்பரசரின் சாதுரியத்தைக் கண்டு வியந்தனர்!
சுற்றுமடலின் நேர்த்தி
பாப்பரசர் அர்ச். 10-ம் பத்திநாதருடைய இந்த மடலின் அழகை, அதன் நேர்த்தியை, நவீனத்தை அது சாடி தோலுரிக்கும் சாமர்த்தியத்தை சில எடுத்துக்காட்டுகள் மூலம் நாம் காண்போம்.
பாப்பரசர் தன்னுடைய மேய்ப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்ட நமதாண்டவரின் ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய விசேஷக் கடமையால், அவற்றின் (எதிரிகளின்) தந்திரங்களைக் கடுமையாகக் கண்டிக்கிறார். இத்தகையோர்களைப் பற்றிக் கூறும் போது, “..தங்களை திருச்சபையின் சீர்திருத்தவாதிகள் என்று எவ்விதமான தன்னடக்கமுமின்றி பறைசாற்றுபவர்கள் உண்மையிலே திருச்சபையின் அழிவுக்கு வழிவகுப்பவர்களே..” என்று சாடுகிறார். நவீனத்தை, “இது புதுவித தப்பறை – நவீனர்களின் இயக்கம்” என்றெல்லாம் தெளிவாகக் குறித்துக் காட்டுகிறார்.
நவீனம் மற்ற தப்பறைகளைப் போலன்று: மற்ற தப்பறைகள் வாசித்ததும் கண்களுக்குப் புலப்படக்கூடியவை. ஆனால் நவீனம் அப்படியல்ல… முதல் பார்வைக்கு கத்தோலிக்க நிறம் காட்டி, அதையே கூர்ந்து ஆய்வு செய்தால் மற்றொரு நிறம் (பொருள் தரும்) காட்டும் வித்தியாசமான தன்மை கொண்டது. அதனுடைய நச்சுத்தன்மையைக் குறித்து பாப்பரசர்: “…இதைவிட திறமையான முறையை யாரும் கையாள முடியாது. இவர்களை விட தந்திரசாலிகள் யாரும் இருக்க முடியாது, ஆயிரக்கணக்கான தந்திர வேலைகளைச் செய்வதில் இவர்கள் வல்லவர்கள். ஏனெனில் ஒரே சமயத்தில் இவர்கள் கத்தோலிக்கர்களாகவும், பகுத்தறிவாளர்களாகவும் தங்களைக் காட்டிக் கொள்ளக்கூடியவர்கள். இப்படித்தான் சற்று கவனமில்லாத ஆன்மாக்களை தப்பறைக்கு இழுத்துச் செல்கிறார்கள்…” (எண்.3) என்று குறிப்பிட்டு நவீனர்களின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகிறார்.
நவீனம் ஒரு புதுவித தப்பறை
பாப்பரசர் அர்ச். பத்தாம் பத்திநாதர் தமது மடலில் நவீனத்தை இதுவரை இல்லாத புதுவித தப்பறை (New Heresy) என்று அழைக்கிறார். அதன் செயல்பாட்டை விளக்க இரண்டு ஒப்புவமைகளை (Analogies) தருகிறார். இவைகளின் மூலம் நவீனர்களின் தந்திரமான செயல்பாட்டை விவரிக்கிறார்.
முதல் ஒப்புவமை – பாதாள சாக்கடை :
அது நம் கண்களுக்குப் புலப்படாது. பூமிக்கு அடியிலே சென்று கொண்டிருக்கும். அதன் போக்கு, அதன் தரம் சாதாரண மக்களுக்குத் தெரியாது. ஆனால் அவை, அதில் இறங்கி வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே தெரியக்கூடியதாக இருக்கின்றன. அது மட்டுமல்லாமல், அது மற்ற எல்லா கழிவு நீரும் வந்து கலக்கும் இடமாகவும் இருக்கிறது. அதுபோல நவீனம் எல்லா தப்பறைகளையும் தன்னகத்தே கொண்டதாக விளங்குகிறது. இதற்காகத்தான் அர்ச். பாப்பானவர் அதனை (நவீனத்தை) “எல்லா தப்பறைகளின் தொகுப்பு” (Synthesis of all heresies) என்று அழைக்கிறார்.